பாதுகாப்பு அமைச்சகம்
கோவிட் – 19 ஊரடங்குக்கு இடையிலும், மூன்று வாரத்துக்கு முன்னதாகவே ரோடாங் கணவாயை எல்லைச் சாலைகள் அமைப்பு திறந்து விட்டுள்ளது
Posted On:
25 APR 2020 7:30PM by PIB Chennai
எல்லைச் சாலைகள் அமைப்பு ரோடாங் கணவாயை (கடல் மட்டத்தில் இருந்து 13,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது) இன்று திறந்துவிட்டது. கோவிட் – 19 ஊரடங்குக்கு இடையிலும் மூன்று வாரத்துக்கு முன்னதாகவே பனிக்குவியல்கள் அகற்றப்பட்டு இந்தக் கணவாய் திறக்கப்பட்டுள்ளது. இது இமாச்சலப் பிரதேசத்தில் லாஹால் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் மிக முக்கியமான சாலை. கடந்த ஆண்டு இந்த சாலை மே 18ஆம் தேதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவிட் – 19 ஊரடங்கால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், விவசாயிகள் திரும்ப வந்து தங்கள் அறுவடைப் பணிகளை மேற்கொள்ளவும், அத்தியாவசியப் பொருள்கள் வழங்கலுக்காகவும், லாஹால் பள்ளத்தாக்குப் பகுதிக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு வசதியாகவும் பனிக்குவியலை வேகமாக அகற்றுவது தொடர்பாக இமாச்சலப் பிரதேச அரசு எல்லைச் சாலைகள் அமைப்பிடம் கேட்டுக் கொண்டது.
இந்தக் கணவாய் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய வாகனங்கள் அணிவகுத்ததுடன், 150 விவசாயிகளும் லாஹால் பகுதிக்கு இன்று சென்றனர். எல்லைச் சாலைகள் அமைப்பின் வழிகாட்டுதலின்படி அதிகாரப்பூர்வமாக இந்த ஆண்டு ரோடாங் கணவாய் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று வாரத்துக்கு முன்னதாக ரோடாங் கணவாய் போக்குவரத்துக்காகத் திறந்துவிடப்பட்ட செய்தி உள்ளூர் மக்களிடம் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இது உள்ளூர் மக்களுக்கு, தேவையாக உள்ள நிவாரணப் பொருள்களை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உதவியாக இருக்கும். மேலும், இந்த மாவட்டத்தின் முதுகெலும்பாக உள்ள விவசாயப் பணிகளைத் தொடங்குவதற்கும் பெரும் உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் விவசாயப் பணிகளைத் இப்போது தொடங்கலாம்.
(Release ID: 1618370)
Visitor Counter : 252