பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

தற்போதைய கோவிட் நெருக்கடி காலகட்டத்தில் பழங்குடியின பொருள் சேகரிப்பாளர்களுக்கு உதவும் வகையில், மகாராஷ்டிராவின் வனச்செல்வ அபிவிருத்தி மையங்கள், புத்தாக்க முன்முயற்சிகளை எடுத்து வருகின்றன

Posted On: 05 JUN 2020 2:40PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றின் பெருந்தாக்கத்தை மாநிலம் எதிர்கொண்டு இருக்கும் இந்தச் சூழலில் மகாராஷ்டிராவின் வனச்செல்வங்கள் திட்டத்தின் வெற்றிக்கதை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட பழங்குடியின சமுதாயத்தினர் வனச்செல்வக் குழுவை உருவாக்கி தங்களுக்கான வாழ்வதாரத்தைத் தேடிக் கொள்கின்றனர். தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கத்தையும் மீறி இந்த வனச்செல்வக் குழுவினர் செயலாற்றி வருகின்றனர்.  இந்த வனச் செல்வக் குழுவினர் தங்களது தொடர் முயற்சிகள் மற்றும் புத்தாக்க நடவடிக்கைகள் மூலம் 19,350  பழங்குடியினத் தொழில் முனைவோர்களுக்கு உதவி வருகின்றனர்.  நீடித்த நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கும் வகையில் தங்களது பொருள்களை விற்பதற்கான ஒரு அமைப்பை உருவாக்கிச் செயல்படுத்துவதற்கு இந்தத் தொழில்முனைவோர்களுக்கு வனச்செல்வக் குழுவினர் உதவி உள்ளனர். 

கோவிட்-19 தாக்கத்தை எதிர்கொண்டு போராடுவதற்கு பல்வேறு புத்தாக்க முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  கிராமம் கிராமமாகச் சென்று பருவகால மலர்களான மகுவா மலர், கிளோயி மற்றும் தேன் (இந்தப் பிராந்தியத்தின் முக்கியமான சிறிய அளவு வனவிளை பொருள்களாக இவை இருக்கின்றன) ஆகியவற்றை சேகரிக்க உதவும் வகையில் சுயஉதவிக் குழுவினருக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படுகிறது.  பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடித்தும், முகக்கவசங்கள் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் ஊரடங்குக் காலத்தில் கிளோயி மற்றும் மகுவாவைச் சேகரிக்கும் செயல் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பிராந்தியத்தின் வனச்செல்வ அபிவிருத்தி மையங்களில் ஒன்றான சபரி ஆதிவாசி விகாஸ் மகா மண்டல் இத்தகைய விளைபொருள்களில் இருந்து உள்ளீடு மற்றும் வெளியீடு முதலீடுகள் மூலமாக பலவேறு  துணைப்பொருள்களை உற்பத்தி செய்வதற்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டு வருகிறது. இத்தகைய விளைபொருள்களுக்கு மதிப்புக்கூட்டல் செய்யும் போது சிறப்பான விலை இவற்றுக்கு கிடைக்கும். 

ஷாப்பூர் வனச்செல்வ அபிவிருத்தி மையத்தின் கீழ் செயல்படுகின்ற மற்றொரு குழுவான கட்காரி பழங்குடியின இளைஞர் குழு மற்ற குழுக்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.  இந்த இளைஞர் குழு ஆன்லைன் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி டி’ மார்ட் போன்ற சில்லறை விற்பனைத் தொடர் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் கிளோயியை விற்பதற்கு முயற்சி எடுத்து வருகிறது.



(Release ID: 1629713) Visitor Counter : 194