குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
கோவிட்டுக்குப் பிந்தைய சூழலில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, அந்நிய முதலீட்டை ஈர்ப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும் : மத்திய எம்எஸ்எம்இ துறை அமைச்சர் திரு கட்காரி
Posted On:
20 MAY 2020 5:21PM by PIB Chennai
கோவிட்டுக்குப் பிந்தைய சூழலில் முன்னேறிச் செல்ல தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் அந்நிய முதலீட்டுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவினரை மத்திய எம்எஸ்எம்இ, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்காரி கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமரால் எம்எஸ்எம்இ பிரிவினருக்காக அளிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகுப்பைப் பயன்படுத்தி, நடுத்தர மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் செயலில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறினார். ஃபரிதாபாத் தொழில்துறை அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் பொருட்கள் மறுசுழற்சிக்கான இந்திய அமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்களுடன் இரண்டு தனித்தனி காணொலி மாநாடுகள் மூலம் நாக்பூரிலிருந்து இன்று பேசிய அமைச்சர், இந்த நிவாரணத் தொகுப்பு உள்நாட்டு தொழில் துறைக்கு ஆற்றலளித்து புது வாழ்வு அளிக்கும் என்று கூறினார்.
நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகுப்பு, எம்எஸ்எம்இ பிரிவுக்கு கணிசமான அளவு உதவியாக இருக்கும் என்று திரு கட்காரி கூறினார். 31 மார்ச் 2020 வரையிலான காலத்தில் 6 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மறு கட்டமைக்கப்பட்டன. இந்த ஆண்டு 31 டிசம்பர் வரையிலான காலத்துக்குள் மேலும் 25 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மறுகட்டமைக்கப்படும். பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியத்துக்கான நிதியம், மற்ற நிதியங்களையும் இணைத்து, 50 ஆயிரம் கோடி ரூபாயாக வலுப்படுத்தப்படும்.
எம்எஸ்எம்இ பணப்புழக்கத்தை பங்குச் சந்தையுடன் இணைப்பது குறித்தும் அமைச்சர் உரையாற்றினார். நல்ல தரக் குறியீடு உள்ள பங்குகளைக் கொண்ட எம்எஸ்எம்இ பிரிவுகளில் மொத்த பங்குசந்தையில் 7.5 சதவிகிதத்தை பகிர்வதன் மூலம் இதுபோன்ற எம்எஸ்எம்இ அமைப்புகளுக்கு அரசு ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார். எம்எஸ்எம்இ துறைக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் அனைத்தையும் 45 நாட்களுக்குள் செலுத்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். இதேபோல் எம்எஸ்எம்இ பிரிவுகளுக்கான நிலுவை தொகைகளை வழங்குமாறு பெரிய நிறுவனங்களைத் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக திரு. கட்காரி கூறினார். எம்எஸ்எம்இ பிரிவினருக்கு சுமார் 40,000 கோடி ரூபாய் அளவிற்கான தொகை விடுவிக்கப்படுவதற்கு அமைச்சகத்தின் சமாதான் இணையதளம் உதவியுள்ளது என்று அவர் தெரிவித்தார். பெரிய நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள பொருட்களுக்கான ஆணைகளின் அடிப்படையில் எம்எஸ்எம்இ அமைப்புகளுக்கு கடன் வழங்குவதற்கான திட்டம் ஒன்றைக் கொண்டு வரவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
*****
(Release ID: 1625721)
Visitor Counter : 229