விவசாயத்துறை அமைச்சகம்

காரிப் பருவ பயிர்கள் குறித்த தேசிய மாநாட்டில் காணொலி காட்சி மூலம் வேளாண் அமைச்சர் தலைமை வகித்தார்

Posted On: 16 APR 2020 3:26PM by PIB Chennai

காரிப் பருவ இலக்கை எட்டுவதை  அனைத்து மாநிலங்களும் நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்றும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் கேட்டுக்கொண்டுள்ளார். காணொலி காட்சி மூலம் 2020 ஆண்டு காரிப் பருவ பயிர்கள் குறித்த தேசிய மாநாட்டில் உரையாற்றிய அவர், மாநிலங்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள் ஏதாவது இருந்தால், அவற்றை மத்திய அரசு அகற்றும் என்று அவர் உறுதியளித்தார்.

பொது முடக்க நிலையைக் கருத்தில் கொண்டு, காரிப் பருவ சாகுபடிக்கான முன்னேற்பாடுகள் பற்றி மாநிலங்களுடன் கலந்தாலோசித்து, நடவடிக்கைகளைப் பட்டியலிடுவது மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிப்பதே தேசிய காரிப் மாநாட்டின் நோக்கமாகும்.

கொரோனோவைரஸ் காரணமாக எழுந்துள்ள அசாதாரணமான சூழலை விவசாயத்துறை போராட்ட உணர்வுடன் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், ஒவ்வொருவரும் இந்த நிலையில் எழுச்சியுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் திரு. தோமர் கூறினார். கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோர் தற்போதைய நெருக்கடியான நிலையில் பாதிக்கப்படக்கூடாது என்பதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதியாக உள்ளார் என அவர் கூறினார். பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம், மண்வள அட்டை திட்டம் ஆகிய இரண்டு திட்டங்கள் பற்றி ஒவ்வொரு விவசாயியிடமும் மாநில அரசுகள் விளக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பொது முடக்கத்தின் போது, விவசாயம் பாதித்து விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, அகில இந்திய விவசாய போக்குவரத்து உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களிடம் அமைச்சர் தெரிவித்தார். இ-நாம் சேவையை அதிகமாகப் பயன்படுத்துமாறு அவர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார். மத்திய உள்துறை அமைச்சகம் விவசாயத்துறைக்காக அறிவித்துள்ள  விலக்குகள் மற்றும் சலுகைகளை , சமூகப் பொறுப்புணர்வுடனும், சமூக இடைவெளிப் பராமரிப்பை உறுதி செய்து பின்பற்ற வேண்டும் என்று மாநிலங்களை திரு. தோமர் வலியுறுத்தினார்.

2020-21ம் ஆண்டுக்கான உணவு தானிய உற்பத்தி இலக்கு 298 மில்லியன் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2019-20–ம் நிதியாண்டில், 291.10 மில்லியன் டன் என்ற உணவு தானிய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போதிலும், சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்பட்டதாலும், பல்வேறு பயிர்களின் உற்பத்தித் திறனாலும் 292 மில்லியன் டன் என்ற அதிக உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டது.  


(Release ID: 1615061) Visitor Counter : 298