அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அல்சைமர் காரணமாக ஏற்படும் ஞாபகமறதியைத் தடுக்க ஐ.ஐ.டி கௌஹாத்தி புதிய வழிகளைக் கண்டறிந்து வருகிறது

Posted On: 21 MAY 2020 1:39PM by PIB Chennai

அல்சைமர் நோயோடு தொடர்புடைய குறுகியகால ஞாபகமறதியைத் தடுப்பதற்கும் அல்லது குறைப்பதற்கும் உதவக்கூடிய புதிய யோசனைகளை கௌஹாத்தி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) உள்ள ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.

கௌஹாத்தி ஐ.ஐ.டி.யின் உயிர்அறிவியல், உயிர்ப் பொறியியல் துறையின் பேராசிரியர் விபின் ராமகிருஷ்ணன் மற்றும் கௌஹாத்தி ஐ.ஐ.டி.யின் மின்னணுவியல் மற்றும் மின் பொறியியல் துறை பேராசிரியர் ஹர்ஷல்நெமேட் இருவரும் இந்த ஆய்வுக்குழுவுக்குத் தலைமை வகிக்கின்றனர்.  அல்சைமரை ஏற்படுத்தும் நரம்புவேதிப் பொருள்களின் போக்குகளை இவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.  குறுகியகால ஞாபகமறதியோடு தொடர்புடையதாக இருக்கின்ற நரம்பு நச்சு மூலக்கூறுகள் மூளையில் சேகரமாவதைத் தடுக்கும் புதிய வழிமுறைகளையும் அவர்கள் கண்டறிந்து வருகின்றனர்

கௌஹாத்தி ஐ.ஐ.டி குழுவினர் மூளையில் நரம்பு நச்சு மூலக்கூறுகள் சேகரமாவதைத் தடுப்பதற்கு குறைந்த வோல்ட்டேஜ் மின்புலத்தைப் பயன்படுத்துதல் மற்றும் ட்ரோஜான் பெப்டிடைடுகளைப் பயன்படுத்துதல் போன்ற ஆர்வமூட்டும் வழிமுறைகளை ஆய்வறிக்கையாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் அல்சைமர் நோய்க்கான சிகிச்சையை மேம்படுத்துவது முக்கியமானதாக இருக்கிறது.  ஏனெனில் உலக அளவில் அல்சைமர் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பட்டியலில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை அடுத்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.  அல்சைமரோடு தொடர்புடைய ஞாபகமறதியால் இந்தியாவில் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*****


(Release ID: 1625789) Visitor Counter : 226