ரெயில்வே அமைச்சகம்

ஷ்ராமிக் ரயில்களை இயக்குவதற்கான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு ரயில்வே அமைச்சகம் வேண்டுகோள்

Posted On: 30 MAY 2020 6:47PM by PIB Chennai

ஷ்ராமிக் ரயில்களை இயக்குவதற்கு உரிய ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடலை உறுதிப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு ரயில்வே அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தவித்து வரும் மக்களை ரயில் மூலம் அழைத்துச் செல்வதற்கான தேவை குறித்து சரியான முறையிலும், தெளிவாகவும் திட்டமிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

அதிகp போக்குவரத்து மிகுந்த வழித்தடங்களில் “ஷ்ராமிக் சிறப்பு” ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில், மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி, உணவு தானியங்கள், உரங்கள், சிமென்ட் போன்றவை எடுத்துச் செல்லப்படுகின்றன. அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் தொடர்வதை உறுதிப்படுத்தும் வகையில், அதிக அளவில் சரக்கேற்றும் பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இந்த காலகட்டத்தில், வேளாண் பொருள்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு சேர்ப்பதற்காக குறிப்பிட்ட நேர சரக்கு ரயில்களை அதிக அளவில் ரயில்வே இயக்கி வருகிறது.

மாநிலங்கள் கேட்டுக் கொண்டபடி, “ஷ்ராமிக் சிறப்பு” ரயில்களுக்கான பெட்டிகளை ரயில்வே தயார் செய்யும் நிலையில், ரயில் நிலையங்களுக்குப் பயணிகளை அழைத்து வராத நிலை பல சமயங்களில் நடந்துள்ளது. இதனால், அறிவிக்கப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில மாநிலங்கள், புலம் பெயர்ந்தவர்களை அனுப்பி வைக்கும் மாநிலங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை. இதனால், அந்த மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல முடியாமல் தடுக்கப்படுகிறது.

இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில் சேவைகளை இந்திய ரயில்வே இயக்கியுள்ளது. இதன்மூலம், சுமார் 54 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள் தங்களது மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இந்தப் பயணத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம், குடும்பநல அமைச்சகம் வகுத்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன


(Release ID: 1628158) Visitor Counter : 224