மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

ஐ.சி.ஏ.ஆர் நிறுவனங்கள், 12 மொழிகளில் மீன்வளத்துறைக்கான ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன

Posted On: 07 MAY 2020 12:49PM by PIB Chennai

உலகெங்கிலும் பரவியிருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று, ஊரடங்குக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலைமை நாட்டில் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறைகளை பல வழிகளில் கணிசமாகப் பாதித்துள்ளது. திறந்தவெளி நீரிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு, நன்னீர் மற்றும் உவர்நீர் அமைப்புகளிலும் மீன்வளர்ப்பு தவிர, விதை உற்பத்தி, தீவனத் தாவரங்கள் செயல்பாடு, விநியோகம் மற்றும் சந்தை சங்கிலித் தொடர்கள் போன்ற பல்வேறு தொடர்புடைய நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, மீனவர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், பதப்படுத்துவோர் மற்றும் அவர்களது சமூகத்தினர் நோய் தொற்றுப் பரவலின் அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளனர், இந்நிலைமை முழுயான மதிப்பை ஈட்டுவதிலும், அதனை சார்ந்துள்ளவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது.

வேளாண் துறையில் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழு (ஐ.சி.ஏ.ஆர்), வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை (டிஎஆர்இ), வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம்., அவற்றின் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் பல்வேறு துணைத் துறைகளில் தொடர்புடைய அனைவரும் உணர்ந்து கொள்வதற்கு பல்வேறு புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

மீன்வளத்துறையில் மீன்பிடிப்பு, மீன்வளர்ப்பு மற்றும் தொடர்புடைய பிற செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில், தொழிலாளர்களின் பாதுகாப்புக்காகவும், நோய்ப்பரவலைத் தடுப்பதற்காகவும் மீன்வள நிறுவனங்கள் மூலம் ஆலோசனைகளை உருவாக்கி வழங்குவதில் ஐ.சி.ஏ.ஆர் முன்னிலை வகிக்கிறது. இந்த முயற்சியில், கொச்சியில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்-மத்திய மீன்வளத் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.ஏ.ஆர்-சிஐஃஎப்டி) மீனவர்கள், மீன்பிடிப் படகு உரிமையாளர்கள், மீன்பிடித் துறைமுகம், மீன் சந்தை மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் ஆலைகளில் பணியாற்றுவோர் நலனுக்காக ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர 10 வெவ்வேறு பிராந்திய மொழிகளில், ஆலோசனைகளை வகுத்துள்ளது. பாராக்பூரில் உள்ள ஐ.சி.ஏ.ஆர் - மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.சி.ஏ.ஆர் - சிஃஎப்ஆர்ஐ), நதிகள், நதிக்கரையோரங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான ஆலோசனைகளை வகுத்துள்ளது. இந்த ஆலோசனைகள் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் பிரபலப்படுத்தப்பட்டுள்ளன. இவை குறித்து  மாநில மீன்வளத் துறைகள், மேம்பாட்டு முகமை நிலையங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு சுற்றறிக்கைகள் மூலமும், சமூக ஊடகங்கள் வழியாகவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய முயற்சிகள் நாடு முழுவதும் உள்ள துறை சார்ந்தவர்களால் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த சரியான தருணத்தில் ஆலோசனைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ள, ரோம் நகரின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (ஃஎப்ஏஒ), ஆசிய-பிராந்திய முன்முயற்சிகளின் கீழ் நிலையான சிறிய அளவிலான மீன்வளத்தைப் பாதுகாப்பதற்கான தன்னார்வ வழிகாட்டுதல் நெறிகளாக ஐ.சி.ஏ.ஆர் - சிஐஃஎப்டி மற்றும் ஐ.சி.ஏ.ஆர்- சிஃஎப்ஆர்ஐ வகுத்துள்ள இந்த ஆலோசனைகளைப் பரிந்துரைத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள மீன்வளத் துறையின் நலனுக்காக (வலைப்பக்கம்: http://www.fao.org/3/ca8959en/ca8959en.pdf ) . இது ஐ.சி.ஏ.ஆர் மற்றும் அதன் நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கிடைத்திருக்கும் பெரும் சான்றாகும். இந்தக் குழுவின் முயற்சிகளால் உலகெங்கும் பரவியுள்ள மீன்வளத்துறை பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*****



(Release ID: 1621814) Visitor Counter : 184