ஜல்சக்தி அமைச்சகம்

சட்டீஸ்கரில் 2020-21இல் ஜல் ஜீவன் இயக்கத்தை அமல்படுத்த இந்திய அரசு ரூ.445 கோடி அனுமதித்துள்ளது.

Posted On: 29 MAY 2020 7:23PM by PIB Chennai

சட்டீஸ்கர் மாநில அரசு தங்களது 2020-21ஆம் ஆண்டுக்கான செயல்திட்டத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் பரிசீலனைக்கும், அனுமதிக்குமாக சமர்ப்பித்துள்ளது.  2024ஆம் ஆண்டுக்குள் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் நீண்டகால அடிப்படையில் குறிப்பிட்ட தரத்தில் போதுமான அளவில் குடிநீரை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஜல்சக்தி அமைச்சகமானது ஜல்ஜீவன் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.  இந்தத் திட்டத்துக்காக ரூ.3.60 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்கக் கூடிய இந்த இயக்கத்தின் கீழ் சட்டீஸ்கர் மாநில அரசு 2023-24ஆம் ஆண்டுக்குள் செயல்நிலை குடிநீர்க் குழாய் இணைப்புகளை (FHTC) முழுமையாக வழங்கிடத் திட்டமிட்டுள்ளது.  மாநிலத்தில் உள்ள 45 லட்சம் குடும்பங்களில் 20 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர்க்குழாய் இணைப்பு தர திட்டமிடப்பட்டுள்ளது.  அனைத்துக் குடும்பங்களையும் இந்தத் திட்டத்தின் கீழ் இணைப்பதே நோக்கமாகும்.  அதே சமயத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகள், தண்ணீரின் தரம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் எஸ்சி / எஸ்டி பிரிவினர் அதிகம் உள்ள குடியிருப்புகள்/கிராமங்கள், முன்னேறத் துடிக்கும் மாவட்டங்கள், சன்சார்டு ஆதர்ஷ் கிராம திட்டத்தில் உள்ள கிராமங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமைத் தரப்படுகிறது.  இந்த மாநிலத்தில் 2020-21ஆம் ஆண்டுக்குள் ஜல்ஜீவன் இயக்கத்தை அமல்படுத்த இந்திய அரசு ரூ.445 கோடியை அனுமதித்துள்ளது.

கோடைக்காலம் உச்சத்தில் இருக்கும் தற்போதைய நிலையிலும் பருவமழை நெருங்கி வரும் சூழலிலும் கோவிட்-19 பெருந்தொற்றால் நாடே முடங்கிக் கிடங்கும் நிலையில் தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பி வருகின்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தைத் தர வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும்.  இந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள் தொழில்திறன்களை முழுவதுமாகவோ அல்லது ஓரளவோ பெற்றிருக்கக் கூடியவர்கள்.  எனவே கிராமங்களின் குடிநீர் விநியோகம் தொடர்புடைய வேலைகளை அதாவது பிளம்பிங், ஃபிட்டிங், நீர்சேகரிப்பு பணிகளை இவர்களுக்குத் தருவதன் மூலம் இவர்களின் சேவைகளைத் திறம்படப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.  ஒவ்வொரு கிராமத்திலும் இவர்களை இத்தகைய வேலைகளில் ஈடுபடுத்தலாம்.  இதனால் தண்ணீர்ப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் நிலத்தடி நீர்மட்டத்தைப் போதுமான அளவுக்கு அதிகரிக்க முடிவதோடு விவசாயத்திற்குத் தண்ணீர் கிடைப்பதையும் உறுதி செய்யமுடியும்.  அதற்கும் மேலாக ஒவ்வொரு ஊரகக் குடும்பத்திற்கும் குடிநீர் வழங்குவதற்கு உதவமுடியும்.



(Release ID: 1627884) Visitor Counter : 201