சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் கோவிட்-19 மேலாண்மைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் தேவையை சமாளிப்பதற்கான ஆயத்த நிலை குறித்து காணொளி மூலம் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் ஆய்வு.

Posted On: 06 MAY 2020 5:40PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், குஜராத் துணை முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் திரு நிதின்பாய் பட்டேல், மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சர் திரு ராஜேஷ் டோப்பே ஆகியோருடன் இன்று உயர்நிலை ஆய்வு நடத்தினார்.  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே, மத்திய மாநில அரசுகளின் உயரதிகாரிகள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். இந்த இரு மாநிலங்களிலும் கோவிட்-19 நோய்த் தாக்குதல் மேலாண்மைக்குத் தேவையான ஆயத்த நிலைகள் குறித்தும், தற்போதைய நிலவரம் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

மாநிலங்களில் உள்ள நிலைமை குறித்து சுருக்கமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. கோவிட்-19 நோய்த் தாக்குதலால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை இந்த மாநிலங்களின் சில மாவட்டங்களில் அதிகமாக இருப்பது குறித்து அமைச்சர் கவலை தெரிவித்தார். ``தீவிர கண்காணிப்பு, தொடர்புகள் தடமறிதல், ஆரம்ப நிலையில் நோய்க்குறிகளைக் கண்டறிதல் ஆகியவற்றை இன்னும் செம்மையாகச் செயல்படுத்தினால் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்'' என்று ஹர்ஷ் வர்த்தன் கூறினார். ``சரியான நிலையில் அரசு தலையிட்டு, மேலோட்டமான பரிசோதனை, தீவிர மூச்சுக் கோளாறு தொற்று (சாரி) / சளிக் காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைவு (ஐ.எல்.ஐ.) குறித்த மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தினால், மற்ற பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்கலாம். நோய் பரவாமல் தடுக்கும் உத்திகளை செம்மையாகச் செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் உயர் முன்னுரிமை தந்தால் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். நோய்த் தடுப்பு, முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தல், விரிவான நடவடிக்கைகளை திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்வதும், புதிதாக யாருக்கும் நோய் பரவாமல் தடுப்பதற்கு மத்திய அரசு அளித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றுவதும் இப்போதைய சூழலில் கட்டாயம்'' என்று அமைச்சர் கூறினார்.

சில பகுதிகளில் நோய்த் தொற்று குறித்த தகவல்களை நோயாளிகள் மறைத்து விடுகின்றனர் அல்லது தாமதமாக மருத்துவமனைகளுக்குத் தெரிவிக்கிறார்கள் என்பது பற்றி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கோவிட்-19 பாதிப்பு இருப்பதாக அறியப்பட்டால், சமூகத்தில் ஒதுக்கப்படுவோம் என்ற அச்சம் இருப்பதே இதற்குக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் அப்படி ஒதுக்கி வைக்கக் கூடாது, பாரபட்சம் காட்டக் கூடாது என்பது பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்களைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் கேட்டுக் கொண்டார். இவ்வாறு செய்வதால், மக்கள் ஆரம்ப நிலையிலேயே மருத்துவப் பரிசோதனைக்கு முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

நோய்த் தாக்குதலால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதுடன், கைகளைக் கழுவுதல், தனி நபர் இடைவெளியைப் பராமரித்தல் போன்ற நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வார்டு அளவிலான சமுதாயத் தன்னார்வலர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் அமைச்சர் ஆலோசனை கூறினார். இந்த நோய் பாதித்தவர்களிடம் பாரபட்சம் காட்டக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். அவுரங்காபாத், புனே போன்ற சில மாவட்டங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதை அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தொற்றும் தன்மை அல்லாத வேறு நோய்கள் இருந்தால் ஆயுஷ்மான் பாரத் சுகாதார, நல மையங்களில் முன்னுரிமை அடிப்படையில் மருத்துவப் பரிசோதனைகள் செய்வதை உறுதி செய்யுமாறு மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார்.

மாநிலங்களின் கோரிக்கையின் அடிப்படையில், மத்தியில் இருந்து அதிகாரிகளைக் கொண்ட கூடுதல் குழுக்கள் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். டெல்லி எய்ம்ஸ் மூலம் கிடைக்கும் உதவியையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டார். கோவிட்-19 பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து தேசிய தொலை மருத்துவ ஆலோசனை மையத்தின் மூலம் வழிகாட்டுதல் வசதி கிடைக்கிறது. அந்த மையத்தில் புதுடெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் / சிறப்பு நிபுணர்கள் நேரடியாக இருந்து ஆலோசனைகள் கூறுகின்றனர். இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தும் இந்த மையத்தைத் தொடர்பு கொள்வதற்கு ஒரே தொலைபேசி எண் (+91 9115444155) தரப்பட்டுள்ளது என்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆரோக்கிய சேது செல்போன் செயலிபற்றியும், 1921 என்ற எண்ணுக்கு டயல் செய்து உடனே இணைப்பை துண்டிப்பதன் மூலம் மிஸ்டு கால் கொடுத்து ஆரோக்கிய சேது குரல்வழி ஆலோசனை வசதியைப் பெறுதல் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் கேட்டுக் கொண்டார். சாதாரண கைபேசிகள் அல்லது தொலைபேசிகள் வைத்திருப்பவர்கள் அதற்கேற்ப இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


(Release ID: 1621566) Visitor Counter : 218