சுரங்கங்கள் அமைச்சகம்

நிலக்கரி மற்றும் சுரங்கத் தொழிலில் போட்டி, மூலதனம், பங்கேற்பு மற்றும் தொழில்நுட்பத்தை முழுமையாக அனுமதிக்கும் முக்கியமான முடிவை இந்தியா எடுத்துள்ளது: பிரதமர்

நிலக்கரித் துறை சீர்திருத்தங்கள் நமது மலைப்பகுதி பிராந்தியங்களாக உள்ள கிழக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளை வளர்ச்சியின் தூண்களாக மாற்றும்: பிரதமர்
பெரிய அளவில் மூலதனச் செலவை நிலக்கரித் துறை உருவாக்கும் மற்றும் நிலக்கரி வளம் உள்ள பகுதிகளில் வேலைவாய்ப்புகள் அளிப்பதாகவும் இருக்கும்: பிரல்ஹத் ஜோஷி
வணிக ரீதியிலான நிலக்கரிச் சுரங்களுக்கு ஏலம் விடும் பணிகள் தொடக்கம்; 41 நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ஏலம்

Posted On: 18 JUN 2020 5:24PM by PIB Chennai

வணிக ரீதியில் 41 நிலக்கரிச் சுரங்கங்கள் தோண்டுவதற்கான ஏலத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளி மூலம் இன்று தொடங்கி வைத்தார். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது. FICCI உடன் இணைந்து இந்த ஏலத்துக்கான பணிகளை நிலக்கரி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதற்கு இரண்டு நிலைகளைக் கொண்ட மின்னணு ஏல நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, கோவிட்-19 நோய்த் தொற்றுப் பிரச்சினையில் இருந்து இந்தியா மீண்டு எழும், இந்த நெருக்கடி காலத்தை ஒரு வாய்ப்பாக இந்தியா மாற்றிக் கொள்ளும் என்று கூறினார். தற்சார்பு நிலைக்கு மாற வேண்டியதன் அவசியத்தை இந்த நெருக்கடி நிலை இந்தியாவுக்கு கற்பித்துள்ளது என்றார் அவர். தற்சார்பு இந்தியா என்பது, இறக்குமதிகளைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைப்பது, இறக்குமதிகளுக்கான அந்நிய செலாவணியை மிச்சப்படுத்துதல் ஆகியவையாக இருக்கும். ஆதார வளங்களை உள்நாட்டிலேயே உருவாக்க அது உதவும் என்பதால், இறக்குமதிகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் நமது நாட்டுக்கு ஏற்படாது. இப்போது நாம் இறக்குமதி செய்யும் பொருள்களை, அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறுவோம் என்பது இதன் அர்த்தமாக இருக்கும்.

     இந்த நிலையை எட்டுவதற்கு, ஒவ்வொரு துறை, ஒவ்வொரு பொருள், ஒவ்வொரு சேவை ஆகியவற்றை மனதில் நிறுத்தி, ஆத்மார்த்தமாகச் செயல்பட வேண்டும், அதன் மூலம் அந்தத் துறையில் இந்தியாவை தற்சார்பு கொண்டதாக ஆக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இன்று மேற்கொள்ளப் பட்டிருக்கும் முக்கியமான நடவடிக்கை, எரிசக்தித் துறையில் இந்தியாவை தற்சார்பு கொண்டதாக ஆக்கும் என்று அவர் கூறினார். நிலக்கரி சுரங்கத் துறைக்கான சீர்திருத்தங்களை அமல் செய்வதாக மட்டுமின்றி, இளைஞர்களுக்கு லட்சக் கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரக் கூடியதாகவும் இந்த நிகழ்வு இருக்கும் என்றார் அவர். இன்றைக்கு வணிக ரீதியிலான நிலக்கரிச் சுரங்கத்துக்கு ஏலம் விடுவதை மட்டும் நாம் தொடங்கி வைக்கவில்லை. பல தசாப்த காலமாக முடக்க நிலையில் இருந்த நிலக்கரித் துறையை நாம் விடுவித்திருக்கிறோம் என்று பிரதமர் தெரிவித்தார்.

     கனிமவளத் துறையில் சீர்திருத்தங்கள் என்பது, நிலக்கரி சுரங்கத் துறை சீர்திருத்தங்களில் இருந்து உருவாகியுள்ளது. இரும்பு, பாக்சைட் மற்றும் இதர கனிமவளங்கள் அருகருகே கிடைப்பதால் இந்த வாய்ப்பு உருவாகியுள்ளது என்று அவர் கூறினார். வணிக ரீதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் தொடங்கி இருப்பது, இதில் தொடர்புடைய தொழில் துறையினருக்கு வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றார் அவர். மாநில அரசுகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும். நாட்டு மக்கள் தொகையில் பெரும் பகுதியினருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒவ்வொரு துறையிலும் ஆக்கபூர்வமான தாக்கம் ஏற்படும் என்று பிரதமர் கூறினார்.

     இந்த நிலக்கரித் துறை சீர்திருத்தங்கள் காரணமாக, மலைப்பகுதிகளாக உள்ள இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்கள், வளர்ச்சிக்கான தூண்களாக மாறும் என்றார் அவர். அந்தப் பிராந்தியங்களில், வளரும் உத்வேகத்தில் உள்ள அதிக மாவட்டங்கள் உள்ளன என்றும், விரும்பத்தக்க வளமையை அவற்றால் எட்ட முடியாத நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் வளர்ச்சிக்கான உத்வேகத்தில் உள்ள 16 மாவட்டங்களில், நிலக்கரி வளம் பெருமளவு உள்ளது. ஆனால், அவற்றின் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு பயன் கிடைக்கவில்லை என்றும் பிரதமர் கூறினார். அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்புகளுக்காக, தொலைவில் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இப்போது உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

     அந்தப் பகுதி மக்களுக்கு அங்கேயே வேலை கிடைக்கச் செய்யும் வகையில், இந்த முயற்சி உதவிகரமாக இருக்கும் என்று பிரதமர் திரு மோடி கூறினார். நிலக்கரி எடுத்தல் மற்றும் அனுப்பி வைத்தலுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவிட அரசு முடிவு செய்துள்ளது என்றும், இதனால் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

     இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி கூறினார். இந்தியாவில் எரிசக்தித் தேவை ஆண்டுக்கு 5 சதவீதம் அதிகரித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். அனைத்து ஆதார வளங்களின் மூலமும் இந்தியாவுக்கு எரிசக்தி தேவைப்படுகிறது என்றார் அவர். மொத்த எரிசக்தி தேவையில் 50 சதவீத அளவுக்கு நிலக்கரி மூலம் கிடைக்கும் என்ற நிலையில், தேவையான சமயத்தில் நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பு நிலக்கரி அமைச்சகத்துக்கு உள்ளது என்று அவர் கூறினார். எரிசக்தித் துறையில் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

     பெருமளவிலான மூலதனச் செலவுக்கும், நிலக்கரி வளம் மிகுந்த பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நிலக்கரித் துறை கடமைப்பட்டிருக்கிறது என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் கூறினார். அனைத்து சுரங்கங்களிலும் கடந்த ஆறு ஆண்டுகளில் உற்பத்தி பெருமளவு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். வணிக ரீதியிலான சுரங்கத் தொழிலுக்கான சட்டங்கள் மற்றும் ஏல நடைமுறைகள் தொடர்புடைய துறையினரின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.  பொதுக் கலந்தாய்வு அடிப்படையில், ஏலத்துக்கான நிலக்கரி வளப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். நிலக்கரித் துறையில் தனியார் அடியெடுத்து வைப்பதற்கு இது தான் சிறந்த நேரம் என்று அவர் தெரிவித்தார்.

     முழுமையாக வளம் கண்டறியப்பட்ட மற்றும் பகுதியளவு வளம் அறியப்பட்டவை உள்ளிட்ட 41 நிலக்கரி வளப் பகுதிகள் இப்போது ஏலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் முழுமையாக வளம் கண்டறியப்பட்ட 4 கோக்கிங் நிலக்கரிச் சுரங்கங்களும் அடங்கும். இவை சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் அமைந்துள்ளன. ஏல நடைமுறை இரு நிலைகளைக் கொண்டதாக இருக்கும். தொழில்நுட்பம் மற்றும் நிதி கேட்பு நடைமுறைகளாக அது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*******



(Release ID: 1632527) Visitor Counter : 306