நிதி அமைச்சகம்
டூரன்ட் சுங்கம் திட்டத்தின் கீழ் காகிதமற்ற ஏற்றுமதி முறையை மறைமுக வரி மற்றும் சுங்கத்துக்கான மத்திய வாரியம் சிபிஐசி செயல்படுத்துகிறது
Posted On:
23 JUN 2020 11:48AM by PIB Chennai
சுங்கத்துறை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்த பின்னர், ஏற்றுமதியாளர்களுக்கு மின்னணு முறையில் பாதுகாப்பான கியூஆர் கோட் இடப்பட்ட கப்பல் ரசீதை அனுப்பும் முறையை நேற்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் திரு. அஜீத் குமார் துவக்கி வைத்தார். ஏற்றுமதிக்கான ஆதாரத்துக்கு சுங்கத்துறை அதிகாரிகளை அணுக வேண்டிய தேவையை இது ரத்து செய்துள்ளது. கப்பலில் சரக்கை ஏற்றுவதற்கு அனுமதி கோருவது முதல், ஏற்றுமதிக்கான இறுதி உத்தரவைப் பெறுவது வரை அனைத்து சுங்க ஏற்றுமதி நடைமுறைகளையும் மின்னணு முறையில் செயல்படுத்த இது வகை செய்கிறது.
இன்றைய இந்த முன்முயற்சி, ‘டூரன்ட் சுங்கம்’ என்னும் குடையின் கீழ், முகம் பார்க்காத, காகிதமற்ற, உடல் ரீதியில் தொடர்பில்லாத முறையை செயல்படுத்தும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் நடவடிக்கையை நோக்கிய மற்றொரு படியாகும். இத்தகைய சீர்திருத்தங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அதிகரித்து, இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் அதன் தொடர்புடையவர்களுக்கு ஏற்படக்கூடிய நேரத்தையும், செலவையும் குறைப்பதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. இது, இந்தியாவின் வர்த்தக செயல்பாட்டு அறிக்கைக்கான உலக வங்கியின் எல்லைகளைக் கடந்த வர்த்தக அளவுகோலில் தரத்தை அதிகரிக்க உதவும்.
2020 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள காகிதமற்ற இறக்குமதி ஆவணப்படுத்துதல் முன்முயற்சியின் தொடர்ச்சியாக ஏற்றுமதிக்கு இதேபோன்ற செயல்பாடு தொடங்கப்படுகிறது. கப்பல் ரசீதுக்கான மின்னணு செயல்முறை, தற்போது உள்ள காகித நடைமுறைகளை ஒழித்து, பசுமைச் சுங்கத்தை நடைமுறைப்படுத்த வழி ஏற்படுத்தும். இந்த நோக்கத்துக்காக ஏற்றுமதியாளர்கள் சுங்கத்துறை அலுவலகங்களுக்கு வரவேண்டிய அவசியம் ஏற்படாது என்பது முக்கியத்துவம் வாய்ந்த தகவலாகும். இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் தேவையற்ற கால விரயத்தை தவிர்த்து, தொழிலை விருத்தி செய்ய அதனைப் பயன்படுத்தலாம்.
இந்த முயற்சி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சுங்கத்துறை அனுமதிகளை விரைவாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ள ஊக்குவிப்பாக அமையும் என்று திரு.அஜீத் குமார் தெரிவித்தார். முகமற்ற மதிப்பீடு என்னும் முக்கிய நோக்கத்தைக் கொண்ட டூரன்ட் சுங்கம் நாடு முழுவதும் 2021 ஜனவரி 1 முதல் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.
****
(Release ID: 1633608)