மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

இந்தியாவின் தேசிய செயற்கை புலனறிவு வலைத்தளம் www.ai.gov.in-ஐ தொடங்கிவைத்தார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.

Posted On: 30 MAY 2020 7:20PM by PIB Chennai

மோடி அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்ததை ஒட்டி, www.ai.gov.in என்ற பெயரில் இந்தியாவின் தேசிய செயற்கைப் புலனறிவு வலைத்தளத்தை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதி மற்றும் தொடர்புத் துறை அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத் தொடங்கிவைத்தார்.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து இந்த வலைத்தளத்தை உருவாக்கியுள்ளன. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்ஆளுகைப் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் தொழில்துறையின் NASSCOM ஆகியவை இணைந்து இந்த வலைத்தளத்தை இயக்கும். இந்தியாவில் செயற்கைப்புலனறிவு தொடர்பான முன்னேற்றங்களை அறிந்துகொள்வதற்காக ஒரே டிஜிட்டல் தளமாக இந்த வலைத்தளம் செயல்படும். இதில், செயற்கைப் புலனறிவு தொடர்பான கட்டுரைகள், ஸ்டார்ட்அப்கள், செயற்கைப் புலனறிவில் மூலதன நிதி, வளங்கள், நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை பற்றிப் பகிர்ந்து கொள்ளப்படும். மேலும், ஆவணங்கள், ஆய்வுக்கட்டுரைகள், அறிக்கைகள் ஆகியவையும் பகிரப்படும். செயற்கைப்புலனறிவு தொடர்பாக கற்றுக்கொள்ள முடிவதோடு, புதிய பணி வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்வதற்கும் தனி வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது, “இளைஞர்களுக்கான பொறுப்புள்ள செயற்கைப்புலனறிவு” என்ற இளைஞர்களுக்கான தேசியத் திட்டத்தையும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மற்றும் சட்டம்-நீதித்துறை அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் நோக்கம் என்பது, நமது நாட்டில் உள்ள இளம் மாணவர்களுக்கு அடித்தளத்தை வழங்குவது, நவீனகாலத்துக்கு ஏற்ப தொழில்நுட்ப மனநிலையை ஏற்படுத்துவது, அது தொடர்பான செயற்கைப் புலனறிவுத் திறனை உருவாக்குவது மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அளவில் எதிர்காலத்துக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளத் தேவையான செயற்கைப் புலனறிவுத் தொழில்நுட்பங்களைக் கிடைக்கச் செய்வது ஆகியவையே ஆகும். இந்தத் திட்டத்தை இன்டெல் இந்தியா-வுடன் இணைந்தும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் (DoSE&L) ஆதரவுடனும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்ஆளுகைப் பிரிவு உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலக் கல்வித்துறைகள் தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான உதவிகளை பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்  துறை (DoSE&L) செய்யும்.



(Release ID: 1628154) Visitor Counter : 215