அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மாற்று உபயோகத்துக்கு உகந்த 25 மருந்துகள் / மருந்து மூலக்கூறுகளை சி.எஸ்.ஐ.ஆர். அடையாளம் கண்டுள்ளது

Posted On: 30 APR 2020 7:25PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று தாக்குதலுக்கு எதிரான செயல்பாடுகளில் சி.எஸ்.ஐ.ஆர். நிறுவனம் பல வகையான முயற்சிகளை எடுத்து வருகிறது. புதிய மருந்துகளைத் தயாரிக்க ஏறத்தாழ பத்தாண்டுகள் ஆகும் என்ற நிலையில், ஏற்கெனவே உள்ள மருந்துகளை இதற்குப் பயன்படுத்த வாய்ப்பு இருக்குமா என்பதைக் கண்டறிவதில் அந்த நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. உலக அளவில் கோவிட் 19 தொற்று நோய்த் தாக்குதலுக்கு எதிரான செயல்திறனைப் பரிசோதிக்க, கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு பல மருந்துகள் தரப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தரக்கூடிய மருந்துகளாக 25 மருந்துகள் / மருந்து மூலக்கூறுகளை சி.எஸ்.ஐ.ஆர். அடையாளம் கண்டுள்ளது. இவற்றில் ஃபேவிபிராவிர் மருந்து முதலிடத்தில் உள்ளது. இது ஆர்.என்.ஏ. வைரஸ் கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படக் கூடியது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கு நல்ல பலனைத் தரக் கூடிய மருந்தாக இது கருதப்படுகிறது. பியூஜிபிலிம் டோயமா கெமிக்கல் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இந்த மருந்து சாதாரண சளிக் காய்ச்சலுக்கான மருத்துவத்துக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ரஷியா, சீனா மற்றும் ஜப்பானில் இந்த மருந்து விற்பனையாகிறது.


(Release ID: 1619980)