உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

கொவிட் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளைத் தயாரித்து விநியோகிப்பதன் மூலம் கொவிட்-19க்கு எதிரான போரில் மத்திய உணவு பதப்படுத்துல் தொழில் அமைச்சகத்தின் பேராதரவு

Posted On: 23 APR 2020 4:23PM by PIB Chennai

மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், முன்னோடி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமான இந்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம் (IFPT), கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு பேராதரவு அளித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு அவசியம் வழங்கப்பட வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் சுகாதாரமான உணவுகளைச் சரியான நேரத்தில் வழங்க, இந்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளை மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில் அமைச்சர் திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் பாராட்டியுள்ளார்.

இந்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம் (IFPT), மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கும், தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் கொவிட்-19க்கான சிகிச்சை பெற்று அண்மையில் குணமாகியுள்ளவர்களுக்கும்,  ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளைத் தயாரித்து வருகிறது.

கொவிட்-19 தொற்றை முறியடிக்க, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியும் , மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு இந்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம் ஆதரவு அளித்து வருகிறது. கொவிட்-19 தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இயக்குநர் டாக்டர். சி. அனந்தராம கிருஷ்ணன் கூறியுள்ளார். இந்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகளின் புதுமையான உணவு தயாரிப்பு முறைகளைப் பயன்படுத்தி, உள்நாட்டு உணவு வகைகள் பொட்டலமிடப்படுகின்றன. பிரட், குக்கீஸ், ரஸ்க், கம்பு மிட்டாய் ஆகியவை தினசரி அடிப்படையில் இந்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உணவுப் பதப்படுத்துதல் தொழில் அரும்பல் மையத்தில் தயாரிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிக்கும், விடுதிக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முன்முயற்சி ஏப்ரல் 21-ம் தேதி , மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி தலைவர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. அனைத்து உணவுப் பொருட்களும் இந்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களால் தயாரிக்கப்பட்டு, கவனமாகப் பொட்டலமிடப்படுகிறது. 

காயவைக்கப்பட்ட முருங்கைக் கீரை, வேர்க்கடலை பவுடர், மோர் புரதம் ஆகியவை செறிவூட்டப்பட்டு, 9.8 சதவீதம் புரதம், 8.1 சதவீதம் நார்ச்சத்து, மற்றும் இயற்கையான எதிர்ப்பு சக்தி ஊக்குவிப்பான்களான பூண்டு, மஞ்சள், இஞ்சி, மிளகு மற்றும் இதர மசாலா பொருள்கள் சேர்க்கப்பட்டு பிரட் தயாரிக்கப்படுகிறது. குக்கீஸ், 14.16 சதவீதம் புரதம், 8.71 சதவீதம் நார்ச்சத்து, ஆகியவற்றுடன் மசாலா சாறுகளின் பயன்களுடன் தயாராகின்றன. 12.85 சதவீதம் புரதம், 10.61சதவீதம் நார்ச்சத்து கொண்ட ரஸ்க்குகள் சிறப்பு உணவு ஏற்பித்தூண்டி பண்புக்கூறுகளை உள்ளடக்கியதாகும். முக்கியமாக இந்தப் உணவுப் பொருள்களில் செயற்கைப் பொருள்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. இந்த உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டவுடன் பேக் செய்யப்பட்டு லேபிள்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றன.


(Release ID: 1617560) Visitor Counter : 268