வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
ரியல் எஸ்டேட் துறையில் எளிதாக தொழில் செய்வதை உறுதிப்படுத்துவதுடன் வீடு வாங்குவோரின் நலனை பாதுகாக்கவும் அரசு உறுதி
Posted On:
13 MAY 2020 8:57PM by PIB Chennai
ரியல் எஸ்டேட் துறையில் தொழில் செய்வதை எளிதாக்குவதுடன், வீடுவாங்குவோரின் நலனைப் பாதுகாக்கவும், வீடு வாங்குவோருக்கு ஆதரவு அளிக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, வீடுவாங்குவோரின் நலனைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும், மாநிலங்களின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் அறிவுரைகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான பதிவு காலத்தை 6 மாதங்களுக்கு தானாக நீட்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தேவைப்பட்டால், மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவுரைகளை அனுப்பியுள்ளது. அதில், இயற்கைப் பேரிடர் போன்ற கோவிட்-19 தொற்று, ரியல் எஸ்டேட் திட்டங்களின் வழக்கமான பணிகளை கடுமையாக பாதித்துள்ளதால், இருதரப்பும் தானாகவே திட்டங்களுக்கான காலத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான பதிவு காலத்தையும் 6 மாதங்கள் ஒத்திவைக்க வேண்டும், கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்படும் சூழ்நிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மேலும் 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள், வீடுவாங்குவோருக்கு சில மாதங்கள் தாமதமானாலும் வீடுகள் / குடியிருப்புகள் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். அதேபோல, திட்டங்கள் நிறைவேற்றப்படுவது நிச்சயம் உறுதிப்படுத்தப்படும்.
(Release ID: 1623796)
Visitor Counter : 243