நிதி அமைச்சகம்

வாடிக்கையாளர் தகவல்களை அறிந்துகொள்ளும் முறை மூலம் (e-KYC) ஆதார் சார்ந்த உடனடி பான் வசதியைப் பெறும் முறையை நிதி அமைச்சர் அறிமுகப்படுத்தினார்

Posted On: 28 MAY 2020 4:42PM by PIB Chennai

மத்திய நிதி நிலை அறிக்கையில் செய்யப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, உடனடியாக நிரந்தரக் கணக்கு எண்ணை (கிட்டத்தட்ட நிகழ் நேரத்தில்) ஒதுக்கும் வசதியை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இன்று முறைப்படித் தொடங்கி வைத்தார். ஆதார் எண்ணையும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணையும் வைத்திருக்கும் நிரந்தரக் கணக்கு எண் விண்ணப்பதாரர்களுக்கு இந்த வசதி தற்போது கிடைக்கும். காகிதமில்லா முறையில் செய்யப்படும் இந்த ஒதுக்கீடு மூலம், மின்-நிரந்தக் கணக்கு எண் விண்ணப்பதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

 

உடனடி நிரந்தரக் கணக்கு எண் வசதி விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய நிதி நிலை அறிக்கை, 2020இல் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். "நிரந்தரக் கணக்கு எண் மற்றும் ஆதார் பரிமாற்றத்தை கடந்த நிதி நிலை அறிக்கையில் நான் அறிமுகப்படுத்தி இருந்தேன். இதற்குத் தேவைப்படும் விதிகள் ஏற்கனவே வெளியிட்டப்பட்டு விட்டன. நிரந்தரக் கணக்கு எண் ஒதுக்கீட்டை மேலும் எளிமைப்படுத்தும் விதத்தில், விரிவான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் தேவை இல்லாமலேயே, ஆதாரின் அடிப்படையில் உடனடியாக நிரந்தரக் கணக்கு எண்ணை இணையத்தில் ஒதுக்கீடு செய்யும் முறையை நாங்கள் விரைவில் அறிமுகப்படுத்துவோம்," என்று நிதி நிலை அறிக்கை உரையில் பத்தி 129-இல் நிதி அமைச்சர் கூறி இருந்தார்.

 

ஆதார் சார்ந்த மின்-கே ஒய் சி (e-KYC) என்கிற வாடிக்கையாளர் தகவல்களை அறிந்துகொள்ளும் முறை மூலம் உடனடி நிரந்தரக் கணக்கு எண் வசதி இன்று முறைப்படித் தொடங்கப்பட்டது. ஆனால், இதன் 'மாதிரிப் பதிப்புசோதனை முறையில் வருமான வரித் துறையின் மின்-தாக்கல் இணையதளத்தில் 12 பிப்ரவரி, 2020 அன்று தொடங்கப்பட்டது. அன்று முதல், வெறும் பத்து நிமிடங்களுக்குள்ளாக நிரந்தரக் கணக்கு எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 25 மார்ச் 2020 வரை 6,77,680 உடனடி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

***



(Release ID: 1627582) Visitor Counter : 398