மத்திய அமைச்சரவை
வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிராமப்புற இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.
விவசாயிகளுக்குப் பயனளிக்கும், வேளாண்மைத் துறையில் நிலைமாற்றம் ஏற்படுத்தும், தடம் பதிக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
Posted On:
03 JUN 2020 5:04PM by PIB Chennai
அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம்
அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. வேளாண்மைத் துறையில் நிலைமாற்றத்தை உருவாக்கி, விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கச் செய்வதற்கான லட்சிய நோக்கத்துடனான நடவடிக்கையாக இது இருக்கும்.
பின்னணி :
பெரும்பாலான வேளாண் பொருள்கள் உற்பத்தியில் இந்தியா உபரி நிலையில் இருந்தாலும், குளிர்பதன வசதி, பதப்படுத்தல் வசதி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் என்ற கத்தி தலைக்கு மேல் தொங்குவதால் தொழில் நிறுவனங்களிடம் உத்வேகம் இல்லாத நிலையில் ஏற்றுமதி வசதி ஆகியவற்றில் முதலீடுகள் இல்லாததால், விவசாயிகள் நல்ல விலை பெற முடியாத நிலையில் உள்ளனர். அழுகும் தன்மை கொண்ட பொருள்கள் உற்பத்தியில், அபார விளைச்சல் கிடைக்கும் சமயங்களில் விவசாயிகள் பெருத்த நட்டம் அடைகின்றனர். போதிய பதப்படுத்தல் வசதிகள் இருந்தால், இதில் பெரும் பகுதி நட்டத்தைக் குறைக்க முடியும்.
பயன்கள்:
அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம், தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய்வித்துகள், உணவு எண்ணெய்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருள்கள், அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அளவுக்கு மீறிய ஒழுங்குமுறை கட்டுப்பாட்டுத் தலையீடுகள் குறித்து தனியார் முதலீட்டாளர்களின் அச்சத்தை நீக்குவதாக இது இருக்கும்.
உற்பத்தி செய்தல், இருப்பு வைத்தல், கொண்டு செல்தல், விநியோகித்தல் மற்றும் வழங்குதலில் சுதந்திரம் கிடைப்பதால், பொருளாதார அளவீடுகளை செம்மைப்படுத்தும் வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் வேளாண்மைத் துறையில் தனியார் துறையினர் / வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஈர்க்கப்படும். குளிர்பதனக் கிடங்குகள் உருவாக்கலில் முதலீடு மற்றும் உணவு வழங்கல் சங்கிலித் தொடர் அமைப்பை நவீனப்படுத்தலில் முதலீடு கிடைக்க உதவிகரமாக இருக்கும்.
நுகர்வோரின் நலன்களுக்குப் பாதுகாப்பு அளித்தல்
ஒழுங்குமுறை சூழலை கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்துள்ள நிலையில், நுகர்வோரின் நலன்கள் பாதுகாக்கப்படுவதையும் அரசு உறுதி செய்துள்ளது. போர், பஞ்சம், அசாதாரணமான விலை உயர்வு மற்றும் இயற்கைப் பேரிடர் போன்ற சூழ்நிலைகளில், இதுபோன்ற பொருள்களை ஒழுங்குபடுத்துவதற்கும் இந்தத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், மதிப்புச் சங்கிலித் தொடர் வசதி ஏற்படுத்தும் திறன் அளவு மற்றும் ஏற்றுமதியாளரின் ஏற்றுமதிக்கான தேவை ஆகியவற்றுக்கு இதுபோன்ற கையிருப்பு வரம்பு அமலாக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். எனவே, வேளாண்மைத் துறையில் முதலீடு செய்வதில் அவர்களுடைய ஆர்வம் குறையாமல் இருப்பது உறுதி செய்யப்படும்.
அறிவிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தம், விலை ஸ்திரத்தன்மையை உருவாக்குவதுடன், விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்க உதவியாகவும் இருக்கும். சேமிப்புக் கிடங்கு வசதிகள் இல்லாததால் வேளாண் பொருள்கள் வீணாவதைத் தடுக்கவும் இது உதவியாக இருக்கும்.
வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு தடங்கல் இல்லாத வர்த்தகம்
`வேளாண் உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாடு மற்றும் வசதி ஏற்படுத்துதல்) அவசரச் சட்டம், 2020' -க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பின்னணி
விவசாயிகள் தங்களுடைய வேளாண்மை உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகளால் சிரமப்படுகின்றனர். அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண் விளைபொருள் விற்பனைக்குழு வளாகங்களுக்கு வெளியே, தங்கள் விளைபொருள்களை விவசாயிகள் விற்பதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. மாநில அரசுகள் போன்ற பதிவு பெற்ற உரிமதாரர்களுக்கு மட்டுமே தங்கள் விளை பொருள்களை விற்க வேண்டும் என்று விவசாயிகளுக்குக் கட்டுப்பாடு உள்ளது. மேலும், மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வேளாண் விளைபொருள் விற்பனைக்குழு சட்டங்கள் அமலில் இருப்பதால், பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் வேளாண் விளைபொருள்களை தாராளமாகக் கொண்டு செல்வதில் தடங்கல்கள் இருக்கின்றன.
பயன்கள்
வேளாண் விளைபொருள்கள் விற்பனை மற்றும் கொள்முதலில் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு சுதந்திரம் அளிக்கும் சூழ்நிலையை அளிப்பதாக இந்த அவசரச் சட்டம் இருக்கும். மாநில வேளாண் உற்பத்திப் பொருள் சந்தைப்படுத்துதல் சட்டங்களின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட சந்தை வளாகங்களுக்கு வெளியே, மாநிலங்களுக்கு இடையில் மற்றும் மாநிலத்துக்குள் வர்த்தகம் மற்றும் வியாபாரம் செய்வதை ஊக்குவிப்பதாக இது இருக்கும். நாட்டில் பெருமளவு கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வேளாண்மைச் சந்தைகளைத் திறந்துவிட்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக உள்ளது.
இது விவசாயிகளுக்கு அதிக வாய்ப்புகளை அளிப்பதாக, சந்தைப்படுத்தும் செலவுகளைக் குறைப்பதாக இருக்கும். விவசாயிகளுக்கு நல்ல விலைகள் கிடைக்க உதவியாக இருக்கும். அபரிமிதமான விளைச்சல் கிடைத்த பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு, பற்றாக்குறை உள்ள பகுதிகளில் விற்கும் வாய்ப்பின் மூலம் நல்ல விலைகள் கிடைக்க உதவியாக இருக்கும். எலெக்ட்ரானிக் முறையில் தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்வதற்கு, கணினி மூலமான விற்பனைத் தளத்தின் மூலம் விற்பதற்கும் இந்த அவசரச் சட்டம் வகை செய்கிறது.
ஒரே இந்தியா, ஒரே வேளாண் சந்தை
இந்த அவசரச் சட்டம், வேளாண் விளைபொருள் விற்பனைக்குழுக்களுக்கு வெளியே வர்த்தகம் செய்ய கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கி, கூடுதல் போட்டி நிலை காரணமாக அதிக விலை பெற விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரே இந்தியா, ஒரே வேளாண் சந்தையை உருவாக்க நிச்சயமாக இது வழிவகுத்து, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளுக்கு பொன்னான அறுவடைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு அடித்தளம் இடுவதாக இருக்கும்.
வணிக உதவியாளர்கள், குழு சேர்ப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், பெரிய அளவிலான சில்லரை வியாபாரிகள், ஏற்றுமதியாளர்களுடன் சேர்ந்து செயல்படுவதற்கு விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பு.
`விவசாயிகள் (அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் குறித்த ஒப்புதல் குறித்த அவசரச் சட்டம், 2020' -க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பின்னணி
சிறு சிறு நில உரிமையாளர்கள் இருப்பதால் இந்திய விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வானிலையைச் சார்ந்திருத்தல், உற்பத்தியில் நிச்சயமற்ற நிலை மற்றும் ஊகிக்க முடியாத மார்க்கெட் நிலவரம் போன்ற பலவீனங்கள் உள்ளன. இதனால் இடுபொருள், விளைச்சல் மேலாண்மையில் பாதிப்பை ஏற்படுத்தி, வேளாண்மையை ஆபத்து நிறைந்ததாக ஆக்கியுள்ளது.
பயன்கள்
சுரண்டல் குறித்த எந்த அச்சமும் இல்லாமல், சம போட்டி நிலையில், வணிக உதவியாளர்கள், குழு சேர்ப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், பெரிய அளவிலான சில்லரை வியாபாரிகள், ஏற்றுமதியாளர்களுடன் சேர்ந்து செயல்படுவதற்கு விவசாயிகளுக்கு அதிகாரமளிக்க இந்த அவசரச் சட்டம் வகை செய்கிறது. வசதி ஏற்படுத்துபவருக்கு விவசாயிகள் கொடுக்கும் விலையில் நிச்சயமற்ற நிலை ஆபத்தை இது மாற்றும். நவீனத் தொழில்நுட்பம் மற்றும் நல்ல இடுபொருள்கள் பெறுவதற்கு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். விற்பனை செய்வதற்கான செலவை இது குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும்.
இந்திய வேளாண் உற்பத்திப் பொருள்களை உலகச் சந்தையில் வழங்குவதற்கான சங்கிலித் தொடர் கட்டமைப்பு வசதியை உருவாக்குவதில் தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்கான தூண்டுகோலாக இந்த அவசரச் சட்டம் இருக்கும். உயர் மதிப்பு வேளாண்மைக்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைகளை விவசாயிகள் பெறுவர். அதுபோன்ற வேளாண் பொருள்களுக்கான சந்தையை உருவாக்க முடியும்.
விவசாயிகள் நேரடி மார்க்கெட்டிங் செய்ய முடியும். அதனால் இடைத்தரகர்கள் நீக்கப்படுவார்கள். இதனால் விற்கும் விலை முழுவதும் விவசாயிகளுக்கே கிடைக்கும். விவசாயிகளுக்குப் போதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. குறைகளை நிவர்த்தி செய்ய தெளிவான காலக்கெடு நிர்ணயித்து, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு செயல் திறன்மிக்க நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் நலனில் அரசு உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளது
வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களுக்கு உத்வேகம் அளிக்க, தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் கடன் அட்டை மூலம் சலுகைகளுடன் கூடிய கடன் வசதி, வேளாண் கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி வசதி, பிரதமரின மத்ஸ்ய சம்பட யோஜ்னா மற்றும் மீன்வளத்தைப் பலப்படுத்த பிற நடவடிக்கைகள், கோமாரி மற்றும் கன்றுவீச்சு தடுப்பூசி, மூலிகை சாகுபடி ஊக்குவிப்பு, தேனீ வளர்ப்பு ஊக்குவிப்பு, பசுமைச் செயல்பாடு உள்ளிட்டவை இதில் அடங்கும்.
பிரதமரின் கிசான் திட்டம் மூலம் 9.25 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. முடக்கநிலை அமல் காலத்தில் இதுவரையில் ரூ.18,517 கோடி இதன் மூலம் வழங்கப் பட்டுள்ளது. பிரதமரின் பசல் பீமா திட்டத்தின் கீழ் ரூ.6003.6 கோடி அளவுக்கான கேட்புரிமைகளுக்கு முடக்கநிலை காலத்தில் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அரசு மிக சமீப காலத்தில் மேற்கொண்ட சில நடவடிக்கைகளாக மட்டுமே இவை உள்ளன. கடினமாக உழைக்கும் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு, தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பதன் உறுதியான நிலைப்பாட்டைக் காட்டுபவையாக இவை உள்ளன.
(Release ID: 1629141)
Visitor Counter : 432
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada