பாதுகாப்பு அமைச்சகம்

ஆபரேசன் சமுத்திர சேது- இந்தியர்களை கொழும்பிலிருந்து ஏற்றிக்கொண்டு ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பல் தூத்துக்குடிக்குப் புறப்பட்டது.

Posted On: 01 JUN 2020 9:53PM by PIB Chennai

இந்தியக் கடற்படையின் ஜலஷ்வா கப்பல், 685 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு, இலங்கையின் கொழும்பிலிருந்து  ஜூன் 1 மாலை புறப்பட்டது. அது தமிழகத்திலுள்ள தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடையும்.

இந்திய அரசு தொடங்கிய வந்தே பாரத் இயக்கத்தின் கீழ், மேற்கொள்ளப்படும் இந்தியக் கடற்படையின் சமுத்திரசேது நடவடிக்கையின் பகுதியாக இந்தியர்களை கடல் வழியாகக் கொண்டுவரும் இந்தக் கப்பல் தனது மூன்றாவது பயணத்தைத் தொடங்கியுள்ளது.  

கொழும்பு துறைமுகத்தில் இன்று காலை நுழைந்த ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பல், ஏற்கனவே கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்த இந்தியர்களை ஏற்றிக்கொள்ளும் பணியில் கிழக்குப் பெட்டக முனையப் பகுதியில் ஈடுபட்டது.

கப்பலில் ஏறுவதற்கு முன்பு அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, உடைமைகள் கப்பலில் ஏற்றப்படுவதற்கு முன்பாக அவற்றின் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

கப்பலில் இன்று ஏற்றப்பட்ட 685 பேரில், 553 பேர் ஆண்கள், 125 பேர் பெண்கள், 7 பேர் குழந்தைகள். கப்பலில் முறையான தனிமைப்படுத்தும் நடைமுறையை உறுதிசெய்யும் வகையில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மண்டலங்கள் வழியாக அவர்கள் கப்பலில் ஏற்றப்பட்டனர். தனி நபர் இடைவெளி, கிருமி நீக்குதல், இதர பாதுகாப்பு நடைமுறைகள், கப்பல் ஊழியர்களால் கடுமையாகப் பின்பற்றப்பட்டன.

இந்தக் கப்பல் தூத்துக்குடியை ஜூன் 2-ஆம்தேதி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



(Release ID: 1628644) Visitor Counter : 166