பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பிரதமரின் வன் தன் திட்டம் விரிவாக்கம் : 18000-லிருந்து 50,000–மாக வன் தன் சுயஉதவிக் குழுக்களை அதிகரிக்கத் திட்டம்

Posted On: 15 JUN 2020 9:14PM by PIB Chennai

பிரதமரின் வன் தன் திட்டத்தை விரிவாக்கம் செய்ய மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் உத்தேசித்துள்ளது. இந்த அமைச்சகத்தின் கொவிட்-19 நிவாரணத் திட்டத்தின் வாயிலாக, வன் தன் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கையை, 18,000-லிருந்து    50,000-மாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, காடுகளில் உள்ள வனப்பொருட்களை சேகரிக்கும், பத்து லட்சம் பழங்குடி மக்கள் பயன்பெறுவார்கள்.

     “வன் தன் : இந்தியாவில் மறுமலர்ச்சிப் பெறும் பழங்குடியினர் நிறுவனங்கள்” என்ற தலைப்பிலான இணையதளக் கருத்தரங்கு ஒன்றை ட்ரைஃபெட் நிறுவனம் இன்று நடத்தியது. வன் தன் தொடக்க நிறுவனங்களின் புதுமையான அணுகுமுறை மற்றும் அவைகளின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. ட்ரைஃபெட்டின் நிர்வாக இயக்குநர் திரு பிரவிர் கிருஷ்ணா தலைமை வகித்த இந்தக் கருத்தரங்கில் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றிய திரு பிரவிர், 22 மாநிலங்களில், வனப் பொருட்களை சேகரிக்கும் 3.6 லட்சம் பழங்குடி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதற்காக 1,205 பழங்குடி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், 18,000 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

---



(Release ID: 1631868) Visitor Counter : 242