அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புதிதாக உள்நாட்டிலேயே செயற்கை சுவாசக் கருவியை உருவாக்கியுள்ளது சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ.

Posted On: 03 JUN 2020 8:45PM by PIB Chennai

நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், உள்நாட்டிலேயே செயற்கை சுவாசக்கருவியை துர்காபூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய இயந்திரவியல் பொறியியல் ஆய்வு நிறுவன (CMERI) ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். சிஎஸ்ஐஆர்- சிஎம்இஆர்ஐ இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) ஹரிஷ் ஹிரானி, துர்காபூரில் உள்ள ஹெல்த் வேர்ல்டு மருத்துவமனையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் டாக்டர் அருணங்சு  கங்குலி ஆகியோர் முன்னிலையில் புதிய செயற்கை சுவாசக் கருவி வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியர் ஹிரானி கூறும்போது, “இந்த செயற்கை சுவாசக் கருவியின் வடிவமைப்பு, கட்டுப்பாட்டுக்கருவிகள் மற்றும் மின்னணுத் தொகுப்புகள் ஆகியவை குறைவான விலை மற்றும் துறையினரின் தேவையை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துகிறது. துர்காபூரில் உள்ள ஹெல்த் வேர்ல்டு மருத்துவமனை மற்றும் விவேகானந்தா மருத்துவமனையின் சுகாதாரத்துறை வல்லுநர்களிடம் முக்கிய ஆலோசனைகளைப் பெற்று, செயற்கை சுவாசக்கருவியின் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த செயற்கை சுவாசக் கருவியின் விலை சுமார் ரூ.80,000 முதல் ரூ.90,000 வரை இருக்கும். பிற நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவிகள் மேலும் மேம்படுத்தப்படும்,” என்றார்.

பேராசிரியர் ஹிரானி மேலும் கூறும் போது, “சுகாதாரப் பணியாளர்களின் சிறப்பான செயல்பாடுகளுக்கு ஏற்ப நோயாளிகளிடம் செயற்கை சுவாசக்கருவியின் பலன் இருக்கும். செயற்கை சுவாசக்கருவிகளின் செயல்பாடுகளை தானியங்கி முறையில் செய்வதற்கு செயற்கைப் புலனறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே இந்த மையத்தின் நிலைப்பாடாக இருக்கும். இதன்மூலம், நோயாளிகளின் உடல்நிலை மாற்றத்துக்கு ஏற்ப, செயற்கை சுவாசக்கருவிகள் தானாகவே செயலாற்றும்,” என்று தெரிவித்தார்.

*****



(Release ID: 1629411) Visitor Counter : 238