எரிசக்தி அமைச்சகம்

லடாக் யூனியன் பிரதேசத்தில் மின்திட்டங்களுக்கான வாய்ப்புகளை தேசிய நீர்மின்சார எரிசக்திக் கழகம் ஆய்வு செய்கிறது.

Posted On: 29 MAY 2020 6:38PM by PIB Chennai

லடாக் யூனியன் பிரதேசத்தில் நீர் மற்றும் சூரிய சக்தி மின்சாரத் திட்டங்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான தேசிய நீர்மின்சார எரிசக்திக் கழகம் (National Hydroelectric Power Corporation - NHPC) -யின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. .கே.சிங், லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் திரு. ஆர்.கே. மாத்தூரை புதுதில்லி ஜம்மு காஷ்மீர் பவனில் 29.05.2020 அன்று சந்தித்தார். லே-லடாக் பிராந்தியத்தில் கண்டறியப்பட்ட பல்வேறு நீர் மற்றும் சூரிய சக்தி மின் திட்டங்களைச் செயல்படுத்துவதன் வழிவகைகள் குறித்தும், தேசிய நீர்மின்சார எரிசக்திக் கழகத்தின் உத்தேசத் திட்டங்கள் பற்றியும் விவாதிப்பதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்த விவாதத்தின் போது, துணை நிலை ஆளுநரிடம், தேசிய நீர்மின்சார எரிசக்திக் கழகத்தின் தலைவர், லடாக்கில் நீர்மின்திட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தும் வகையில், லேயில் 45 மெகாவாட் நிம்மோ பாஸ்கோ, கார்கிலில் 44 மெகாவாட் சுடக் நீர்மின் திட்டங்களை அமைப்பதில் தமது நிறுவனத்தின் சாதனை குறித்து விளக்கினார். லடாக்கில் கல்சி (80 மெகாவாட்), கனியுஞ்சே (45 மெகாவாட்), தக்மாசிங் ( 30 மெகாவாட்) ஆகிய 3 நீர்மின் திட்டங்களையும், பியாங்கில் 50 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின்திட்டத்தையும் செயல்படுத்தும் தேசிய நீர்மின்சார எரிசக்திக் கழகத்தின் வருங்காலத் திட்டங்களையும் அவர் விளக்கினார். இத்திட்டங்களின் தொழில்நுட்ப - வணிக ரீதியிலான சாத்தியக்கூறுகளை விளக்கிய தேசிய நீர்மின்சார எரிசக்திக் கழகத்தின் தலைவர், இப்பிராந்தியத்தில் சூரிய ஒளிக்கதிர் அதிக அளவில் இருப்பதைப் பயன்படுத்தி, நீர் மின்திட்டம் மற்றும் சூரியசக்தி ஆகியவற்றின் கலவையான திட்டத்தைச் செயல்படுத்துவது பற்றியும் உத்தேசித்திருப்பதாகக் கூறினார்.

கடினமான சூழ்நிலைகளுக்கு இடையே, இரண்டு நீர்மின் திட்டங்களை அமைப்பதிலும், அவற்றை சுமுகமாக இயக்கிப் பராமரிப்பதிலும் தேசிய நீர்மின்சார எரிசக்தி கழகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை துணைநிலை ஆளுநர் பாராட்டினார். தேசிய நீர்மின்சார எரிசக்தி கழகத்தின் எதிர்காலத் திட்டங்களின் தொழில்நுட்ப - வணிக ரீதியாலான சாத்தியக்கூறுகள் பற்றி ஆழமாக ஆய்வு நடத்துமாறு கூறிய அவர், தேசிய நீர்மின்சார எரிசக்தி கழகத்தின் இந்த மின்திட்டங்களைச் செயல்படுத்தி, விரைவான மேம்பாடு அடைய லடாக் யூனியன் பிரதேசம் இயன்ற அனைத்து ஆதரவையும் அளிக்கும் என்று ஊக்கமளித்தார்.

***


(Release ID: 1627882) Visitor Counter : 247