உள்துறை அமைச்சகம்

கோவிட்-19 சமாளிப்பதற்கான ஆயத்த நிலைகள் குறித்து தில்லி தலைநகரப் பிராந்திய மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு

Posted On: 18 JUN 2020 6:48PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கையாள்வதில் தில்லி – தேசிய தலைநகர்ப் பகுதியில் (NCR) ஒருமித்த செயல்திட்டத்தைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா வலியுறுத்தினார். கோவிட்-19 சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான ஆயத்த நிலை குறித்து இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த திரு அமித் ஷா, என்.சி.ஆர். பிராந்தியத்தில் நெருக்கமான நகர்ப்புறக் கட்டமைப்பு உள்ளதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த வைரஸ் பிரச்சினையை சமாளிக்க தில்லி மற்றும் என்.சி.ஆர். பிராந்திய அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார். இந்த வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த அதிக அளவில் மருத்துவப் பரிசோதனைகள் செய்யவேண்டும் என்றும், நோய்த் தாக்குதல் உள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சை தர வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். லட்சிய இலக்குடன் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் கூறினார். நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர். வி.கே. பவுல் தலைமையிலான நிபுணர் குழு, கோவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்கான கட்டணத்தை ரூ.2,400 என நிர்ணயித்துள்ளதாகவும், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இதுபோன்ற பரிசோதனைகளுக்கான கட்டணம் அதிகமாக இருந்தால், உள்ளார்ந்த ஆலோசனைகளுடன் அந்தக் கட்டணங்களை மாநில அரசுகள் குறைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். கோவிட்-19 படுக்கைகள் மற்றும் சிகிச்சைக்கான கட்டணங்களையும் இந்தக் குழு நிர்ணயித்துள்ளதாக கூட்டத்தில் திரு அமித்ஷா கூறினார். ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தக் கட்டணங்களை என்.சி.ஆர். பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகளில் பின்பற்றலாம் என்றார் அவர்.

     புதிய ரேப்பிட் ஆன்டிஜென் நடைமுறையின்படி கோவிட்-19 மருத்துவப் பரிசோதனைகளை நடத்தலாம் என்றும் அவர் கூறினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ள இந்த நடைமுறையில், பரிசோதனைத் திறன் அதிகரிக்கும் என்றும், நோய் அறிகுறியை விரைவாகக் கண்டறிந்து, ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

     கோவிட்-19 படுக்கைகள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு  மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் குறித்த தகவல்களையும், ஆதார வளங்களை அதிகரிப்பதற்கான திட்டம் குறித்தும் 2020 ஜூலை 15ஆம் தேதிக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குத் தகவல்களை அளிக்குமாறு உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா அரசுகளை திரு அமித் ஷா கேட்டுக் கொண்டார். வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் தேசிய தலைநகரப் பிராந்தியத்திற்கு, பொதுவான செயல்திட்டத்தை உருவாக்க இது உதவியாக இருக்கும் என்றார் அவர்.

     வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் என்.சி.ஆர். பிராந்திய நிர்வாகங்களுக்கு வேண்டிய அனைத்து சாத்தியமான உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என திரு அமித்ஷா உறுதியளித்தார். இந்த ஆய்வில் தில்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசின் மூத்த அமைச்சர்கள், தில்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத் தலைமைச் செயலாளர்கள் மற்றும் தில்லி -என்.சி.ஆர். மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.(Release ID: 1632515) Visitor Counter : 189