நிதி அமைச்சகம்

தொழில் துறையை அரசு முழுமையாக நம்புகிறது: இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII) கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்துரையாடினார்

Posted On: 20 MAY 2020 7:22PM by PIB Chennai

தொழில் துறையை அரசு முழுமையாக நம்புகிறது என மத்திய நிதி மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். வேலைகளை திறனுடனும், தொழில் அணுகு முறையுடனும் மேற்கொள்ள அவர் வலியுறுத்தினார். தொழிலாளர்களை கையாள்வதில் அனைவரும் ஏற்கக்கூடிய வழியை பின்பற்றும் மனநிலையை தொழில்துறையில் உருவாக்க வேண்டும்’’ என அவர் குறிப்பிட்டார்.

இந்திய தொழில் துறை கூட்டமைப்பு 125வது ஆண்டை எட்டியுள்ளது. இதை முன்னிட்டு அந்த அமைப்பினருடன்  காணொலி காட்சி மூலம் மத்திய நிதியமைச்சர் உரையாடினார். அந்த அமைப்புக்கு பாராட்டுத் தெரிவித்த திருமதி. சீதாராமன், சிஐஐ மற்றும் அதன் உறுப்பினர்கள் நாட்டில் முக்கிய பங்காற்றியதாகக் குறிப்பிட்டார். திட்டங்களை உருவாக்குவதில் சிஐஐ முன்மாதிரியாக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

தொழிலாளர்களுடன் நல்லுறவை மேம்படுத்த வேண்டும் எனவும், திறனற்ற தொழிலாளர்களுக்காகவும் தொழில்துறை திட்டமிட வேண்டும் என நிதியமைச்சர் கூறினார். திறனற்ற தொழிலாளர்களை ஈடுபடுத்துவதிலும், அனைத்து தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் தொழில்துறையின் அணுகுமுறை இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த திருமதி.சீதாராமன், கோவிட்-19க்கு முன்பே, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான தெளிவான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன என்றும் கிராமங்களில் உள்ள நிறுவனங்களுக்கு வங்கிசாரா நிதி நிறுவனங்கள் உதவும் என்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதிகள் கிடைக்க வங்கிகளுக்கு அரசு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறினார். வேளாண்துறை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நிதியமைச்சர், முழுமையான சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றார். இதற்காக 3 மாதிரி சட்டங்கள் மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. நில சீர்திருத்தங்களை பல மாநிலங்கள் தொடங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.



(Release ID: 1625692) Visitor Counter : 179