அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சுகாதாரம் மற்றும் கோவிட் 19 தொற்று குறித்து தகவல் அளிப்பதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அறிவியல் தொழில்நுட்பத்துறை

Posted On: 30 APR 2020 6:09PM by PIB Chennai

அறிவியல் மற்றும் சுகாதாரம் குறித்த, குறிப்பாக கோவிட் 19 தொற்று பற்றிய விழிப்புணர்வுக்கான ஆண்டுயாஷ் என்ற திட்டமொன்றை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், தேசிய அறிவியல் தொழில்நுட்ப தொடர்புக் கழகம் (என் சி எஸ் டி சி) அறிமுகப்படுத்தியுள்ளது.

சுகாதாரம் குறித்து அடிமட்ட நிலையில் உள்ள மக்களுக்கும் புரிந்துணர்வு ஏற்படும் வகையிலும், சுகாதார பிரச்னைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கக் கூடிய வகையிலான, முழுமையான, பயனுள்ள அறிவியல் மற்றும் சுகாதார தகவல் தொடர்பு முயற்சியாகும்.  மக்களின் உயிர் காப்பதாகவும், உடல் நலனைப் பேணுவதாகவும் இது அமையும். மக்களிடையே நல்ல உடல் நலன், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களிடையே அறிவியல் சிந்தனையை தூண்டவும், அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டவும் இத்திட்டம் உதவும்.

தற்போதைய பெருந்தொற்று நிலைமை எல்லா இடங்களிலும், கவலையையும் சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலைக்கு எதிராகப் போராட அறிவியல் விழிப்புணர்வு, சுகாதாரம், உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை, மிக முக்கிய பங்கு வகிக்கும். இந்த நிலைமையை சமுதாயங்கள் எதிர்கொள்வதற்கு உதவும் வகையில், நம்பிக்கையான அறிவியல் தகவல்களை பயன்படுத்தி, இந்த நிலைமையில் உள்ள அபாயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதும் இதில் அடங்கும்.

அறிவியல் முன்னேற்றம், சுகாதாரம், இந்நோயினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் ஆகியவை குறித்து தகவல் பகிர்வு மென்பொருள், வெளியீடுகள், ஒலி - ஒளி காட்சிகள், டிஜிட்டல் தளங்கள், நாட்டுப்புறக்கலைகள், பயிற்சி பெற்ற தகவல் தொடர்பாளர்கள் மூலம், குறிப்பாக பல்வேறு மண்டல மொழிகளிலும் நாட்டின் பல்வேறு பகுதி மக்களுக்கும் தகவல் அளிக்கப்படும் வகையிலானதாக இத்திட்டம் அமையும்.


(Release ID: 1619981) Visitor Counter : 261