பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புக் கல்வி மற்றும் ஆய்வுக்கான மனோகர் பாரிக்கர் கல்வி நிறுவனத்தின் 165-வது செயற்குழுக் கூட்டத்துக்கு தலைமைவகித்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்

Posted On: 08 MAY 2020 8:00PM by PIB Chennai

மனோகர் பாரிக்கர் பாதுகாப்புக் கல்வி மற்றும் ஆய்வுக்கான கல்வி நிறுவனத்தின் 165-வது மற்றும் முதலாவது மெய்நிகர் செயற்குழுக் கூட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பணிகளை மேற்கொண்டுவரும் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புக் கல்வி மற்றும் ஆய்வுக்கான கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குநர், தூதர் சுஜன் ஆர்.சினோய், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பிற கல்வியாளர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். கோவிட்-19 பெருந்தொற்று நிலவும் சூழலில், சில கல்வியாளர்கள் மற்றும் பணியாளர்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், தங்களது கட்டுரைகள் மற்றும் ஆன்லைன் முறையில் கருத்துப் பரிமாற்றம் மூலம் ஆய்வுகளை கல்வி நிறுவனம் தொடர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் திறக்கப்பட்ட முதலாவது கல்வி நிறுவனங்களில் ஒன்றாக மனோகர் பாரிக்கர் பாதுகாப்புக் கல்வி மற்றும் ஆய்வுக்கான கல்வி நிறுவனம் திகழ்கிறது. அதேநேரத்தில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன், சமூக இடைவெளி விதிமுறைகளை பின்பற்றி வருகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்ற முறையில் பாதுகாப்புக் கல்வி மற்றும் ஆய்வுக்கான மனோகர் பாரிக்கர் கல்வி நிறுவனத்தின் பங்களிப்புக்கு திரு.ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். இதன்மூலம், ராணுவம், பாதுகாப்பு மற்றும் சர்வதேச நல்லுறவுகளில் தரமான ஆய்வுகள் நடத்தப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

எல்லைப் பகுதியில் நிலவும் அசாதாரண நிலையை எதிர்கொள்ளவும், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும், கோவிட்-19 தொற்றை எதிர்கொள்வதில் உதவவும் தயாராக உள்ள இந்திய ராணுவப் படையினரின் வீரம் மற்றும் தியாகத்துக்கு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.



(Release ID: 1622425) Visitor Counter : 116