குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஆந்திரப் பிரதேசத்தின் உதயகிரிக்கு குடிநீர் திட்டத்துக்கான சாத்தியங்கள் பற்றி ஆராய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பை குடியரசு துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

Posted On: 25 MAY 2020 1:48PM by PIB Chennai

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அமிதாப் காந்த், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் திரு. பரமேஸ்வரன் ஐயர், நீர் வளங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கா புதுப்பிப்பு செயலாளர் திரு யு.பி.சிங் ஆகியோருடன் குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வறட்சி பகுதியான உதயகிரியின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத் தேவைகளை நிறைவேற்றும் பல்வேறு வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இப்பகுதி மக்களின் கவலைகளை, கூட்டத்தினருடன் குடியரசு துணைத் தலைவர் பகிர்ந்து கொண்டார்.

தற்போது குடியரசு துணைத் தலைவராக இருக்கும் திரு. வெங்கையா நாயுடு, உதயகிரி தொகுதியில் இருந்துதான் கடந்த 1978ம் ஆண்டில் முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.  அப்பகுதி மக்களை, குடியரசு துணைத் தலைவர் அண்மையில் சந்தித்துப் பேசினார். அவர்களின் நலன் குறித்து விசாரித்த போது, உதயகிரி பகுதியில் நிலத்தடி நீர் வறண்டு விட்டதாகவும், குளங்கள், ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு விட்டதாகவும், பல்வேறு நீர் விநியோகத் திட்டங்கள், நீர் தேவைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவும் குடியரசு துணைத் தலைவரிடம் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ச்சியாக 7வது ஆண்டாக இப்பகுதியில் போதிய அளவுக்கு மழைப்பொழிவு இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.  கிருஷ்ணா வடிகால் மற்றும் சோமசீலா திட்டத்தில் இருந்து உதயகிரிக்கு நீர் கொண்டு வரும் வழிகளைக் கண்டறிய வேண்டும் என அவர்கள் திரு. வெங்கையா நாயுடுவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆந்திர அரசுடன் ஆலோசித்து ஆய்வு செய்வதாக இன்றைய கூட்டத்தில், குடியரசு துணைத் தலைவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் குறித்து மத்திய நீர் ஆணையத்துடன் ஆலோசிக்கும்படி, நீர்வளத்துறை செயலாளருக்கு குடியரசு துணைத் தலைவர் ஆலோசனை வழங்கினார்.  தண்ணீர் பிரச்னையைப் போக்க நீர் இணைப்பு திட்டம் உட்பட ஆந்திர அரசு மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகள் குறித்து ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்தும் அவர் ஆலோசனை வழங்கினார்.    

                                                         ----



(Release ID: 1626733) Visitor Counter : 224