சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மண்டோலி சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் 19 தொற்று தடுப்பு நல மையத்தை பார்வையிட்டார் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்

Posted On: 10 MAY 2020 7:19PM by PIB Chennai

மத்திய மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் புதுதில்லி மண்டோலி சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் தொற்று தடுப்பு நல மையத்தில்  மேற்கொள்ளப்படும் ‘கோவிட் 19’ தொற்று தடுப்புப் பணிகளை இன்று (மே 10) சென்று பார்வையிட்டார். மண்டோலி காவல்துறையினரின் குடியிருப்புப் பகுதியாகும். மண்டோலியில் உள்ள சிறைச்சாலைப் பகுதியில் லேசான அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளிகளுக்காக போதிய அறைகள், படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளன.

பார்வையிட்ட பிறகு மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் பேசியதாவது:

“கோவிட் 19 தொற்றினைச் சமாளிப்பதற்காக போதுமான உடல்நலம் காக்கும் கட்டுமானம் மற்றும் இதர வசதிகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. அவை கோவிட் மருத்துவ மனைகளாகவே  முழுமையாக மாற்றப்பட்டவை, கோவிட் சுகாதார மையங்கள், கோவிட் நல மையங்கள் என மூன்று வகைப்படுகின்றன. மேலும், போதுமான அளவு தனிமைக்கான படுக்கைகள், அவசர சிகிச்சைக்கான படுக்கைககள்  இதர வசதிகள் உள்ளன ” என்றார்.

அவர் மேலும் பேசியதாவது:

நாடு முழுவதும் கோவிட் சிகிச்சைக்காக 855 பிரத்யேக மருத்துவமனைகள்  அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 1,47,128 தனிமைப்படுத்தல் படுக்கைகள், அவசர சிகிச்சைப் படுக்கைகள் என மொத்தம் 1,65,723 படுக்கைகள் உள்ளன. 1,21,403 தனிமைக்கான படுக்கைகள், 9,949 அவசர சிகிச்சைக்கான படுக்கைகள் என மொத்தம் 1,31,352 படுக்கைகள் கொண்ட 1,984 கோவிட் சுகாதார மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர, 3,46,856 படுக்கைள் கொண்ட கோவிட் நல மையங்கள் உள்ளன. தில்லியில் மட்டும் 5 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய 17 கோவிட் நல மையங்கள் உள்ளன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு 72 லட்சம்  என்-95 ரக முகக்கவசங்கள், 37 லட்சம் தனி நபர் காப்பு சாதனங்கள்  வழங்கப்பட்டுள்ளன.

சோதனை:

நோய் கண்டறிவதற்கான பரிசோதனை முறைகளைப் பொறுத்த வரையில் நாடு முழுவதும் 343 அரசு மருத்துவமனை ஆய்வகங்களும் 129 தனியார் மருத்துவமனை ஆய்வகங்களும் உள்ளன. இங்கெல்லாம் பரிசோதன முறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, தினந்தோறும் 95 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. நேற்று மட்டும் 86,368 பேருக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. நேற்று வரையில் மொத்தம் 16,09,777 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

மத்திய ஆய்வுக் குழுக்கள் குஜராத், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஆய்வு செய்கின்றன.

கோவிட் 19 தொற்றினை ஒழிப்பதற்காக அந்த மாநிலங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் இக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

உலகில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள 20 நாடுகளின் மொத்த மக்கள் தொகை இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 130 கோடி அளவுக்கு இருக்கும். ஆனால், இந்த 20 நாடுகளும் மரண விகிதத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவில் மரண விகிதத்தைப் போல் 200 மடங்கு அதிகமாகும். இந்தியாவில் நோய் கட்டுப்படுத்தப்பட்டதற்கு அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் மத்திய அரசு எடுத்த செயல் திறன்மி்க, முன்கூட்டியே திட்டமிடுதல், வகைப்படுத்தப்பட்ட அணுகுமுறை கைப்பிடித்தல் ஆகியவை காரணமாகும்”.

இவ்வாறு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் பேசினார்.

‘கோவிட் 19’ தொற்று குறித்த அனைத்து உறுதியான மற்றும் அன்றாட தகவல்கள் குறித்து அறிவதற்கு தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்:  : https://www.mohfw.gov.in/.



(Release ID: 1623009) Visitor Counter : 188