பிரதமர் அலுவலகம்

மத்திய வேலைவாய்ப்பு உத்தரவாதக் கவுன்சிலின் 21-வது கூட்டத்துக்கு தலைமைவகித்தார் மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர்

Posted On: 02 JUN 2020 9:16PM by PIB Chennai

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் (Mahatma Gandhi NREGA) 2005-இன் உட்பிரிவு 10-இன்கீழ் அமைக்கப்பட்ட மத்திய வேலைவாய்ப்பு உத்தரவாதக் கவுன்சிலின் 21-வது கூட்டம், 2.6.2020-இல் நடைபெற்றது. இதில், காணொளிக் காட்சி மூலம், மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசிய திரு.நரேந்திர சிங் தோமர், கிராமப்பகுதி மக்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு வழங்கும் மிகப்பெரும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களில் ஒன்றாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் திகழ்வதாகத் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், 261 வகையான வேலைவாய்ப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில், 164 வகையான பணிகள், வேலைவாய்ப்பு மற்றும் அதுதொடர்பான நடவடிக்கைகளாக உள்ளது. தனிநபர் சொத்துக்கள், நீர் சேமிப்பு/நீர்ப்பாசனம் தொடர்பான சொத்துக்கள் உருவாக்கத்துக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இது வேளாண் துறைக்கு உதவிகரமாக இருக்கும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்களின் ஊதியத்தை வங்கிக்கணக்கில் 100 சதவீதமும் செலுத்தச் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அதையொட்டி, பணிகளில் சமூகத்தணிக்கை செய்ய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 2020-21-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத வகையில், ரூ.61,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலால் எழுந்துள்ள நெருக்கடி காலத்தில், தேவைப்படும் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க, சுயசார்பு இந்தியா இயக்கத்தின் கீழ், கூடுதலாக ரூ.40,000 கோடிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே ரூ.28,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்


(Release ID: 1628921) Visitor Counter : 239