மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

முடக்கநிலையால் சிக்கித் தவித்த ஜவஹர் நவோதயா வித்யாலயா மாணவர்கள் பத்திரமாக வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உறுதி செய்துள்ளது - மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்

Posted On: 21 MAY 2020 3:25PM by PIB Chennai

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 173 ஜவஹர் நவோதயா வித்யாலயா (ஜே.என்.வி.) பள்ளிகளில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை முடக்கநிலை காலத்தில் வேறு இடங்களுக்குப் பத்திரமாக அழைத்துச் செல்லும் பணியை  நவோதயா வித்யாலயா சமிதி  2020 மே 15ஆம் தேதி வெற்றிகரமாக முடித்துள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் `நிஷாங்க்' தெரிவித்துள்ளார்.

இப்போது பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 661 ஜே.என்.வி.களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, 2.60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, தரமான கல்வி இலவசமாக அளிக்கப் படுகிறது.

கோவிட்-19 சூழல் காரணமாக, கோடை விடுமுறை அட்டவணையை முன்தேதிக்கு மாற்றிக் கொண்டு, 21.3.2020இல் இருந்து நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகள் மூடப்பட்டன.

நவோதயா வித்யாலயா சமிதிகளின் பெரும்பாலான மாணவ, மாணவியர் நாடு தழுவிய முடக்கநிலை அமல் செய்வதற்கு முன்னதாகவே தங்களுடைய வீடுகளுக்கு (பெரும்பாலும் அந்த மாவட்டத்துக்குள்) சென்றுவிட்டனர். இருந்தபோதிலும் 173 ஜே.என்.வி.களில் 3169 வெளியூர் மாணவ, மாணவியரும், ஜே.இ.இ. முதன்மைத் தேர்வுக்குத் தயார் செய்வதற்காக புனேவில் உள்ள சிறப்புமையத்தில் வகுப்புகளில் பங்கேற்ற 12 பேரும் தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியாமல் போனது.

முடக்கநிலை காலம் மேலும் நீட்டிக்கப்பட்டதால், வெளியூர் மாணவர்கள் (மாணவிகள் உள்பட), பெரும்பாலும் 13-15 வயதுப் பிரிவினராக உள்ளவர்கள் அமைதியிழந்து, கடந்த 6 மாதங்களாக குடும்பத்தினரை சந்திக்காத நிலையில் வீட்டு நினைவாகவே இருந்தனர்.

கூடிய விரைவில் இந்த மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு பல்வேறு வாய்ப்புகளை சமிதி ஆய்வு செய்து வந்தது. உள்துறை அமைச்சகம், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுடன் பல சுற்றுக்கள் பேச்சு நடத்தி, தேவையான அனுமதிகளை பெற்று, முடக்கநிலை காலத்திலும் சிறப்புப் பேருந்துகள் மூலமாக சாலை வழியாக அவர்களை அனுப்பி வைத்தது. மாணவர்களை அனுப்பும் பணி 2020 மே 9ஆம் தேதி வரையில் நீடித்தது. ஜாபுவா மாணவர்கள் 2020 மே 15ஆம் தேதி சொந்த ஊர் திரும்பியதுடன் இந்தப் பணி நிறைவுற்றது.

இந்த நடவடிக்கைகள் முழுவதையும் நவோதயா வித்யாலயா சமிதி திட்டமிட்டு தொடர்ச்சியாக செயல்படுத்தியுள்ளது. பேருந்துகளில் கிருமிநீக்கம் செய்தல், முகக் கவச உறைகள், கிருமிநாசினிகள், உணவு மற்றும் இதர தின்பண்டங்கள் வழங்குதல், அவர்களுக்குத் துணையாக ஆசிரியர்களை அனுப்புதல் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பயண நேரத்தின் போது மாணவர்களுக்கு வெளிப்புற உணவு எதுவும் தரப்படவில்லை. பயணத்தின் தொடக்கத்திலும், அவர்கள் சென்று சேர்ந்த இடத்திலும் மாவட்ட நிர்வாகங்களின் உதவியுடன் மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

நவோதயா வித்யாலயா சமிதி, கர்னால் (ஹரியானா), நவோதயா வித்யாலயா சமிதி. திருவனந்தபுரம் (கேரளா) ஆகிய மையங்களுக்கு 3060 கிலோ மீட்டர் தூரம் (வழியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம்) பயணம் தேவைப்பட்டது. நவோதயா வித்யாலயா சமிதி, போலங்கீர் (ஒடிசா), நவோதயா வித்யாலயா சமிதி, அன்னுபூர் (மத்தியப் பிரதேசம்) ஆகியவற்றிற்கு குறைந்தபட்சமாக 420 கிலோ மீட்டர் பயணம் தேவைப்பட்டது.

நவோதயா வித்யாலயா சமிதி, நைனிட்டால் (உத்தரகாண்ட்) மாணவர்கள் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா வழியாக நவோதயா வித்யாலயா சமிதி, வயநாடு (கேரளா) சென்று சேர்ந்தனர். நவோதயா வித்யாலயா சமிதி, சேனாபதி (மணிப்பூர்) மாணவர்கள் நாகாலாந்து, அசாம், மேற்குவங்கம், பிகார் மற்றும் உத்தரப்பிரதேசம் வழியாக நவோதயா வித்யாலயா சமிதி, ஜாபுவா (மத்தியப் பிரதேசம்) சென்று சேர்ந்தனர். இவர்கள் 2020 மே 15ஆம் தேதி பாதுகாப்பாகச் சென்று சேர்ந்தனர்.



(Release ID: 1625796) Visitor Counter : 193