நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் மேலும் மூன்று மாநிலங்கள் இணைப்பு.

Posted On: 01 JUN 2020 3:14PM by PIB Chennai

ஒடிசா, சிக்கிம் மற்றும் மிசோராம் ஆகிய மூன்று மாநிலங்கள் 'ஒருங்கிணைந்த பொது விநியோக மேலாண்மை' திட்டத்தில் இணைந்ததாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு. ராம் விலாஸ் பஸ்வான் இன்று அறிவித்தார். தற்போதுள்ள அதே குடும்ப அட்டையை ஆதாரோடு இணைத்ததற்கு பின்னர் மின்னணு விற்பனை முனையக் கருவி மூலம் அதை உபயோகப்படுத்தி, நாட்டில் உள்ள மின்னணு விற்பனை முனையக் கருவியைப் பயன்படுத்தும் எந்த நியாய விலைக் கடையில் இருந்தும், தேசிய உணவு பாதுகாப்புத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தின் மூலம்  வாங்கிக் கொள்ளலாம். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பெயர்வுத்திறன் வசதி மூலம்  தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பலன்களை இந்த அமைப்பின் கீழ் பெறலாம்.

 

ஆந்திர பிரதேசம், பீகார், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையு, கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், தெலங்கானா, திரிபுரா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய 17 மாநிலங்களில் இந்த வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது. மேலும், தேசிய பெயர்வுத்திறன் வசதியை இதர மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு விரிவுபடுத்த, தொடர்புடைய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் அரசுகளுடன் இணைந்து உணவு மற்றும் பொது விநியோகத்துறை தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது.

 

இந்த முயற்சியில், மத்திய தேசிய தகவலியல் மையத்தின் குழுவினரோடு இணைந்து, இந்த மூன்று மாநிலங்களை தேசியத் தொகுப்புடன் இணைக்கத் தேவையான தயாரிப்பு நடவடிக்கைகளான மின்னணு விற்பனை முனையக் கருவி மென்பொருளை மேம்படுத்துதல், தேசிய ஒருங்கிணைந்த பொது விநியோக மேலாண்மை மற்றும் அன்னவித்ரான் இணையதளங்களோடு இணைத்தல், மத்திய களஞ்சியத்தில் குடும்ப அட்டைகள்/பயனாளிகளின் தகவல்களை கிடைக்கச் செய்தல் மற்றும் தேசிய பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகளுக்குத் தேவைப்படும் சோதனைகளும் செய்து முடிக்கப்பட்டன.

 

மேற்கண்ட அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த பின்னர், 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கிடையேயான பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் இந்த மாநிலங்களில் ஜூன் 2020 முதல் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. உத்திரகாண்ட், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மேலும் மூன்று மாநிலங்கள் ஆகஸ்ட் 2020க்குள் தேசியத் தொகுப்பில் இணையும். எஞ்சியுள்ள 13 மாநிலங்களான மேற்கு வங்கம், அருணாச்சல் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, தில்லி, ஜம்மு & காஷ்மீர், லடாக், சண்டிகார், புதுச்சேரி, தமிழ்நாடு, சத்தீஸ்கர், அந்தமான் & நிகோபார் மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றை தேசியத் தொகுப்பில் இணைப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் துறை செய்து வருகிறது. மார்ச் 31, 2020க்குள் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் அனைத்து மாநிலங்களும்  சேர்க்கப்பட்டு, இந்தத் திட்டம் நாடு முழுவதும் செயல்பாட்டில் இருக்கும் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

 

***



(Release ID: 1628753) Visitor Counter : 194