ஜல்சக்தி அமைச்சகம்

மேற்கு வங்கத்தில் ஜல் ஜீவன் திட்டத்தை மந்தமாக அமல்படுத்துதல் குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்

Posted On: 18 JUN 2020 1:05PM by PIB Chennai

மேற்கு வங்கத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் (JJM)  கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் மந்தமாக நடைபெறுவது குறித்து, மேற்குவங்க முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் கவலை தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுப்பதற்காகவும், அதற்காக அந்த நிதியை பயன்படுத்துவதற்காகவும், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதி வழங்குகிறது என தனது கடிதத்தில் திரு செகாவத் குறிப்பிட்டுள்ளார். 2019-20ம் ஆண்டில் 32 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் 4,750 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்துக்கு 2019-20ம் ஆண்டில் ரூ.994 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.428 கோடியை மட்டுமே மாநில அரசு செலவழித்துள்ளது. ஆர்சனிக் / ப்ளூரைடு பாதிப்பு உள்ள குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வழங்க கடந்த 2017 மார்ச் முதல், மொத்தம் ரூ.1,305.70 கோடி, மேற்கு வங்கத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றில் ரூ.573.36 கோடி இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

மேற்கு வங்கத்துக்கான ஒதுக்கீடு 2019-20ம் ஆண்டில் ரூ.994 கோடியிலிருந்து, 2020-21ம் ஆண்டில் ரூ.1,610.76 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு செலவழிக்கப்படாத தொகையுடன், மேற்கு வங்கத்துக்கு ஜல்ஜீவன் திட்டத்துக்கான மத்திய நிதி ரூ.2,760 கோடி உள்ளது.  மாநில பங்களிப்புடன் சேர்த்து, 2020-21ம் ஆண்டில், ஜல்ஜீவன் திட்டத்தை அமல்படுத்த மேற்கு வங்கத்துக்கு ரூ.5,645 கோடி நிதி இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது தேசிய அளவிலான முன்னுரிமை எனவும், இந்த இலக்கை குறித்த காலத்துக்குள் முடிக்க மாநில அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும் என ஜல்சக்தி துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

மீதமுள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, தற்போதுள்ள குடிநீர் விநியோக முறையை மறுசீரமைத்து/அதிகரிப்பதில் கவனம் செலுத்தி. குறித்த காலத்துக்குள் ஜல்ஜீவன் திட்ட இலக்கை முடிக்க முறையாக திட்டமிட வேண்டியது அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார். மாநிலத்தில் தற்போதுள்ள குடிநீர் விநியோகத் திட்டங்கள் மூலம், 21,600 கிராமங்களில் ஒரு கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜல்சக்தி அமைச்சர் கூறினார். 

------



(Release ID: 1632311) Visitor Counter : 157