உள்துறை அமைச்சகம்

மத்திய நிதியமைச்சரின் கட்டமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புக்கு உள்துறை அமைச்சர் பாராட்டு

Posted On: 16 MAY 2020 8:02PM by PIB Chennai

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று (மே 16) அறிவித்த பல்வேறு பொருளாதார கட்டமைப்புச் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா பாராட்டு தெரிவித்தார். “இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளுக்காக பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கும், மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும், “நிதியமைச்சரின் இந்த முடிவுகள் நமது பொருளாதாரத்துக்கும் சுயசார்பு பாரதத்தை  உருவாக்குவதற்கான நமது முயற்சிகளுக்கும் பெரிய ஊக்கமளிக்கும். பிரதமர் திரு. மோடியின் “சீர்திருத்தம், செயல்பாடு, மாற்று” என்ற தாரக மந்திரம் இந்தியாவின் கடந்த ஆறாண்டு கால அபாரமான வளர்ச்சிக்கு மூல காரணமாகும்” என்றார்.

நிலக்கரி உற்பத்தியில் இந்தியா தற்சார்பு நிலையை அடைவதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் எடுத்து வரும் நடவடிக்கையை பிரதமர் எடுத்து வருவதாகப் பாராட்டிய திரு. அமித் ஷா, “நிலக்கரித் துறையில் கட்டுமான மேம்பாட்டுக்காக ரூ. 50,000 கோடியை ஒதுக்கியதும், நிலக்கரித் தொழிலைத் தனியார் வணிகமயமாகப் பயன்படுத்த அனுமதிப்பதும் வரவேற்கத் தக்க கொள்கை சீர்திருத்தமாகும். இதன் மூலம் பலர் போட்டியிட வாய்ப்பு ஏற்படும். வெளிப்படைத் தன்மையும் நிலவும்” என்றார்.

பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக அதிகரிக்க வகை செய்தது, குறிப்பிட்ட ஆயுதங்கள், பாதுகாப்புத் தளங்களில் இறக்குமதிக்கு கால வரையறைப்படி தடை விதிப்பது ஆகியவை “இந்தியாவிலேயே உற்பத்தி செய்” என்ற கோட்பாட்டுக்கு ஊக்கமளிக்கும். நமது இறக்குமதியால் ஏற்படும் சுமையும் குறையும். ஒரு வலுவான, பாதுகாப்பான, வலிமைபடைத்த இந்தியாதான் மோடி அரசாங்கத்தின் முதன்மையான குறிக்கோள் ஆகும்” என்றார் உள்துறை அமைச்சர்.

விமானப் போக்குவரத்துத் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்காக எதிர்காலத்தில் பயன்தரக்கூடிய வகையிலான முடிவுகள் மேற்கொள்ளளப்பட்டதற்காக பிரதமரை திரு. ஷா பாராட்டினார். விமானம் பறப்பதற்கான வான்வெளிப் பகுதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் நமது விமானப் போக்குவரத்துத் துறை ஆண்டுக்குக் கூடுதலாக ரூ. 1000 கோடி பலன்பெறும். மேலும், பராமரிப்பு, பழுதுபார்ப்பு, இயக்கத்தின்  மீதான வரி விதிப்பு சீரமைக்கப்பட்டுள்ளது. இது விமானங்களைப் பராமரித்து, பழுதுபார்த்து, இயக்குவதில் இந்தியாவை உலகத்துக்கே மையமாக்க உதவும் என்றும் அமித் ஷா கூறினார்.

விண்வெளி, கட்டுமானம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்குத் தனியார் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் முடிவை வரவேற்ற உள்துறை அமைச்சர், “சமூகக் கட்டமைப்பில் தனியார் ஈடுபடுவதற்கும், விண்வெளிப் பணிகளில் தனியார் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கும் இடைவெளி நிதியாக ரூ. 8,100 கோடியை ஒதுக்குவது போன்ற முடிவுகளுக்காக பிரதமர் திரு. மோடியைப் போற்றுகிறேன். அதன் மூலம் தனியாரும் இந்திய விண்வெளிப் பயணத்தில் சக பயணிகளாக இடம்பெறுவர்” என்றும் கூறினார்.

 

*****


(Release ID: 1624742) Visitor Counter : 214