எரிசக்தி அமைச்சகம்

"சுகாதாரமான மற்றும் எரிசக்தி சிக்கனக் கட்டிடங்கள்" திட்டத்தை ஈஈஎஸ்எல் (EESL) மற்றும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு முகமை அறிவித்தன

Posted On: 05 JUN 2020 3:31PM by PIB Chennai

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று, எரிசக்தி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான எரிசக்தி சிக்கன சேவைகள் நிறுவனம் (Energy Efficiency Services Limited) மற்றும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு முகமையின் (USAID) மைத்ரி திட்டம் ஆகியவை இணைந்து, பணிபுரியும் இடங்களை சுகாதாரமானதாகவும், பசுமையானதாகவும் ஆக்க"சுகாதாரமான மற்றும் எரிசக்தி சிக்கனக் கட்டிடங்கள்" திட்டத்தைத் தொடங்கின.

 

இந்தத் திட்டம் எரிசக்தி சிக்கனத்துக்கான சந்தைகள் ஒருங்கிணைப்பு மற்றும்  மாற்றத்தை உருவாக்கும் திட்டமான மைத்ரியின் ((MAITREE) கீழ் செயல்படுத்தப்படுகிறது. குளிர்ச்சித் தன்மை மீது குறிப்பாக கவனம் செலுத்தும் மைத்ரி, கட்டிடங்களுக்குள் எரிசக்தி சிக்கன நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் நோக்குடன், எரிசக்தி அமைச்சகம் மற்றும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு முகமைக்கு இடையேயான அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியின் ஒரு பகுதி ஆகும்.

 

 "சுகாதாரமான மற்றும் எரிசக்தி சிக்கனக் கட்டிடங்கள்" மாதிரித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தக் கட்டமைப்பைத் தனது சொந்த அலுவலகங்களில் முதல் முறையாக செயல்படுத்தி, எரிசக்தி சிக்கன சேவைகள் நிறுவனம் முன்னோடியாக விளங்குகிறது. எரிசக்தி சிக்கன சேவைகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சௌரப் குமார் கூறுகையில், "செயல்பாட்டில் உள்ளக் கட்டிடங்களிலும், குளிர் சாதன அமைப்புகளிலும் மாற்றங்கள் செய்வதன் மூலமாக அவற்றை சுகாதாரமானதாகவும், மின்சார சிக்கனம் கொண்டவையாகவும் ஆக்கி சவால்களை சமாளிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இந்த மாதிரித் திட்டம் இதரக் கட்டிடங்களையும் சுகாதாரமானதாகவும், மின்சார சிக்கனம் கொண்டவையாகவும் ஆக்கும் நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எப்போதும் போல, மக்கள் மற்றும் அனைவரின் நலனுக்காகவும் எங்கள் பணி இருக்கும். அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு முகமையினுடனான எங்களின் கூட்டு இதை மேம்படுத்த உதவும்," என்றார்.


(Release ID: 1629717) Visitor Counter : 274