சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்று: இன்றைய நிலை

Posted On: 22 JUN 2020 7:58PM by PIB Chennai

கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துவதில் பஞ்சாப் மாநிலம் சிறப்பான முன்னேற்றத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் பரவிவரும் தொற்றை எதிர்கொள்ள பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி, மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தலைமை வகித்து, ஒட்டு மொத்த வழிகாட்டுதல்களை அளித்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் நல்ல முன்னேற்றத்தை எட்டுவதை அடுத்து அங்கே குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அரசின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை

இந்த முன்னேற்றத்திற்குக் கடைப்பிடிக்கப்பட்ட பல்வேறு உத்திகளில், நோய் கட்டுப்படுத்தும் மண்டலங்களில் உள்ள மக்கள் தொகையில் அதிக ஆபத்தும் அபாயமும் உள்ள மக்கள் பகுதியை அரசுக் கட்டுப்பாட்டில் தனிமைப்படுத்துவதில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது குறிப்பிடத் தக்க அம்சமாகும். மரண விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்தில், 60 வயதுக்கு மேற்பட்டோர் உள்பட இதய நோய், சிறுநீரகப் பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தொற்றுக்கு எளிதில் ஆளாகும் ஆபத்துப் பிரிவினர் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. அத்தகையோர் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே, அப்பகுதியில் நோய் முற்றிலுமாகக் கட்டுப்படும் வரையில் அரசுத் தனிமைப்படுத்தல் பிரிவுகளில் வைக்கப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தனிமைப்படுத்தலுக்கான வசதிகள் ஹோட்டல்கள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொருவருடனும் ஒருவர் துணை இருக்க அனுமதிக்கப்படுகிறார். அந்த இடங்களில் அவர்களுக்கு அனைத்து விதமான மருத்துவ உதவிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு மருத்துவ அதிகாரி அவரை ஒவ்வொரு நாளும்  இரு முறை கண்காணித்து, ஆய்வு செய்வார்.

கடுமையான கட்டுப்பாட்டு உத்தி:

பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாட்டு உத்திகள் கையாளப்பட்டு வருகின்றன. தெருக்கள், அவற்றின் அருகில் உள்ள இரு தெருக்கள், அல்லது குடியிருப்புப் பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக வரையறுப்பது முறையாக செய்யப்படுகிறது. “கோவிட்- 19” தொற்றுப் பரவலின் அடிப்படையில் சிறிய பகுதிகளாகவோ, அல்லது பெரிய பகுதிகள் என்றால் அதைப் பிரித்து சிறு, சிறு பகுதிகளாகவோ அமைக்கப்படுகின்றன. கிராமப்புறப் பகுதிகளில் மொத்த கிராமத்தையும் உள்ளடக்கியோ அல்லது பகுதி பகுதியாகவோ இதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது.

நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பயனுள்ளதாகச் செயல்படுத்துவதற்கு, சிறிய சிறிய பகுதிகளாக கவனம் செலுத்துவதே அடிப்படையாகும். தொற்றுப் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, முன்கூட்டியே கண்டறிதல், பெரிதும் துணை புரிந்தது. இதுவரை, 8 மாவட்டங்களில் 19 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அடையாளம்  காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மக்கள் தொகை 25 ஆயிரம் ஆகும். குறிப்பிட்ட சுற்றளவுள்ள பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள் நீங்கலாக, நடமாட்டங்கள், செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது பலன் தருகிறது. அத்துடன், வீடு வீடாகச் சென்று தீவிரமாக ஆய்வு நடத்தி, கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறியோ சந்தேகமோ உள்ளவர்களைக் கண்டறியும் பணிகளும் மும்முரமாக நடைபெறுகின்றன. நோய்த் தொற்றுக்கு ஆளானதாகக் கண்டறியப்படுபவர்கள் உடனடியாக தனிமைப்படுத்துதல் மையங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். கட்டுப்பாட்டுப் பகுதிகள் முழுவதுமே சோதனை செய்யப்படுகின்றன. சந்தேகத்துக்கு உரிய அனைவருக்கும் கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டு, உறுதி செய்யப்படுவோர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.

வீடு வீடாகக் கண்காணிப்பு

கோவிட் - 19” தொற்று பரவுவதைக் கண்காணிக்க Ghar Ghar Nigrani (வீடு வீடாகக் கண்காணித்தல்) என்ற கைபேசி செயலியைப் பஞ்சாப் அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆஷா (ASHA) என்ற தன்னார்வ அமைப்பின் தொண்டர்களின் துணையோடு இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் நோய்த் தொற்று முன்கூட்டியே கண்டறியப்பட்டு உடனடி சோதனை செய்யப்படுகிறது.

இந்தச் செயலி மூலம், அனைத்து நகர்ப்புற, கிராமப்புறப் பகுதிகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டோர் கொண்ட பகுதிகள் கணக்கெடுக்கப்படுகின்றன. அதன்படி இன்ப்ளூயென்ஸா போன்ற நோய்கள் (Influenza like Illness), மூச்சுப் பிரச்சினை, மூச்சுத் தொற்று (Severe Acute Respiratory Infections) ஆகிய உபாதைகள், நோய்கள் உள்ளோர் பரிசோதனை செய்யப்படுகிறார்கள். இவ்வாறு திரட்டப்படும் தகவல்கள் ஆபத்தான இடங்களைக் கண்டறிவதற்கு (Risk Mapping) பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2020, ஜூன் 22ஆம் தேதி வரையில் 8,40,223 பேர் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 8,36,829 அறிகுறியற்றவர்களாகவும் (Asymptomatic) 3,997 பேர் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுப் பிரச்சினை போன்ற நோய் அறிகுறியுள்ளவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த ஆய்வு 5,512 கிராமங்களிலும், 1,112 நகர்ப்புற வார்டுகளிலும் பூர்த்தியாகி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

சோதனை

பஞ்சாப் மாநிலத்தில் சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. தற்போது தினந்தோறும் 8 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. அத்துடன் சோதனையை விரிவுபடுத்துவதற்காக நடமாடும் பரிசோதனை மையங்களும் இயங்குகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 10 லட்சம் பேரில் 71 பேருக்கு என்ற விகிதத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. இது அதிகரிக்கப்பட்டு, தற்போது, 5,953 பேருக்கு சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் பரிசோதனைகள் 83 மடங்கு அதிகரித்து சாதனை படைத்துள்ளது பஞ்சாப் மாநிலம்.

தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில், பஞ்சாப் அரசு வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்கியுள்ளது. மீறுவோருக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

 

****(Release ID: 1633615) Visitor Counter : 10