குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
ஆயுஷ் துறைக்கு அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளன; இந்தியா பொருளாதார ரீதியில் வல்லமை பெறுவதில் ஆயுஷ் துறைமுக்கிய பங்காற்ற முடியும் என்று திரு நிதின் கட்கரி தகவல்
Posted On:
30 APR 2020 6:01PM by PIB Chennai
ஆயுஷ் சிகிச்சை முறைகளுக்கு இந்தியாவில் மிகப் பெரிய வாய்ப்புகள் உள்ளன என்றும், இந்தியாவை பொருளாதார வல்லமை மிக்க நாடாக மாற்றுவதில் அதற்கு முக்கிய பங்கு இருக்கும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மாற்று மருத்துவம் என்ற வகையில் ஆயுஷ் சிகிச்சை முறைகள் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகப் பிரபலமாக இருந்து வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். அதிக அளவில் ஆராய்ச்சி மற்றும் புதுமை சிந்தனை முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம், ஆயுஷ் துறையின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்றார் அவர். ஆயுஷ் அமைச்சகம் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆயுஷ் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் திரு கட்கரி கலந்து கொண்டு பேசினார். குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் ஆயுஷ் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பது தொடர்பாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயுர்வேதா, ஹோமியோபதி, யோகா, சித்தா ஆகியவற்றை பெரிய அளவில் பரவச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மற்ற நாடுகளில் இவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளதால், தொழில்முனைவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய சிகிச்சை மையங்களை அங்கு திறக்கலாம், ஏற்றுமதியை ஊக்குவிக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
உலக அளவில் ஆயுர்வேதா சிகிச்சைக்கும், யோகா பயிற்சிக்கும் நல்ல வரவேற்பு உள்ளது, அது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். நிபுணர்களின் கீழ் நிறைய பேர் பயிற்சி பெறுவதன் மூலம் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யலாம் என்றார் அவர்.
ஆயுஷ் துறையை பலப்படுத்தும் வகையிலான ஒரு பயிற்சித் திட்டத்தைத் தொடங்க வேண்டிய தேவை உள்ளது என்று அமைச்சர் கூறினார். அதை தொழில்முனைவு நிலைக்கு மாற்றி, வேலைவாய்ப்பை உருவாக்குவது இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று அவர் கூறினார். ஆயுர்வேதா சிகிச்சைக்குத் தேவையான பொருள்கள் வனப் பகுதிகள், கிராமப் பகுதிகள், மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் கிடைப்பதால், முன்னேற்றத்துக்கு பட்டியலிடப்பட்டுள்ள மாவட்டங்களில் இவற்றுக்கான பதப்படுத்தல் பிரிவுகளை அமைத்து, வேலைவாய்ப்புகளைப் பெருக்கி, சுய வேலை வாய்ப்புகளையும் தொழில் வளர்ச்சியையும் பெருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆயுஷ் துறையில் ஏற்பட்டுள்ள சவால்களை முறியடிப்பதற்கான செயல் திட்டத்தை உருவாக்கும் நோக்கில் இன்றைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமூக ஊடகத் தளங்களில் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாக நடைபெற்றதால், ஆயுஷ் அடிப்படையிலான சுமார் ஆயிரம் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை நிறுவனங்கள் ஆன்லைன், சமூக ஊடகத் தொடர்புகள் மூலம் இதில் பங்கேற்றன.
ஆயுஷ் துறையின் வளர்ச்சிக்காக இந்த இரு அமைச்சகங்களும் இணைந்து ஒரு செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளன. அதன்படி சில தினங்களுக்கு முன்பு இரு அமைச்சகங்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
(Release ID: 1619752)
Visitor Counter : 249