மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

UMANG செல்போன் ஆப் மூலம் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் வானிலைச் சேவைகள்

Posted On: 22 MAY 2020 6:57PM by PIB Chennai

அரசின் சேவைகளை ஆன்லைனில் கிடைக்கச் செய்வதன் மூலம் குடிமக்களின் வாழ்வை எளிதாக்குவதற்கான பல்வேறு முயற்சிகளை MeitY எடுத்து வருகிறது. டிஜிட்டல் இந்தியா செயல்திட்ட முயற்சிகளை மேம்படுத்தும் வகையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் சேவைகளை ``UMANG App'' மூலம் அளிக்க MeitY ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் http://mausam.imd.gov.in  இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள பின்வரும் 7 சேவைகள் UMANG செல்போன் செயலியில் இடம் பெற்றிருக்கும்:

  • இப்போதைய வானிலை - 150 நகரங்களில் இப்போதைய வெப்ப நிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், திசை  குறித்த தகவல்கள் தினமும் 8 முறை அளிக்கப்படுகிறது. சூரிய உதயம்/ சூரியன் மறைதல் மற்றும் நிலவு உதயம் / நிலவு மறைதல் நேரங்களும் தெரிவிக்கப்படும்.
  • நவ்காஸ்ட் - இப்போதைய தகவல் என்ற இந்தப் பிரிவில், இந்தியாவில் 800 இடங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ளூர் பகுதி சார்ந்த வானிலை மாற்றங்கள், அவற்றின் தீவிரத்தன்மை குறித்த தகவல்கள் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மாநில வானிலை ஆராய்ச்சி மையங்கள் மூலம் அளிக்கப்படும். வானிலை மோசமாக இருந்தால், அதன் தாக்கம் பற்றியும் எச்சரிக்கை தகவலில் இடம் பெறும்.
  • நகருக்கான முன்னறிவிப்பு -  இந்தியாவில் சுமார் 450 நகரங்களில், கடந்த 24 மணி நேரத்தில் நிலவிய வானிலை மற்றும் 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
  • மழை அளவு தகவல்கள் - அகில இந்தியாவில் மாவட்ட அளவிலான மழையளவுகள், தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் ஒட்டுமொத்தத் தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
  • சுற்றுலா முன்னெச்சரிக்கை - இந்தியாவில் சுமார் 100 சுற்றுலாத் தலங்களின் வானிலை நிலவரத்தில் கடந்த 24 மணி நேர நிலவரம், அடுத்த 7 நாட்களுக்கான முன்னெச்சரிக்கைத் தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
  • எச்சரிக்கைகள்- மோசமான வானிலை நெருங்குவது பற்றி குடிமக்களை எச்சரிக்கும் தகவல் அளிக்கப்படும். அது சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என நிறக்குறியீடுகள் தரப்பட்டதாக இருக்கும். சிவப்பு நிறக்குறியீடாக இருந்தால் மிக மோசமான பாதிப்பு என்ற வகைப்பாட்டுக்குரியது என அர்த்தம். அடுத்த ஐந்து நாட்களுக்கான தகவலாக, அனைத்து மாவட்டங்களுக்கும் தினமும் 2 முறை இந்தத் தகவல் அளிக்கப்படும்.
  • புயல் - புயல் குறித்த பின்தொடர்தல் தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகள் அளிக்கப்படும். எந்த இடத்தில், எந்த நேரத்தில் கடக்க வாய்ப்புள்ளது என்ற உத்தேசத் தகவல்களும் தெரிவிக்கப்படும். ஏற்படக் கூடிய தாக்கம் அடிப்படையிலான எச்சரிக்கைகள், பகுதி / மாவட்ட அளவிலானதாக அளிக்கப்படும். ஆபத்து ஏற்படும் எனக் கருதப்படும் பகுதிகளில் மக்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவிகரமாக இருக்கும்.


(Release ID: 1626359) Visitor Counter : 278