பாதுகாப்பு அமைச்சகம்

பல்வேறு தளங்கள் சாதனம் வகையில் ரூ.38,900 கோடி மதிப்புக்கு ராணுவ வசதிகளை அதிகரிக்க டி.ஏ.சி. ஒப்புதல்

प्रविष्टि तिथि: 02 JUL 2020 5:13PM by PIB Chennai

நமது எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினரின் தற்காப்பை பலப்படுத்தும் தேவை மற்றும் இப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், தற்சார்பு இந்தியா என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அழைப்புக்கு ஏற்பவும், இந்திய ராணுவப் படையினருக்குத் தேவைப்படும் பல்வேறு தளங்கள் மற்றும் சாதனப் பொருள்கள் வாங்குவதற்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற ராணுவத் தளவாடம் வாங்குதல் கவுன்சில் (Defence Acquisition Council - DAC) கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சுமார் ரூ.38,900 கோடி மதிப்பிலான சாதனங்கள் வாங்குவதற்கு இந்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் கவனம் செலுத்தும் வகையில், இந்தியத் தொழிற்சாலைகளிடம் இருந்து ரூ.31,130 கோடி அளவுக்கு சாதனங்களை வாங்குவதற்கான ஒப்புதலும் இதில் அடங்கும். பல்வேறு குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களை முக்கிய நிலையிலான சேவை வழங்குநர்களாகக் கொண்டு இந்தியப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் தொழில் துறையினரை ஈடுபடுத்தி இந்தச் சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் சில திட்டங்களில் உள்நாட்டுப் பொருள்களின் பங்களிப்பு, திட்டச்  செலவில் 80 சதவீதம் வரை இருக்கும். பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் உள்நாட்டுத் தொழில் துறைக்கு அளிக்கப்பட்ட தொழில்நுட்பப் பரிமாற்றம் காரணமாக இவற்றில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பினாகா தளவாடங்கள், பி.எம்.பி. தளவாடத் தரநிலை மேம்பாடுகள் மற்றும் இந்திய ராணுவத்துக்கான மென்பொருள் வரையறையுள்ள ரேடியோக்கள், தரையில் நீண்டதொலைவு சென்று தாக்கும் ஏவுகணை செலுத்தும் சாதனங்கள், இந்தியக் கடற்படை மற்றும் விமானப் படைக்கான அஸ்ட்ரா ஏவுகணைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இவற்றுக்கான வடிவமைப்பு மற்றும் தயாரிப்புச் செலவு ரூ.20,400 கோடி அளவுக்கு இருக்கும்.

     புதிய அல்லது கூடுதல் ஏவுகணை வசதிகளுக்கான சாதனங்களை வாங்குவது என்பது, முப்படைகளின் தாக்கும் திறனை அதிகரிக்கச் செய்வதாக இருக்கும். பினாகா ஏவுகணை வசதிகளைப் பெறுவதன் மூலம், ஏற்கெனவே உள்ள ரெஜிமென்ட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய உதவும். தரையில் நீண்டதொலைவு சென்று தாக்கும் ஏவுகணை செலுத்தும் சாதனங்கள் 1000 கிலோ மீட்டர் வரையிலான இலக்குகளைத் தாக்கக் கூடியதாக இருக்கும். இது கடற்படை மற்றும் விமானப்படையின் தாக்குதல் திறனை பலப்படுத்துவதாக இருக்கும். அதேபோல பார்வைத் தொலைவுக்கும் அப்பால் உள்ள இலக்குகளைக் குறி வைக்கும் அஸ்ட்ரா ஏவுகணைகள், படை பலத்தை அதிகரிப்பதாக இருப்பதுடன், கடற்படை மற்றும் விமானப் படையின் தாக்கும் திறனை அதிகரிப்பதாகவும் இருக்கும்.

மேலும், தாக்குதல் விமான வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய விமானப் படை நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இப்போதுள்ள மிக் 29 ரகத்தைச் சேர்ந்த 59 விமானங்களின் வசதிகளை மேம்படுத்துவதுடன் மிக் 29 ரகத்தில் 21 புதிய விமானங்களை வாங்கவும், சூ-30 எம்.கே.ஐ. ரகத்தில் 12 விமானங்கள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து மிக் 29 ரக விமானங்கள் வாங்குதல் மற்றும் தர நிலையை மேம்படுத்துதலுக்கு ரூ.7.414 கோடி செலவாகும். இந்துஸ்தான் ஏரோநாடிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து சூ-30 எம்.கே.ஐ. விமானங்களை வாங்குவதற்கு ரூ.10,730 கோடி செலவாகும்.

*******


(रिलीज़ आईडी: 1636082) आगंतुक पटल : 343
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi