பிரதமர் அலுவலகம்

பிரதமர் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் இடையே தொலைபேசி உரையாடல்.

Posted On: 09 JUN 2020 7:32PM by PIB Chennai

பிலிப்பைன்ஸ் அதிபர் மேன்மைமிகு ரோட்ரிகோ டுடேர்தே உடன் இன்று தொலைபேசியில் உரையாடிய இந்தியப் பிரதமர், கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுவரும் சவால்களை எதிர்கொள்ள இரு அரசுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

 

தற்போது நிலவி வரும் சுகாதார நெருக்கடியின் போது, இரு தேசங்களிலும் உள்ள  தத்தமது நாட்டினரின் நலனை உறுதி செய்யவும், அவர்கள் தாய்நாடு திரும்பவும் அளித்து வரும் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் பாராட்டினர். பிலிப்பைன்சுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருள்களைத் தொடர்ந்து அனுப்ப இந்தியா எடுத்த நடவடிக்கைகளையும் பிலிப்பைன்ஸ் அதிபர் பாராட்டினார்.

 

பெருந்தொற்றுக்கு எதிரான பிலிப்பைன்சின் போருக்கு உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளதாக அதிபர் டுடேர்தேவிடம் தெரிவித்த பிரதமர், ஒரு வேளை தடுப்பு மருந்துக் கண்டுபிடிக்கப்பட்டால் அதனையும் சேர்த்து, கட்டுபடியாகக் கூடிய விலையில் மருந்துகளைத் தயாரிக்கும் இந்தியாவின் நன்கு நிறுவப்பட்டத் திறன் ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

 

ராணுவ ஒத்துழைப்பு உட்பட இரு நாடுகளின் உறவின் அனைத்து அம்சங்களிலும் கடந்த சில வருடங்களில் தெரிந்து வரும் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் தங்களது திருப்தியை தெரிவித்தனர். இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பிலிப்பைன்சை ஒரு முக்கியப் பங்குதாரராக இந்தியா கருதுவாக பிரதமர் கூறினார்.

 

விரைவில் வரும் பிலிப்பைன்சின் தேசிய தினத்தை முன்னிட்டு, மேன்மைமிகு அதிபர் டுடேர்தேவுக்கும், பிலிப்பைன்ஸ் மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்தார்.

***


(Release ID: 1630538) Visitor Counter : 256