வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

நகர்ப்புற லட்சிய நோக்குத் திட்டங்களின் 5வது ஆண்டு நிறைவு

Posted On: 25 JUN 2020 4:50PM by PIB Chennai

``உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் விரிவான திட்டமிடல் உடன் நகரமயமாக்கல் திட்டங்களை மேற்கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. நமது சிறப்பை உயர்த்திக் காட்டும் கொடியைப் போன்ற திட்டங்களின் சாதனைகளில், புதிய இந்தியா என்பதற்கான நமது பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனைகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. 2020 மே 12 ஆம் தேதி விவசாயிகள், குடிசைத் தொழில்கள், வீட்டுத்தொழில், சிறு தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களின் நலனில் கவனம் செலுத்தும் வகையிலான தற்சார்பு இந்தியா திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்தத் துறைகள் முடக்கநிலை அமல் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கருத்தில் கொண்டு தற்சார்பு இந்தியா திட்டத்தைப் பிரதமர் தொடங்கினார்'' என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் (பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் (நகர்ப்புறம்) (PMAY-U), சீர்மிகு நகரங்கள் லட்சிய நோக்குத் திட்டம் (SCM) மற்றும் நகர்ப்புற நிலை மாற்றம் மற்றும் புதுப்பித்தலுக்கான அடல் லட்சிய நோக்குத் திட்டம் (AMRUT) திட்டங்களின் 5வது ஆண்டு நிறைவை ஒட்டி நடந்த இணையவழி நிகழ்ச்சியில் பேசியபோது அமைச்சர் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் செயலாளர் திரு. துர்கா சங்கர் மிஸ்ராவும் கலந்து கொண்டார். இதுவரை நிகழ்த்தியுள்ள சாதனைகளைக் கொண்டாடவும், நகர்ப்புற லட்சிய நோக்குத் திட்டங்களின் அமலாக்கத்திற்கு உத்வேகம் ஊட்டவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. AMRUT, SCM, PMAY-U திட்டங்களின் இயக்குநர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள், மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகர மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர்கள், மாநில திட்ட இயக்குநர்கள், நகராட்சி ஆணையாளர்கள், சீர்மிகு நகரத் திட்டங்களின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரிகள், பங்காளர் ஏஜென்சிகள் / இருதரப்பு / பன்முகச் செயல்பாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் இதில் தொடர்புடைய முக்கியஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

2015 ஜூன் 25 ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைத்த அம்ருத் (AMRUT) திட்டம் வெற்றிகரமாக 5 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது.

  • மாநில ஆண்டு செயல் திட்டங்களின் (SAAP) கீழ் ரூ.77.640 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, ரூ.75,829 கோடி மதிப்பிலான பணிகள் இதுவரை தொடங்கப்பட்டுள்ளன. ரூ.10,654 கோடி மதிப்பிலான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ரூ.65,175 கோடி மதிப்பிலான பணிகள் பல்வேறு கட்டங்களில் முன்னேற்றப் பாதையில் உள்ளன.
  • குடிநீர் வழங்கும் திட்டங்களுக்கு ரூ.39,011 கோடியும், கழிவுநீர் அகற்றல் மற்றும் தடுப்புச் சுவர் திட்டங்களுக்கு ரூ.32,546 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 1.39 கோடி வீடுகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கும், 1.45 கோடி வீடுகளுக்கு கழிவுநீர் அகற்றல் / தடுப்புச் சுவர் வசதிகள் செய்து தரவும் தேசிய அளவில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • 79 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்புகள் அளிக்கப் பட்டுள்ளன. குடிசைப் பகுதிகள் மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினர் வாழும் பகுதிகளில் 45 லட்சம் கழிவுநீர் அகற்றும் இணைப்புகள் தரப்பட்டுள்ளன.
  • சிறந்த நிர்வாகம் மற்றும் குடிமக்களுக்கு சேவை கிடைத்தலில், நகர அளவிலான நிறுவனங்களின் திறன்களைப் பலப்படுத்தும் நோக்கில் 54 முக்கிய அம்சங்களைக் கொண்ட 11 சீர்திருத்தங்களை நகரங்களில் மேற்கொள்ள இந்த லட்சிய நோக்குத் திட்டம் உதவிகரமாக இருந்துள்ளது.
  • இந்திய நகரங்களில் மின்சார சிக்கனத்தை மேம்படுத்தும் வகையில், 76 லட்சம் தெருவிளக்குகளை மாற்றி, எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
  • கட்டடங்களுக்கான கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான ஒட்டுமொத்த கால அவகாசத்தைக் குறைக்கும் வகையிலும், தடங்கல்கள் இல்லாமல் இந்த நடைமுறை அமையவும் உதவும் வகையில் டிஜிட்டல் நுட்பத்தின் அடிப்படையிலான சீரமைப்பாக கட்டடம் கட்டுவதற்கு இணைய வழியில் அனுமதி பெறும் திட்டம் (OBPS) அமல் செய்யப்பட்டது. 444 அம்ருத் நகரங்கள் உள்ளிட்ட, 2,057 நகரங்களில் இந்த சீர்திருத்தம் அமல் செய்யப்பட்டதை அடுத்து, தொழில் செய்யும் எளிமை நிலை அறிக்கை (DBR) 2020-இல் உலக அளவில் இந்தியா 27வது இடத்துக்கு முன்னேறியது. 2018இல் 181வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம் அமல் செய்யப்பட்ட பிறகு, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை வெளிக்காட்டுவதாக இது உள்ளது.
  • 500 லட்சிய நோக்கு நகரங்களின் பட்டியலில் இருந்து 469 நகரங்களில் கிரெடிட் ரேட்டிங் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. அதில் முதலீட்டுக்கு உரிய கிரேடு தகுதியை 163 நகரங்கள் பெற்றுள்ளன. 2019-20 காலகட்டத்தில், சேவை அளித்தல் மற்றும் நகர அளவிலான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலான முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ள முனிசிபல் பங்குப் பத்திரங்கள் மூலம் 8 நகரங்கள் ரூ.3,390 கோடி நிதி திரட்டியுள்ளன. சீர்திருத்த நடவடிக்கைகள் அமலாக்கத்துக்கு 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு ஊக்கத் தொகையாக இந்த அமைச்சகம் ரூ.1,839 கோடி அளித்துள்ளது. இதில் முனிசிபல் பங்கு பத்திரத்துக்கான ரூ.181 கோடியும் அடங்கும். இந்த லட்சிய நோக்குத் திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் செயல்நிலை அலுவலர்களைப் பயிற்றுவிப்பது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதை மிஞ்சி 53 ஆயிரம் செயல்நிலை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
  • இதுவரையில் ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்கப்பட்ட சீர்மிகு நகரத் திட்டங்களின் மதிப்பு ரூ. 1,66,000 கோடிகள். பணி ஆணை வழங்கப்பட்ட பணிகளுக்கான மதிப்பு ரூ. 1,25,000 கோடிகள். முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களின் மதிப்பு ரூ.27,000 கோடிகள்.
  • ரூ.32,500 கோடி மதிப்பில் கூடுதலாக 1000 திட்டங்களுக்கான பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள்அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.36,000 கோடி மதிப்பிலான 1000 திட்டங்களுக்கு கடந்த ஓராண்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • கடந்த ஓராண்டில் பணிகள் நிறைவு செய்த அளவின் வளர்ச்சி 180 சதவீதமாக உள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.12,100 கோடி.
  • சீர்மிகு நகரங்கள் லட்சிய நோக்குத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டளையிடல் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் (ICCC) கோவிட் நோய்த் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் உதவிகரமாக இருந்தன. செயல்பாட்டு நிலையில் உள்ள 47 ஐ.சி.சி.சி. மையங்கள், கோவிட் நோய்த் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
  • 33 ஐ.சி.சிசி.கள் நிறைவடையும் பணி பல்வேறு நிலைகளில் உள்ளன. சீர்மிகு சாலைகள் / முழுமையான சாலைகள், சீர்மிகு சோலார், சீர்மிகு தண்ணீர், PPP-கள் மற்றும் துடிப்பை ஏற்படுத்தும் பொது இடங்கள் திட்டங்கள், இத் திட்டத்தின் கீழ் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன.
  • புதிய பட்டதாரிகள் மற்றும் பணிநிலைப் பயிற்சியாளர்களை ஈடுபடுத்திக் கொள்வதற்காக அனைத்து ULB-கள் மற்றும் ஸ்மார்ட் நகர SPV-களுக்காக நகர்ப்புறக் கற்றல் பணிக்கு முந்தைய காலப் பயிற்சித் திட்டம் (TULIP - துலிப்) தொடங்கப்பட்டது. இதுவரையில் அதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். நகரங்களில் 1000க்கும் மேற்பட்ட பணிக்கு முந்தைய காலப்பயிற்சி இடங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இது நமது நகரங்களின் திறன்களை மேம்படுத்தி, மார்க்கெட்டில் உள்ள தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக்  கொள்ள உதவி செய்வதாக இருக்கும்.
  • சீர்மிகு நகரங்கள் லட்சிய நோக்குத் திட்டத்தின் கீழ் பருவநிலை சீர்மிகு நகரங்கள் மற்றும் தரவுச் சீர்மிகு நகரங்கள் ஆகியவை இரண்டு முக்கிய திட்டங்களாக உள்ளன. முக்கிய சேவை அளிப்பவர்கள், தகவல் தொகுப்புகளால் முன்னெடுக்கப்படும் செயல்பாட்டு மேலாண்மை மூலம் எதிர்காலப் போக்கை உருவாக்குபவர்கள், நகர்ப்புற புதுமைச் சிந்தனை மற்றும் நிறுவனம் சார்ந்த திறன் வளர்ப்பு ஆகியவை இதில் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
  • வாழும் நிலையை எளிமையாக்குதல் மற்றும் முனிசிபல் செயல்பாட்டுக் குறியீடு (EoL மற்றும் MPI) ஆய்வில் இந்தியாவில் 114 நகரங்கள் பங்கேற்றன. EoL ஆய்வின் கீழ் இந்த அமைச்சகம் மேற்கொண்ட குடிமக்கள் எண்ணம் குறித்த கணக்கெடுப்பில் பல நகரங்கள் கலந்து கொண்டன. 3ஒ லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதற்கான படிவங்களைப் பூர்த்தி செய்து, தங்கள் நகரங்கள் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அளித்தனர்.
  • தரநிலைப் பட்டியலில் பின்தங்கி இருந்த 20 நகரங்களுடன், உயர்நிலையில் உள்ள 20 நகரங்கள் `சகோதரி நகரங்களாக' இணை சேர்க்கப்பட்டன. நகரங்களுக்கு இடையில் மற்றும் தொடர்புடைய துறையினரிடம் பெரிய உற்சாகத்தை இது உருவாக்கியுள்ளது. கற்றல் மற்றும் செயல்படுத்துதலில் நகரங்கள் பரஸ்பரம் உதவிக் கொள்கின்றன.
  • முனிசிபல் பங்குப்பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட ஆர்வம் கொண்டுள்ள நகரங்களுக்கு ஸ்மார்ட் நகரங்கள் லட்சிய நோக்குத் திட்டம் ஆதரவு அளிக்கிறது. சமீபத்தில், முனிசிபல் பங்குப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவதற்கு, அமெரிக்கக் கருவூலத் துறையின் தொழில்நுட்ப உதவியைப் பெறுவதற்கு ஆறு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் - நகர்ப்புறம்  (PMAY-U)

     பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் - நகர்ப்புறம்  (PMAY-U) என்ற இந்தத் திட்டம் 2020 ஜூன் 25 உடன் 5 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. ``அனைவருக்கும் வீடு'' என்ற லட்சிய நோக்கில், நகர்ப்புற இந்தியாவில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் 2022ஆம் ஆண்டுக்குள் பக்கா வீடு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத் திட்டம் 2015இல் தொடங்கப்பட்டது. ஐந்தாண்டு காலப் பயணத்தில் இத் திட்டத்தில் பல மைல்கற்கள் உருவாக்கப் பட்டுள்ளன. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு, இத்திட்டத்தின் கீழ் 1.12 கோடி வீடுகளுக்கான, உண்மை நிலை உறுதி செய்யப்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளன. 1.05 கோடி வீடுகளுக்கான அனுமதி ஏற்கெனவே அளிக்கப்பட்டு, 65 லட்சம் வீடுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டன. நாடு முழுக்க 35 லட்சம் வீடுகள் கட்டி முடித்து, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

*****


(Release ID: 1634407) Visitor Counter : 409