நிதி அமைச்சகம்

வங்கி வட்டி விகிதம் குறைப்பின் பலன் பகிர்ந்தளிக்கப்படுவதை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது மற்றும் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை உருவாக்கும் சொத்து உருவாக்குநர்களின் முயற்சிகளை அரசு அங்கீகரிக்கிறது: PHD வர்த்தக சபையினருடன் நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தில் நிதியமைச்சர் கருத்து.

Posted On: 19 JUN 2020 6:23PM by PIB Chennai

PHD தொழில் வர்த்தக சபையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் இன்று காணொளி மூலம் கலந்துரையாடிய மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன், நாட்டுக்கு சொத்துகளை உருவாக்குபவர்களின் முயற்சிகளை அரசு எப்போதுமே அங்கீகரித்து வருகிறது என்று கூறினார். இந்தப் பிரிவினர் தான் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள், கிடைக்கிற ஆதார வளங்களை அதிகபட்ச அளவுக்குப் பயன்படுத்தி நாட்டில் சமூக - பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

            பிரதமர் எப்போதும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரித்து வருகிறார் என்றும், எப்போதும் அவர் உதவிக்கரம் நீட்டி வருகிறார் என்றும் நிதியமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அரசு அறிவித்த நிவாரண நடவடிக்கைகள், அடிப்படை நிலை வரையில் சிறப்பாக சென்றடைகிறதா என்பதை வங்கிகளின் ஆலோசனையுடன் நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். குறிப்பாக வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைப்பின் பலன், நுகர்வோருக்கு வட்டிக் குறைப்பாகச் சென்றடைவதைக் கண்காணிக்கிறோம் என்று மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.

            கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாகத் தொழில் வர்த்தகத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்கு, தொழில் நிறுவனங்களுக்கு சொத்து ஜாமீன் ஏதுமின்றி இயல்பாகவே கடன் வழங்குவதற்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பதன் கீழ், கடன்கள் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

            தொழில் துறை எதிர்கொண்டுள்ள சவால்களுக்குத் தீர்வு காண்பதிலும், தொழில் செய்யும் நிலைமையை எளிதாக்குவதிலும், குறைந்தபட்ச அரசு நிர்வாகத் தலையீடு மற்றும் அதிகபட்ச நிர்வாகம் என்பதில் எப்போதுமே அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

            தொழில்துறையில் தொடர்புடைய அனைவருக்கும் பாரபட்சமின்றி அரசு எப்போதும் உதவிக்கரம் நீட்டி வருகிறது, குறிப்பாக குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவிக் கரம் நீட்டி வருகிறது என்றும் அவர் கூறினார்.

            அரசு அறிவித்துள்ள குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை தனது வரவேற்பு உரையில் பாராட்டிய PHD தொழில் வர்த்தக சபையின் தலைவர் டாக்டர். டி.கே. அகர்வால், ரூ.20.97 லட்சம் கோடி அளவிலான உத்வேகம் அளிக்கும் தொகுப்பு மிகவும் விரிவானதாக உள்ளது என்றும், உலகில் மற்ற நாடுகள் அறிவித்ததை விட இது அதிகமான அளவு என்றும், கணிசமான தொகையாக இருக்கிறது என்றும் கூறினார்.

            இந்தத் தொகுப்புத் திட்டங்கள் நிதி சார்ந்த உத்வேகங்களாக மட்டுமின்றி, இந்தியாவை அடுத்த கட்ட உச்ச நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஏற்ப பாதையை மாற்றக் கூடிய சீர்திருத்தங்களைக் கொண்டதாக இருக்கிறது என்றும் டாக்டர். டி.கே. அகர்வால் கூறினார்.

            சுற்றுலா, விமானப்போக்குவரத்து, பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் உள்ளிட்ட மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு, கடனின் வகைப்பாட்டை பாதிக்காமல், கடன்களை ஒரு முறை மட்டும் மறு வரையறை செய்து கொடுக்க வேண்டிய தேவை இப்போது உள்ளது என்று அவர் கூறினார்.

            தொழில் வர்த்தகத் துறையினருக்கு வங்கி அதிகாரிகள் எந்த அச்சமும் இல்லாமல் கடன்களுக்கு அனுமதி அளித்து, பட்டுவாடா செய்ய உதவும் வகையில், அவர்களின் மனதில் அச்சங்களைப் போக்குவதற்கான முறைப்படியான கடிதங்களை அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்று டாக்டர் அகர்வால் யோசனை தெரிவித்தார்.

            சில நியாயமான காரணங்களால் சில தொழில் நிறுவனங்களின் கடன் வாரா கடன் பட்டியலில் சேருமானால், அதற்கு கிரிமினில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தவிர்க்கலாம் என்றும் டாக்டர் அகர்வால் கேட்டுக் கொண்டார்.

            அரசின் செலவினங்களை அதிகரிப்பதன் மூலம் உடனடியாக மார்க்கெட்டில் தேவைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும், தொழிலாளர், சட்டம் மற்றும் நிலச் சீர்திருத்தங்களை வேகப்படுத்துவதுடன் உள்நாட்டுத் தொழிற்சாலைகளின் போட்டியிடும் நிலைமையை உயர்த்த வேண்டும் என்றும், அதன் மூலம் இந்தியாவை முதலீட்டுக்கு உகந்த இடமாக மாற்றவேண்டும் என்றும் அவர் கூறினார்.

            PHDCCI உறுப்பினர்களின் கருத்துகளை நிதியமைச்சர் கனிவுடன் கேட்டுக் கொண்டார். பொருளாதாரம், தொழில், வர்த்தகத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து  PHD சபை அளித்த ஆலோசனைகளை அவர் குறித்துக் கொண்டார். இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை செயலாளர் (நிதி) திரு அஜய் பூஷண் பாண்டே, நிதியமைச்சகத்தின்  நிதிச்சேவைகள் துறையின் செயலாளர் திரு தேவசிஷ் பாண்டா,  கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு. ராஜேஷ் வர்மா, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை முதன்மைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், PHD சபையின் மூத்த துணைத் தலைவர் திரு சஞ்சய் அகர்வால், PHD சபையின் செயலாளர் திரு பிரதீப் முல்தானி, PHD சபையின் செகரெட்டரி ஜெனரல் திரு சௌரவ் சன்யால், PHD சபையின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.



(Release ID: 1632705) Visitor Counter : 176