நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பொது ஊரடங்கின் போது உணவு தானிய விநியோகத்தைப் பராமரிக்க அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு 2 கப்பல்களையும், லட்சத்தீவுகளுக்கு 7 சிறு கப்பல்களையும் இந்திய உணவுக் கழகம் அனுப்பியுள்ளது

Posted On: 21 APR 2020 4:14PM by PIB Chennai

பொது ஊரடங்கின் போது அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும், லட்சத்தீவுகளுக்கும் உணவு தானிய விநியோகத்தைத் தொடர்ந்து பராமரிப்பதை இந்திய உணவுக்கழகம் கடந்த 27 நாட்களாக முழுமையான தீவிரத்துடன் கையாண்டு வருகிறது. கடினமான இடவியல், மற்றும் ஓரளவுக்கே அணுகக்கூடிய சூழ்நிலையிலும், இந்தத் தீவுகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்கு மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு, இந்திய உணவுக்கழகம் தனது போக்குவரத்தை இயக்கிவருகிறது. இந்தத் தீவுகள் பெரும்பாலும் பொது விநியோகத் திட்டத்தையே சார்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு தீவுக்கும்  சரியான நேரத்தில் உணவு தானியங்களைக் கொண்டு சேர்க்கும் பணி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்திய உணவுக்கழகம் கடந்த 27 நாட்களில், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு 2 கப்பல்களையும், லட்சத்தீவுகளுக்கு 7 சிறிய கப்பல்களையும் அனுப்பியுள்ளது. இந்தத் தீவுகளுக்கு சாதாரண காலத்தில் அனுப்பப்படும் மாதாந்திர உணவுப்பொருள்களின் அளவை விட ,தற்போது இரு மடங்குக்கும் அதிகமாக அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரையிலான 27 நாள் ஊரடங்கின் போது, மங்களூர் துறைமுகத்திலிருந்து சுமார் 1750 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் லட்சத்தீவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வழக்கமான 600 மெட்ரிக் டன் என்ற மாதாந்திர சராசரி அளவை விட மூன்று மடங்காகும். இதேபோல, சுமார் 6500 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து போர்ட் பிளேருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. இது, வழக்கமான சராசரி அளவான 3000 மெட்ரிக் டன்னை விட இருமடங்காகும்.



(Release ID: 1617006) Visitor Counter : 125