பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்முவில் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அமர்வை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் துவக்கி வைத்தார்.
प्रविष्टि तिथि:
08 JUN 2020 4:19PM by PIB Chennai
ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கான, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் பதினெட்டாவது அமர்வை, மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாட்டுக்கான இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), MoS பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வுதியம், அணுசக்தி, விண்வெளித்துறை ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் காணொளி மாநாட்டின் மூலமாக இன்று துவக்கி வைத்தார். மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் ஜம்மு அமர்வு, அரசு ஊழியர்களின் பணி விவரங்கள் தொடர்பான வழக்குகளை மட்டுமே விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மற்ற பல நீதிமன்றங்களில் சுமை குறையும்; இதனால் அந்த நீதிமன்றங்களால் மற்ற வழக்குகளை விரைவாக முடிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் நிர்வாகத் தீர்ப்பாயத்தின் கீழ் வரும் அனைவருக்கும் தங்களது குறைகளுக்கும், பணி தொடர்பான பிரச்சினைகளுக்கும் விரைந்து நிவாரணம் பெறுவதற்கு வழிவகுக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். மோடி அரசு “வெளிப்படைத்தன்மை”, “அனைவருக்கும் நீதி” என்பதற்கு உறுதிபூண்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ள, மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய சீர்திருத்தங்கள், ஜம்மு, காஷ்மீர், லடாக் உட்பட நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயனளித்துள்ளன. ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய இடங்களில் உள்ள மக்களின் நன்மைக்காக, அரசியல் சட்டம் 370 மற்றும் 35A ஆகியவை, 5 ஆகஸ்ட் 2019 அன்று ரத்து செய்யப்பட்ட பிறகு, 800க்கும் அதிகமான மத்திய சட்டங்கள் தற்போது ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்துவதாக உள்ளன. அதனால் இப்போது ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்கள் இந்தியாவின் இதர இடங்களில் உள்ள மக்களைப் போன்று அதே உரிமைகளைப் பெற்றுள்ளனர். நிலுவையிலுள்ள கிட்டத்தட்ட 30,000 வழக்குகள் கால வரம்புக்கு உட்பட்டு நியாயமான முறையில் தீர்த்து வைக்கப்படும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
DoPT யின் மூன்று முக்கிய முகமைகளான CAT, CIC, CVC ஆகியவை தற்போது ஜம்மு, காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களிலும் இயங்கிவருகின்றன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். முன்னதாக 28.5.2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி நிர்வாகத் தீர்ப்பாய சட்டம் 1985 (13 of 1985) பிரிவு 5, உட்பிரிவு 7இன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு ஜம்மு, காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் சாதாரணமாக ஜம்முவிலும், ஸ்ரீநகரிலும் இயங்கும் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. இதேபோல மத்திய தகவல் ஆணையம், ஜம்மு, காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் விண்ணப்பதாரர்களிடமிருந்து வரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை 15.5.2020 முதல் விசாரிக்கத் துவங்கியுள்ளது. மத்திய விஜிலென்ஸ் ஆணையத்தின் ஊழல் தடுப்பு சட்டத்துக்கான சட்ட வரம்பு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் திரு சஞ்சய் கோத்தாரி 5 மே 2020 அன்று தம்மைச் சந்தித்தபோது தம்மிடம் கூறியதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
(रिलीज़ आईडी: 1630238)
आगंतुक पटल : 474