அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சிறந்த மற்றும் வேகமான பலன்கள் கிடைப்பதற்காக ஒருங்கிணைப்பை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவியல் துறைகளுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் அழைப்பு
Posted On:
04 MAY 2020 5:28PM by PIB Chennai
நாட்டில் கோவிட்-19 நோய்த் தாக்குதலை சமாளிப்பதற்காக அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் (Council of Scientific & Industrial Research – CSIR) மேற்கொண்டுள்ள பல்வேறு முன்முயற்சிகள் குறித்து காணொளி மூலம் அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இன்று ஆய்வு நடத்தினார்.
களநிலை அளவில் அறிவியல்நுட்பம் சார்ந்த விஷயங்களை அமல் செய்வதில் தொழில் துறையினர் மற்றும் தொடர்புடைய ஏஜென்சிகளுடன் 38 அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் ஆய்வகங்களும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையிலான உத்திகளை உருவாக்கி இருப்பதாக அதன் தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் சி. மாண்டே, அமைச்சரிடம் விளக்கினார்.
டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு கண்காணிப்பு; துரித மற்றும் குறைந்த செலவிலான மருத்துவப் பரிசோதனைகள்; புதிய மருந்துகள் / ஏற்கெனவே உள்ள மருந்துகள் / தடுப்பூசிகளை மாற்று உபயோகத்துக்கு பயன்படுத்துதல்; மருத்துவமனை உதவி சாதனங்கள் மற்றும் முழு உடல் கவச உடைகள் (PPE); அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்குவதற்குத் தேவையான வழங்கல் சங்கிலித் தொடர் மற்றும் சேமிப்புக் கிடங்கு ஆதரவு ஏற்பாடுகள் என ஐந்து அம்சத் திட்டத்தை அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் உருவாக்கியுள்ளது. இந்த ஐந்து நடைமுறைகளிலும் கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து அவற்றின் இயக்குநர்கள், அமைச்சரிடம் விவரித்தனர்.
உலக அளவிலான கொரோனா வைரஸ் ஆராய்ச்சி தகவல் தொகுப்பு, தகவல் பகிர்வு அமைப்பு ஆகியவற்றுக்கு, கோவிட்-19 நோயின் 53 வரிசைத் தொடர்களை அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் சமர்ப்பித்துள்ளதற்கு அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் பாராட்டு தெரிவித்தார். ``புதுடெல்லியில் உள்ள நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் (என்.சி.டி.சி.), சி.எஸ்.ஐ.ஆர்.- ஐ.ஜி.ஐ.பி ஆகியவற்றின் வலுவான பங்களிப்பின் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. இந்தியாவில் இருந்து அதிக அளவிலான கிருமித் தொற்று வரிசைத் தொடர்கள் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்தியாவில் மூலக்கூறு நோய் கையாளுதல் மற்றும் வைரஸ் கண்காணிப்பு முயற்சிகள் தீவிரமடையும்'' என்று அவர் கூறினார்.
ஒழுங்குமுறை செயல்பாடுகளைத் துரிதப்படுத்த இந்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் ஆதரவில் Mw அடிப்படையிலான Sepsivac மருந்தை ஆய்வகப் பரிசோதனை மேற்கொள்வதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய் பாதித்த நோயாளிகளிடம் 3 மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுமதி தரப்பட்டிருப்பதால், அவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
(Release ID: 1621151)
Visitor Counter : 237