மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

உலக புத்தக மற்றும் காப்புரிமை தினத்தையொட்டி, கொவிட்டுக்கு பிந்தைய புத்தக வெளியீட்டு நிலை குறித்து விவாதிக்க தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் இந்தியத் தொழில் வர்த்தகசபை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இணையவழிக் கருத்தரங்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பங்கேற்றார்

Posted On: 23 APR 2020 7:34PM by PIB Chennai

உலக  புத்தக மற்றும் காப்புரிமை தினத்தையொட்டி, கொவிட்டுக்கு பிந்தைய புத்தக வெளியீட்டு நிலை குறித்து விவாதிப்பதற்காக புதுதில்லியில்,  தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust -NBT ) மற்றும் இந்தியத் தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry - FICCI) ஏற்பாடு செய்த இணையவழிக் கருத்தரங்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ கலந்து கொண்டார். உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினத்தையொட்டி, ஒவ்வொருவரையும் வாழ்த்திய மத்திய அமைச்சர், ஞானத்தில் இந்தியா வல்லரசாகத் திகழ்கிறது என்றார். மிகப் பழமையான பல்கலைக்கழகங்கள், தொன்மையான ஞானம், எண்ணற்ற புத்தகப் புதையல்கள் ஆகியவற்றுடன், கடந்த காலத்தையும் , வருங்காலத்தையும் இணைக்கும் தொடர்புச் சங்கிலியாகவும், தலைமுறைகளையும், பண்பாட்டையும் இணைக்கும் பாலமாகவும் இந்தியா திகழ்கிறது என்று அமைச்சர் அப்போது கூறினார். புத்தக வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்களைப் பாராட்டிய திரு. நிஷாங்க், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியாவை உலகிலேயே பெருமை மிக்க அறிவுப் பொருளாதார நாடாக உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டில், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், புத்தகங்கள் தான் நல்ல நண்பர்கள் என்று குழந்தைகள் நம்பும் வகையில், அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் இளைஞர்கள், சில மேற்கத்திய நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விடவும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர் என்று அவர் கூறினார். எனவே, ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோர், சரியான அறிவை அவர்களிடம் பரப்பி, புதிய வலிமையான இந்தியாவை உருவாக்குவதை உறுதி செய்வது அவசியமாகும் என அவர் கூறினார்.  

இந்தியா முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலிருந்து, புத்தக வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், புத்தக விற்பனையாளர்கள், டிஜிட்டல் கருத்து உருவாக்கம் செய்பவர்கள், வெளியீட்டு நிபுணர்கள் உள்பட 180-க்கும் அதிகமானோர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.



(Release ID: 1617756) Visitor Counter : 168