உள்துறை அமைச்சகம்

நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் உறுதிப்பாடு மற்றும் பயங்கரவாதத்தைத் துளியும் சகிக்க முடியாது என்ற மோடி அரசின் கொள்கையை நிலைநிறுத்தும் வகையில் UAPA சட்டத்தின் கீழ் 9 பேரை அறிவிக்கப்பட்ட தீவிரவாதிகள் என உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அறிவித்தார்

Posted On: 01 JUL 2020 6:28PM by PIB Chennai

வலிமையான, இரும்பு போன்ற உறுதி கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, 2019 ஆகஸ்ட் மாதம் சட்டவிரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் 1967இல் திருத்தம் செய்தது. தனிநபர்களைத் தீவிரவாதிகளாக அறிவிக்கும் விதிமுறை அப்போது சேர்க்கப்பட்டது. அந்தத் திருத்தம் செய்வதற்கு முன்னதாக, அமைப்புகளை மட்டுமே தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கை செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது.

சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் 1967இல் திருத்தம் செய்வதற்கான மசோதா மீது கடந்த ஆண்டு நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, தீவிரவாதம் என்ற பிரச்சினைக்கு எதிராக உறுதியாகப் போரிடுவதற்கு மோடியின் அரசு உறுதி பூண்டிருப்பதாகத் தெரிவித்தார். இதற்காக நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை அவர் வலியுறுத்திக் கூறினார். இந்தத் திருத்த விதிகளைப் பயன்படுத்தி, 2019 செப்டம்பர் மாதத்தில், நான்கு தனி நபர்களை தீவிரவாதிகள் என மத்திய அரசு அறிவித்தது. அதாவது மௌலானா மசூத் ஆசார், ஹபீஸ் சய்யீத், ஜாகி-உர்-ரஹ்மான் லாக்வி மற்றும் தாவூத் இப்ரஹிம் ஆகியோர் தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்டனர்.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் உறுதிப்பாடு மற்றும் பயங்கரவாதத்தை துளியும் சகிக்க முடியாது என்ற மோடி அரசின் கொள்கையை  நிலைநிறுத்தும் வகையில், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா இன்று கீழ்க்கண்ட 9 தனிநபர்களை  சட்டவிரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் 1967 (2019இல் திருத்தம் செய்தது)-இன் கீழ் தீவிரவாதிகள் என அறிவித்து, அந்தச் சட்டத்தின் நான்காவது அட்டவணையில் அவர்களின் பெயர்களைச் சேர்த்தார். அவர்களின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன: -

1. வாத்வா சிங் பாப்பர்: ``பாப்பர் கல்சா இன்டர்நேஷனல்'' என்ற பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பின் தலைவர்.

2. லக்பீர் சிங்: ``சர்வதேச சீக்கிய இளைஞர் பெடரேஷன்'' என்ற பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பின் தலைவர்.

3. ரஞ்சித் சிங்: ``காலிஸ்தான் ஜிந்தாபாத் படை'' என்ற பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பின் தலைவர்.

4. பரம்ஜித் சிங்: ``காலிஸ்தான் கமாண்டோ படை'' என்ற பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பின் தலைவர்.

5. பூபிந்தர் சிங் பிண்டா: ``காலிஸ்தான் ஜிந்தாபாத் படை'' என்ற ஜெர்மனியைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பில் முக்கிய உறுப்பினர்.

6. குர்மித் சிங் பக்கா: ``காலிஸ்தான் ஜிந்தாபாத் படை'' என்ற ஜெர்மனியைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பில் முக்கிய உறுப்பினர்.

7. குர்பட்வந்த் சிங் பன்னுன்: ``நீதிக்கான சீக்கியர்'' என்ற அமெரிக்காவைச் சேர்ந்த சட்டவிரோத அமைப்பின் முக்கிய உறுப்பினர்.

8. ஹர்தீப் சிங் நிஜ்ஜார்: ``காலிஸ்தான் டைகர் படை'' என்ற கனடாவை சேர்ந்த அமைப்பின் தலைவர்.

9. பரம்ஜித் சிங்: ``பாப்பர் கல்சா இன்டர்நேஷனல்'' என்ற பிரிட்டனைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பின் தலைவர்.

     இந்தத் தனிநபர்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டும், வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய தேச விரோத செயல்பாடுகள் மூலமாகவும், காலிஸ்தான் இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை அளித்தல் மற்றும் பங்கேற்பின் மூலமாகவும், பஞ்சாபில் தீவிரவாதத்தை புதுப்பித்து, நாட்டை சீர்குலைக்கும் வகையிலான சதி நோக்கத்துடன் கூடிய தொடர்ச்சியான முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.



(Release ID: 1635833) Visitor Counter : 503