அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

என்ஐஎப்-பின் கொவிட்-19 சவால் போட்டியில் பொதுமக்கள் பங்கேற்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான புதுமையான தீர்வுகளை வழங்கியுள்ளனர்

Posted On: 17 MAY 2020 6:02PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பான இந்திய தேசிய புத்தாக்க அறக்கட்டளை, கொவிட்-19 (சி3) சவால் போட்டி மூலம் பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டறிந்துள்ளது. பெருந்தொற்றைச் சமாளிக்கத் தேவையான ஆலோசனைகள், புதுமையான யோசனைகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை மக்கள் தெரிவிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, மார்ச் 31-ம் தேதி முதல் மே மாதம் 10-ம் தேதி வரை இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 

புதிய யோசனைகளை உருவாக்குவதற்காக இதனை மேலும் பரப்புவதற்கு, தேசிய புத்தாக்க அறக்கட்டளை உதவிகளை வழங்கி வருகிறது. இந்தப் பிரச்சாரத்தின் கீழ், காலால் இயங்கும் கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினிக்கான கருவி, கிருமிநாசினியைத் தெளிக்கும் புதுமையான கருவி ஆகியவற்றுக்கு இந்த அறக்கட்டளை ஆதரவு அளித்துள்ளது.

காலால் இயங்கும் கருவியை தெலங்கானாவின் வாரங்கல்லைச் சேர்ந்த திரு. முப்பரபு ராஜூ என்பவர் வடிவமைத்துள்ளார். கொவிட்-19 சூழ்நிலைக்கு ஏற்ப மனிதர்கள் தொடாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவி, உரிய நேரத்தீர்வாகும். கைகளால் இல்லாமல், காலால் இந்தக் கருவியை இயக்கினால், கைகளைக் கழுவுவதற்கான சோப் மற்றும் தண்ணீரை அது வழங்கும்.   

 

மற்றொரு ஆதரவு பெற்ற கருவியான புதுமையான கிருமி நாசினி தெளிப்பான், சாலைகள், கதவுகள், வளாகங்கள், சுவர்கள் போன்ற பெரும் பரப்பிலான இடங்களில் கிருமிநாசினியைத் தெளிக்கும் திறன் கொண்டது. இந்த தெளிப்பானில் எதிரெதிர் திசையில் இயங்கக்கூடிய, அலுமினியத்தாலான இரண்டு விசிறிகள் உள்ளன.

இந்த கொவிட்-19 (சி3) போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாடு இதுபோன்ற மோசமான சூழ்நிலையில் உள்ளபோது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலமாக, புதுமையான தீர்வுகளை வழங்கி அவர்கள் உதவியுள்ளனர்.

********


(Release ID: 1624866) Visitor Counter : 203