விவசாயத்துறை அமைச்சகம்

வட இந்தியாவில் வெட்டுக்கிளி படையெடுப்பு அலைக்கு இடையே, பாதிக்கப்பட்ட மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்

Posted On: 27 MAY 2020 8:42PM by PIB Chennai

மேற்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் வெட்டுக்கிளி கூட்டம் படையெடுத்து வரும் நிலையில், பாதிப்புக்குள்ளான மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசத்தில் அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று வரை, ராஜஸ்தானில், பார்மர், ஜோத்பூர், நாகாவுர், பிக்கானிர், கங்காநகர், ஹனுமான்கர், சிகார், ஜெய்ப்பூர் மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தில், சத்னா, குவாலியர், சீதி, ராஜ்கர், பைத்துல், தேவாஸ், அகர் மால்வா மாவட்டங்களிலும் வெட்டுக்கிளி தாக்குதல் அதிகமாக உள்ளது.

பாதிக்கப்பட்ட மாநிலங்களில், இதுவரை 200 வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுக்கான சுற்று வட்டார அலுவலகங்கள், ஆய்வுகளை நடத்தி வருவதுடன், மாவட்ட நிர்வாகம் மற்றும் விவசாயக் கள எந்திரத்தின் ஒருங்கிணைப்புடன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மாநில விவசாயத்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முழுமூச்சாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் 21 மாவட்டங்கள், மத்தியப் பிரதேசத்தில் 18 மாவட்டங்கள், பஞ்சாபில் ஒரு மாவட்டம், குஜராத்தில் 2 மாவட்டங்களில் இதுவரை வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாலைவனப் பகுதிகளுக்கு அப்பாலும், வெட்டுக்கிளி படையெடுப்பைத் தீவிரமாகக் கட்டுப்படுத்த ராஜஸ்தானில் அஜ்மீர், சித்தோர்கர், டவ்சா ஆகிய இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை, (26.05.2020 வரை), ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 303 இடங்களில், வெட்டுக்கிளிக்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை, 47,308 ஹெக்டேர் பரப்பில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில விவசாயத்துறையின் ஒருங்கிணைப்புடன் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு சுற்றுவட்டார அலுவலகங்கள் மேற்கொண்டுள்ளன. பூச்சிகொல்லி மருந்து தெளிக்க 89 தீயணைப்பு படைப்பிரிவும், 120 ஆய்வு வாகனங்களும், 47 தெளிப்பு உபகரணங்களுடன் கூடிய கட்டுப்பாட்டு வாகனங்களும், தெளிப்பான்களுடனான 810 டிராக்டர்களும் தேவைக்கேற்ப தீவிர வெட்டுக்கிளி ஒழிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

******



(Release ID: 1627365) Visitor Counter : 325