பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் காணொளிக் காட்சி கூட்டத்தை நடத்தினார்.

Posted On: 03 JUN 2020 9:34PM by PIB Chennai

கோவிட் தடுப்பு பணிகள் குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இன்று காணொளிக் காட்சிக் கூட்டத்தை நடத்தினார். அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது தொடக்க உரையில், கோவிட் பெருந்தொற்றின் முந்தைய இரண்டு கட்டங்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்த மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை ஏற்பாடு செய்வதே முக்கிய நோக்கமாக இருந்தது என்றும், அதன் அடுத்த கட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எந்தத் தடையுமின்றி திரும்புவதை உறுதி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தற்போதைய கட்டத்தில், தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஆகிய இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த இரண்டு விஷயங்களை நிறைவேற்றுவதில், உள்ளாட்சி அமைப்புகள் அவற்றின் பிரதிநிதிகள், அதோடு சிவில் சமூகத்தின் பங்கு மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

 

அமைச்சர் ஜிதேந்திர சிங் மேலும் கூறுகையில், ‘‘விழிப்புடன் இருந்தால் கவலை இல்லை’’ என்ற தாரகமந்திரத்தைப் பின்பற்றுவதே தற்போதைய காலத்தின் தேவையாகும். இதற்காக, அடிமட்டத் தலைவர்களான நகராட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் பீதி அடையாமல் முன்னெச்சரிக்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளச் செய்து, உறுதியான பங்களிப்பை வழங்க வேண்டும்.

கோவிட் தொற்றுநோயின் தற்போதைய கட்டம் குறித்து, அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், நகராட்சியின் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், தூய்மை, சுகாதாரம், தனி நபர் இடைவெளியைப் பராமரித்தல் போன்றவை குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளாகும். எனவே நகராட்சி அமைப்புகள் தொடர்ந்து இத்தகைய செயல்பாடுகளைச் செய்து வரத் தேவையான திட்டமிடல் மற்றும் செயலாக்கத்தை வழங்க மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.



(Release ID: 1629408) Visitor Counter : 141