நிதி அமைச்சகம்

சர்வதேச செலாவணி நிதியத்தின் சர்வதேச செலாவணி மற்றும் நிதிக் குழுவின் (IMFC) முழுமையான அமர்வுக் கூட்டத்தில் காணொலிக்காட்சி மூலம் கலந்துகொண்டார் திருமதி.நிர்மலா சீதாராமன்

Posted On: 16 APR 2020 7:40PM by PIB Chennai

சர்வதேச செலாவணி நிதியத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான குழுவான சர்வதேச செலாவணி மற்றும் நிதிக் குழுவின் முழுமையான அமர்வுக் கூட்டத்தில், காணொலிக்காட்சி மூலம் மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் இன்று கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில், சர்வதேச செலாவணி நிதிய மேலாண் இயக்குநரின் “அரிதான நேரங்கள் – அரிதான செயல்பாடுகள்” என்ற தலைப்பிலான உலகளாவிய கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் ஆலோசனை நடத்தப்பட்டது. கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த தங்களது நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். சர்வதேச நிதி மற்றும் உறுப்பு நாடுகளின் நிதித் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் அறிவிக்கப்பட்ட சர்வதேச செலாவணி நிதியத்தின் இடர்-எதிர்கொள்ளும் நிதித் தொகுப்பு திட்டத்துக்கு உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய திருமதி.சீதாராமன், சுகாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்வதற்காக இந்தியா மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டார். இதன்படி, சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த இந்திய அரசு 2 பில்லியன் டாலர் (ரூ.15,000 கோடி) ஒதுக்கீடு செய்ததை அமைச்சர் குறிப்பிட்டார். இதேபோல, ஏழைகள் மற்றும் வறிய நிலையில் உள்ள மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளைப் போக்க 23 பில்லியன் டாலர் (ரூ.1.70 லட்சம் கோடி) அளவுக்கு சமூக ஆதரவு நடவடிக்கை திட்டம் அறிவிப்பு; கட்டாய மற்றும் விதிகளின்படி நிறுவனங்கள் செயல்படுவதிலிருந்து நிவாரணம் அளிக்க வகைசெய்தது; நிதிக் கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி எளிமையாக்கியது; கடன் தவணைகளை செலுத்துவதிலிருந்து மூன்று மாதங்களுக்கு விலக்கு ஆகிய திட்டங்களை அரசு அறிவித்துள்ளதை அமைச்சர் குறிப்பிட்டார். மற்ற நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளை வழங்கியதன் மூலம், சர்வதேச சமூகத்தில் பொறுப்புள்ள உறுப்பினராக இந்தியா செயல்பட்டு வருவதாக சர்வதேச செலாவணி மற்றும் நிதிக் குழுவில் நிதியமைச்சர் எடுத்துரைத்தார். சார்க் நாடுகளின் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி, சார்க் பிராந்தியத்துக்கான கோவிட்-19 அவசரகால நிதியை ஏற்படுத்தும் திட்டத்தை தொடங்கியதை திருமதி.நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.



(Release ID: 1615333) Visitor Counter : 197