அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட் 19 நோய்க்கு எதிரான போரில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளின் பங்கு

Posted On: 06 APR 2020 1:05PM by PIB Chennai
கோவிட் 19 அல்லது கொரோனா வைரஸ் நோய் என்றும் அழைக்கப்படும் நோய், உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மக்களையும் அங்குமிங்குமாக, திக்கு திசையின்றி ஓடச் செய்து கொண்டிருக்கிறது. உலக அளவுகோலின்படி, இந்தக் கட்டுரை எழுதப்படும் காலம் வரை பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள், இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஏற்கனவே இரையாகியுள்ளார்கள். இந்த எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 3000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த விஞ்ஞானி திருமிகு ஜோதி ஷர்மாவும், சர்வதேச இருதரப்பு ஒத்துழைப்புப் பிரிவுக்கான தலைவர் திருமிகு எஸ். கே. வர்ஷினி அவர்களும் எழுதியுள்ள இந்த சிறப்புக் கட்டுரையில் கோவிட் 19 நோய்க்கு எதிராக, இந்திய விஞ்ஞானிகளும், அமைப்புகளும், மேற்கொண்டுவரும் முயற்சிகளைக் குறித்து விவரமாக எடுத்துக் கூறியுள்ளார்கள். இந்த நோய்க்கு எதிராக, ஒரு நோய்த் தடுப்பு மருந்தைக் கண்டறிய வேண்டும் என்ற ஆய்விற்காக, உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு அறிவியலாளர்களையும், ஆராய்ச்சியாளர்களையும், அறிஞர்களையும் உலக சுகாதார நிறுவனம் ஒன்று திரட்டியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தில், இந்தியா, இதுதொடர்பாக,பெரும் பங்காற்றி வருகிறது. இது மட்டுமல்லாமல், கோவிட் 19 நோய்க்கு எதிரான போராட்டத்தில்”‘கோவிட்19 நோய்க்கு எதிரான கூட்டுப்போராட்டம்” (crowd fighting) மூலமாக, உலகம் முழுவதுமிருந்து, பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள், தங்களுடைய நிபுணத்துவத்தையும், நேரத்தையும், உதவியையும் அளித்து வருகிறார்கள். ட்விட்டர், முகநூல், லிங்க்டு இன் போன்ற பல்வேறு சமூக வலைதளங்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டு, ஆராய்ச்சியாளர்கள் தாங்களாகவே முன்வந்து, தங்களது சேவையை அளித்து வருகிறார்கள். அடுத்த 12 முதல் 18 மாதகாலத்திற்கு, எந்த ஒரு நோய்த் தடுப்பு மருந்தும் கண்டறியப்பட முடியாது என்ற கருத்து இதுவரை நிலவும் இன்றைய சூழ்நிலையில், இந்த அபாயகரமான, உயிர்க்கொல்லி வைரஸிடமிருந்து மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது போலத் தோன்றுகிறது. இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் (ரெஸ்பான்ஸ் மெக்கானிசம்) இந்த நோயைக் கையாள்வது குறித்து உண்மையான, உலக அளவிலான கருத்தொற்றுமை எதுவும் ஏற்படவில்லை. ஒவ்வொரு தேசமும் தன்னுடைய குடிமக்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரை, தாங்களாகவே முடிவெடுத்து செயல்பட்டுக் கொண்டு வருகின்றன. இந்தியாவின் துரித நடவடிக்கை 130 கோடி மக்களை தன் நெஞ்சில் சுமந்து கொண்டுள்ள இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலைப் பற்றியும், இந்தியா இந்நோய்க்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நோய்க்கு எதிராக, இந்தியா தனது ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி, பிரதமர் திரு நரேந்திர மோதி தலைமையின் கீழ், இந்நோய்க்கு எதிராகப் போரிட்டு வருகிறது. பேரிடர் மேலாண்மை சட்டம் 2015 இன் படி, இந்தியா 25 மார்ச் 2020 அன்று முதல், இருபத்தோரு 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது. நானூறுக்கும் குறைவான மக்களே பாதிக்கப்பட்டிருந்த போதிலும், முன்னதாகவே ஊரடங்கு அறிவித்ததை, உலக சுகாதார நிறுவனம் வெகுவாகப் பாராட்டியது. கோவிட் 19 நோய்க்கு எதிரான சாதனைப்படை ஒன்றை அமைத்தது; தனி நபர்கள் விலகியிருத்தல்; தனிநபர் விலகியிருத்தலைக் கடைப்பிடிப்பதற்காக செய்யப்பட்ட பல அறிவிப்புகள் மற்றும் இதர தீவிர நடவடிக்கைகள் பின் தொடர்ந்தன. இதுபோன்று மேற்கொள்ளப்பட்ட பல முக்கிய நடவடிக்கைகளில் சில, கீழே கொடுக்கப்பட்டுள்ளன: • தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிவது தொடங்கப்பட்டது • அனைத்து விசாக்களையும் ரத்து செய்தது (தூதரக, அதிகாரபூர்வ, ஐநா/ சர்வதேச அமைப்புகள், பணி நிமித்தமான, திட்டங்கள் தொடர்பான விசாக்கள் நீங்கலாக) • 15 ஏப்ரல் 2020 வரை அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்கள், இரயில்கள், பேருந்து சேவைகளை ரத்து செய்தது • இந்த ஊரடங்கு காலத்தில் எவருமே பசித்திருக்கக் கூடாது என்பதற்காக, ஏழை மக்களை இலக்காகக் கொண்டு துவக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் • இந்திய இரயில்வேயின் இரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றியமைத்தது சவாலை எதிர்கொள்ளும் ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்புகள் உலக அளவிலான கோவிட் 19 நோய்க்கு எதிராக, இந்தியா தானாகவே முன்வந்து ‘அரசின் முழுமையான அணுகுமுறை’யுடன், மேற்கோள்ளும் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்கும் அதே சமயத்தில், இந்தியாவுக்கும் உலகின் மற்ற நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தின் மந்த நிலை இதற்கு எதிரான விளைவுகளை இன்னொரு பக்கத்தில் அளித்து வருகிறது. வர்த்தகத்தில் காணப்படும் இந்த மந்த நிலை, கோவிட் 19 நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் பொருள் வழங்கு தொடருக்கு (சப்ளை செயினுக்கு) இடையூறாக இருக்கிறது. நோய் உள்ளதா என பரிசோதனை செய்வதற்கான பரிசோதனைப் பெட்டிகள், முகக்கவசங்கள், எரிசாராயத்தை அடிப்படையாகக் கொண்ட கிருமி நாசினிகள், சுத்திகரிப்பான்கள், தனிநபர் பாதுகாப்புக் கருவிகள், முன்னணியில் நின்று சேவை புரியும் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான துணிப்பொருள்கள், உடைகள், நோயாளிகளுக்கான செயற்கை சுவாசக்கருவிகள் போன்றவை, இந்த அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் அடங்கும். இந்தப் பொருள்களை எவ்வளவு விரைந்து தயாரிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாகவும், எவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் தயாரிக்க முடியுமோ, அவ்வளவு அதிகமாகவும் உற்பத்தி செய்ய வேண்டியதே சவாலாகும். இந்த நிலையே இந்திய அரசை ‘இந்தியாவிலேயே தயாரிப்போம்’ என்ற திட்டத்தை, புத்துணர்ச்சியுடன் செயல்படுத்தத் தூண்டியுள்ளது. இதில் நாட்டிலுள்ள பல்வேறு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள அறிவியல் சமுதாயத்தை செயலாக்கச் செய்வதற்காக, மத்திய சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவியியல் விஞ்ஞானத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் ஒருங்கிணைந்த அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறந்த பழக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஒருங்கிணைந்து பணியாற்றுதல், தேவை அடிப்படையிலான புதிய விஷயங்களைக் கண்டறிதல், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மீண்டும் மேற்கொள்ளப்படாமல் இருக்க வழி செய்தல் ஆகியவற்றுக்கு இந்த அணுகுமுறை உதவியுள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், மிகக் குறுகிய காலகட்டத்தில், இந்தியாவால் புதிய பரிசோதனைகள், பாதுகாப்புக் கருவிகள், சுவாசக்கருவிகள் போன்றவற்றை வடிவமைக்கும் பணியில், கண்டுபிடிக்கும் பணியில், நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்களையும், காலங்கருதாமல், ஈடுபட வைக்க முடிந்துள்ளது. இந்தியாவின் உயரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமையும், அதன் முயற்சிகளும்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையே, இந்தியாவின் உயரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமையாகும்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் அதன் தொடர்புடைய இதர அமைச்சகங்களின் கீழ் உள்ள அமைப்புகளின் உதவியுடன், கோவிட் 19 தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து தீர்வு காண்பதற்காக, இந்தியாவில் உள்ள தகுந்த, தேவையான, தொழில் நுட்பங்களை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் பல ஒருங்கிணைப்பு முயற்சிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தலைமையில், மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் நாட்டிற்குப் பொருந்துகின்ற வகையிலான தீர்வுகளையும் அது தேடிக்கொண்டிருக்கிறது. உலகளாவிய தொற்றுநோயான கோவிட் 19 காரணமாக நாட்டில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிப்பதற்கு உதவும் வகையிலான தயாரிப்புகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. கோவிட் 19 நோய்க்கு எதிராக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, தன்னாட்சி அமைப்புகள் மற்றும் சட்ட ரீதியிலான அமைப்புகள் மூலமாக, மூன்று வகையான போராட்ட முறைகளை ஏற்படுத்தியுள்ளது. • ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி உதவி தேவைப்படும் நிறுவனங்கள், மேம்பாடு மற்றும் உற்பத்தி உதவி தேவைப்படும் பொருட்கள் கொண்ட startups துவக்க நிலை நிறுவன்ங்கள், ஆகியவற்றைக் கண்டறிதல் • சந்தைப்படுத்தக்கூடிய, பயன்படுத்த கூடிய பொருட்களைக் கொண்ட, துவக்க முதலீடு தேவைப்படும் பொருட்களை கண்டறிதல் • சந்தைகளில் ஏற்கனவே உள்ள ஆனால் அதற்கான தொழில் கட்டமைப்புகளையும் திறன்களையும் மேம்படுத்தும் தேவை உள்ள தீர்வுகளுக்கு ஆதரவளித்தல். உயர் முக்கியத்துவம் உடைய பகுதியில் ஆய்வுகளைத் தீவிரப்படுத்துதல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுக் கழகம் (Science and Engineering Research Board - SERB), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். கொவிட் 19 மற்றும் தொடர்புடைய வைரல் மூச்சுத் தொற்றுகளுக்கு எதிரான தொற்றுநோயியல் ஆய்வுகள், வைரல் மூச்சுத் தொற்றுகளின் போது நோய் எதிர்ப்புச் செயல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி, வைரல்களுக்கு எதிரான புதிய மருந்துகள், தடுப்பு மருந்துகள் மற்றும் மலிவு விலையில் நோய் கண்டறிதல் தொடர்பான தேசிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் விதமாக, உயர் முக்கியத்துவப் பகுதியில் ஆய்வைத் தீவிரப்படுத்துதல் (IRPHA) திட்டத்தின் கீழ் அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுக் கழகம் போட்டியிடும் திறன் கொண்ட முன்மொழிவுகளை வரவேற்றிருந்தது. அதோடு, சுகாதாரப் பணியாளர்களின் தற்போதைய தேவைகளான (அ) எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய, மலிவு விலையிலான, சிறிய, நோய் கண்டுபிடிப்பு ஆய்வுப் பெட்டிகள் மற்றும் கருவிகள், (ஆ) கொவிட் 19 மூலக்கூறு இலக்குகளை கணித்து அடையாளம் கண்டு உறுதி செய்தல் மற்றும் (இ) முக்கிய கொவிட் 19 இலக்குகளுக்கு எதிராக மருந்து மறுபயன்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு கூடுதல் ஊட்டச்சத்து பொருள்களின் ஆய்வுக்கூட சோதனை/மருத்துவ அளவு பரிசோதனை ஆகியவை பற்றியும் பல்வேறு அறிவுத்துறைகளின் இணைப்புடன் நடத்தப்படும் ஆய்வுகளுக்கான முன் மொழிவுகளையும் இந்த அமைப்பு வரவேற்றுள்ளது. முதல் தொகுப்பில் உள்ள ஐந்து திட்டங்கள் அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுக் கழகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மேம்பாடு மற்றும் அமல்படுத்தக்கூடிய அடுத்தக்கட்ட தொழில்நுட்பங்களுக்கான ஆதரவாக அமையும். முதல் தொகுப்பில் உள்ளவற்றில் மூன்று திட்டங்கள், அதி முக்கிய விஷயமான தனிநபர் பாதுகாப்புக் கவசம், உயிரற்ற தளங்களின் மீதான ஆன்டி வைரல் மற்றும் வைரல்கலை முடக்கும் மேற்பரப்பு பூச்சு ஆகியவை தொடர்புடையதாகும்; நான்காவது திட்டம், கொவிட் 19 பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வளர்சிதை மாற்ற உயிரிக் குறிப்பான்களை அடையாளப்படுத்துதல் பற்றியதாகும். இதன் மூலம் சிகிச்சை தரவேண்டிய இலக்கின் அடையாளம் எளிதாகும்; கடைசி திட்டமானது, கொரோனா வைரஸ் தனது கிளைகோ புரதங்களை அதிகரித்துக்கொண்டு ஏற்பிப் பிணைப்புக் களத்தை அடையும் போது அதற்கு எதிராக நோய் எதிர்ப் பொருள்களை உடலில் உருவாக்குவதைப் பற்றியதாகும். தகவல் சார்ந்த அணுகுமுறை மூலம் வைரஸை கண்டுபிடித்து பின் தொடர்தலே அதன் கட்டுப்படுத்துதலில் முக்கிய நடவடிக்கை ஆகும். இந்த திசையில், கொவிட் 19 பரவலின் கணித மாதிரியை உருவாக்குதல்; புள்ளி விவர எந்திரக் கற்றல் கல்வி, உலகலாவிய தொற்றுப் பரவல் தகவல்களின் அடிப்படையில் கணிப்பு மற்றும் அனுமானம்; இந்தக் குறிப்பிட்ட தொற்றுநோய் மாதிரியை உருவாக்குவதற்கான நிரல் நெறிமுறைகள், தொற்றுநோயியல் மாதிரிகளுக்கான அளவைக்குரிய சமூக அறிவியல் பகுப்பாய்வு அணுகுமுறைகள் ஆகியவை குறித்தான குறுகிய கால ஆராய்ச்சித்திட்டங்களை பொறியியல் ஆய்வுக் கழகம் அறிவித்துள்ளது. தடுப்பு மற்றும் குணமாக்கும் நடவடிக்கைகள் இல்லாத பட்சத்தில், புதிய இடங்களில் நீடித்த பரவலுக்கான சாத்தியத்தை அளவிடுவதில், கணித மாதிரிகள் உதவலாம். தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகத்தால் வரவேற்கப்பட்ட ஆய்வு திட்டங்கள் கொவிட் 19 நோயாளிகளின் பாதுகாப்பு, மூச்சு விடுதலில் உள்ள சிரமத்தை வீட்டிலேயே சமாளித்தல் போன்ற தலையீடுகளுக்கானத் திட்டங்களை இந்திய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகம், வரவேற்றிருந்தது. குறைந்த விலை முகக்கவசங்கள், செலவு குறைந்த வெப்ப பரிசோதனைக் கருவிகள், பெரிய பகுதிகளை சுத்தப்படுத்த தொழில்நுட்பங்கள் மற்றும் மனிதத் தொடர்பில்லாத நுழைவுப்பகுதிகள், துரிதப் பரிசோதனைக்கருவிப் பெட்டிகள், பிராண வாயுக் கருவிகள் மற்றும் வென்டிலேட்டர்கள் ஆகிய தொழில்நுட்ப மற்றும் புதுமையான தீர்வுகளைத் தேவைக்கேற்ப உள்நாட்டிலேயே தயாரிக்க/இறக்குமதி செய்ய இந்த அவசியமான நேரத்தில் தொழிற்சாலைகள் உதவலாம். இயக்கக்கூடிய செயற்கை சுவாசக் கருவி அழுத்தம் மூலம் காற்றை செலுத்தும், மனிதர்கள் இயக்கக்கூடிய அமைப்பிலான, செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) அமைப்பை திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் உருவாக்கியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவின் வென்டிலேட்டர்களை அணுக முடியாத தீவிர நோயாளிகளுக்கு, இந்த தானியங்கி செயற்கை சுவாசக் கருவியை, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையோடு பயன்படுத்தலாம். விப்ரோ3டி, பெங்களூரு இதனைத் தயாரித்தளிக்கிறது. இந்தக் கருவி இப்போது மருத்துவமனைப் பரிசோதனைக்கு சென்றுள்ளது. இந்த அவசர கால வென்டிலேட்டரைத் தவிர, கொவிட் 19 நோயாளிகளின் பரிசோதனைக்காக குறைந்த விலையிலான செயற்கை அறிவு பொருந்திய எக்ஸ் கதிர் (ரே) கண்டுபிடிப்பான்களையும் தயாரிக்க இந்த நிறுவனம் முயற்சிகளை எடுத்து வருகிறது. நுண்ணுயிர் எதிர்ப்புப் பூச்சு ஒரே முயற்சியில் பிணி நீக்கக்கூடிய நுண்ணுயிர் எதிர்ப்புப் பூச்சை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான ஜவஹர்லால் நேரு மேம்படுத்தபட்ட அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், கொண்டுவந்துள்ளது. குளிர் காய்ச்சல் வைரஸ், எதிர்ப்பைத் தாங்கும் பாக்டீரியா நோய்க்கிருமி மற்றும் பூஞ்சைகள், கொரோனாவைரஸ் (சார்ஸ் கொவி 19) ஆகியவற்றை இந்த பூச்சு முற்றிலுமாக அழித்துவிடும். பூசப்பட்ட மேற்பரப்புகளின் மீது நுண்ணுயிர்களை இந்த பூச்சு மீண்டும் அனுமதிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொவிட் 19 பெரும் பரவலின் போது, தனிநபர் பாதுகாப்புக் கருவிகள், துணிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் உபகரணங்களைப் பாதுகாக்க இந்த பூச்சு உதவலாம். மக்களிடமிருந்து புதுமைகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள மற்றொரு தன்னாட்சி அமைப்பான தேசிய புதுமை அறக்கட்டளை, தனிப்பட்ட நபர்களும் உள்ளூர் சமூகங்களும், எந்த தொழில்நுட்பப் புலத்திலும் கண்டுபிடிக்கும் புதுமைகளுக்கு ஊக்கமளித்து ஆதரவளிக்கிறது. தன்னுடைய 'சவால் கொவிட் 19 போட்டி' மூலம், கீழ்கண்ட சிக்கல்களை சமாளிக்க படைப்பாற்றல் மிக்க மற்றும் புதுமையான யோசனைகளை மக்களிடம் இருந்து தேசிய புதுமை அறக்கட்டளை வரவேற்றுள்ளது: (அ) ஊட்டச்சத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் சத்தான உணவு; (ஆ) கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்தல்; (இ) கைகள், வீட்டு சாதனங்கள், வீடுகள், தேவைப்படும் பொது இடங்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்துதல், (ஈ) மக்களுக்கு, குறிப்பாக தனியாக வாழும் முதியவர்களுக்கு, அத்தியாவசியப் பொருள்களை விநியோகித்தல்; (உ) வீட்டிலுள்ளவர்களை பயனுள்ள வகையில் ஈடுபடுத்துதல்; (ஊ) சுகாதாரத் திறனைக் கட்டமைக்க தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள், துரித பரிசோதனைப் பெட்டிகள்; மற்றும் (எ) கொரோனாவுக்கு பிந்தைய செயல்பாடுகள், கொவிட் 19இன் போது வெவ்வேறு பிரிவு மக்களின் தேவைகளுக்காக, 'மனிதத் தொடர்பில்லா' கருவிகளை மேம்படுத்தும் மறுயோசனைகள் ஆகியவற்றிற்கு தேசிய புதுமை அறக்கட்டளை வரவேற்பளிக்கிறது. மக்கள் மத்தியில் அறிவியல் மனநிலையை உருவாக்குவதோடு, அவர்களை பெரும் தொற்று நோய்க்கு எதிரான அரசின் திட்டங்களில் தீவிரமாகப் பங்குபெற செய்யவும் இத்தகைய முன்னெடுப்புகள் ஊக்கமளிக்கும். அறிவியல், தொழில்நுட்ப முயற்சிகளை ஒருங்கிணைத்தல் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் மற்றும் தொழில் துறை ஆகியவற்றில் உள்ள தொழில்நுட்பத் திறனைப் பயன்படுத்தி கோவிட்-19 பரவலை கண்டறிவதற்காக “கோவிட்-19 அதிவிரைவுக் குழு”-வை இந்திய அரசு அமைத்துள்ளது. திறன் கண்டறியும் குழுவில், அறிவியல் தொழில்நுட்பத் துறை (DST), உயிரி தொழில்நுட்பத் துறை (DBT), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEIT), விஞ்ஞான மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக்கான கவுன்சில் (CSIR), அடல் புத்தாக்க இயக்கம் (AIM), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம் (MSME), இந்தியாவில் தொழில் தொடங்குதல் (Startup India) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர், மருத்துவப் பரிசோதனை, மருந்துகள், செயற்கை சுவாசக் கருவிகள் தயாரிப்பு, பாதுகாப்புக் கவசம், கிருமிநாசினி முறை ஆகிய துறைகளில் ஈடுபடும் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கண்டறிந்துள்ளனர். நோய் பரவலை தடுப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிந்துள்ளனர். அவற்றில், முகக்கவசம் மற்றும் பிற பாதுகாப்புக் கவசங்கள், கிருமிநாசினிகள், பரிசோதனைக்கு தேவையான கருவிகள், செயற்கை சுவாசம் மற்றும் ஆக்சிஜன் ஏற்றும் கருவிகள், செயற்கைப் புலனறிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான முறைகள் மூலம் வைரஸ் பரவலைக் கண்டறிவது, கண்காணிப்பது மற்றும் கட்டுப்படுத்தும் வகையில் தகவல் தரவுகளை ஏற்படுத்துவது என சிலவற்றைக் குறிப்பிடலாம். அறிவியல் தொழில்நுட்பத் துறையின் பிரிவான உயிரிதொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலும், உயிரி தொழில்நுட்பத் துறையும் கூட, கோவிட்-19 ஆராய்ச்சித் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளன. கோவிட்-19 வைரசைக் கட்டுப்படுத்துவதற்கு குறைந்த விலையில் பரிசோதனை செய்தல், தடுப்பு மருந்துகள், புதிய முறை சிகிச்சைகள், மருந்துகளை மீண்டும் பயன்படுத்துதல் அல்லது வேறு ஏதாவது முறைகள் குறித்த ஆலோசனைகளை தொழில் துறையினரும், கல்வியாளர்களும், தொழில்துறை - கல்வியாளர் கூட்டு முயற்சியாகவும் வழங்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விஞ்ஞான மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில், தனது புதிய ஆயிரமாவது ஆண்டுக்கான இந்திய தொழில்நுட்பத் தலைமை முயற்சியின் (New Millennium Indian Technology Leadership Initiative - NMITLI) மூலம், நோய்த் தடுப்புக்கான முன்மொழிவுகளை வழங்குமாறு தொழில் நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, குறைந்த விலையிலான செயற்கை சுவாசக்கருவிகள், புத்தாக்கப் பரிசோதனை முறைகள் (விரைவான, குறைந்த விலையிலான, அதிநவீன), புதிய மருந்துகள் அல்லது மீண்டும் பயன்படுத்தக் கூடிய மருந்துகள், புதிய தடுப்பு மருந்துகள் அல்லது மீண்டும் பயன்படுத்தக் கூடிய தடுப்பு மருந்துத் தயாரிப்பு, நோய் பரவும் வழியைக் கண்டறியும் தொழில்நுட்பங்கள் போன்ற உதவிகரமான கருவிகள் குறித்த திட்டங்களை தொழில் நிறுவனங்கள் அளிக்கலாம். பல புதுமையான, விரைவான மற்றும் பொருளாதாரத் தீர்வுகள் மற்ற நிறுவனங்களிடமிருந்தும் வந்துகொண்டிருக்கின்றன. உதாரணமாக, காகிதப்பட்டை அடிப்படையிலான சோதனை முறையை விஞ்ஞான மற்றும் அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியியல் கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த சோதனையின் மூலம், புதிய கொரோனா வைரசான சார்ஸ்-கோவ்-2-இன் ஆர்.என்.ஏ மூலக்கூறு அமைப்பை ஒரு மணிநேரத்தில் கண்டறிய முடியும். உலகளாவிய வகையில் பரவும் இந்த வைரஸின் உருவத் தோற்றம், வளர்ச்சி முறை, நம் நாட்டில் ஆங்காங்கே பரவும் கிருமிகளின் மரபுக்கூறுகளை வகைப்படுத்துதல் (sequencing of local strain), வைரசுக்கும் அது தொற்றிக் கொள்ளும் உடலுக்கும் இடையே நடைபெறும் செயல்களும் - எதிர்ச்செயல்களும், வீரியத்தன்மையோடு தொடர்புடைய வைரசின் மரபணு மாற்ற வடிவங்கள், வைரசின் பரிணாமவளர்ச்சி, தொற்று நோய்ப் பரவல் குறித்த தரவுகள் சேகரிப்பு போன்ற இந்த நோய் தொடர்பான அடிப்படை அறிவியல் மற்றும், சமுதாய அம்சங்கள் குறித்தும் பல ஆராய்ச்சிக் குழுக்கள் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன. இத்தகைய ஆய்வுகள், கோவிட்-19 வைரஸுக்கு எதிரான சிகிச்சை மருந்துகளைக் கண்டறியவும், தடுப்பு மருந்துகளை உருவாக்கவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. தனியார் ஆய்வகங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நோயறிதல் முறைகள், தடுப்பு மருந்துகள் மற்றும் புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கும் நடைமுறைகளை தனியார் துறையினரின் முயற்சிகளும், பங்களிப்பும் ஊக்குவித்து வருகின்றன. புனே-வை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மூலக்கூறு பரிசோதனை நிறுவனமான மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் (Mylab Discovery Solutions), கோவிட்-19 வைரஸை விரைவாக கண்டறிவதற்கான முதலாவது பரிசோதனைக் கருவியை இந்தியாவில் உருவாக்கியுள்ளது. இந்தப் பரிசோதனை கருவிக்கு இந்திய உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு, மத்திய மருந்து தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவை ஒப்புதல் அளித்துள்ளன. இந்தப் பரிசோதனை கருவி மூலம், இரண்டரை மணிநேரத்துக்குள் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும். Serum Institute of India மற்றும் AP Globale ஆகியவற்றுடன் இணைந்து செயல்படத் தொடங்கிய பிறகு மைலேப் நிறுவனத்தின் வாரத்துக்கு 1.5 இலட்சமாக இருந்த பரிசோதனைத்திறன், வாரத்திற்கு 20 இலட்சம் பரிசோதனைகள் என்ற அளவுக்கு இப்போது உயர்ந்துள்ளது. புனேயில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பூங்காவில் இருக்கும் (STP அல்லது Scitech Park), என்ற புதிய நிறுவனம் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் “நிதி பிரயாஸ்” திட்டத்தின் கீழ் “ScitechAiron” என்ற கருவியைத் தயாரித்து கோவிட்-19-க்கு எதிரான புத்தாக்கத் தீர்வைக் கொண்டு வந்துள்ளது. இந்த அயனியாக்குதல் இயந்திரம், எதிர்மறை மின்னேற்றம் கொண்ட சுமார் 10 கோடி அயனிகளை 8 நொடிகளில் உருவாக்கும்.. அறைகளுக்குள் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பை 99.7 சதவீத (அறையின் அளவைப் பொறுத்தது) அளவுக்கு குறைக்கும் திறன் பெற்றது இந்த இயந்திரம்.. தனிமைப்படுத்தப்படும் பகுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் கிருமிகளைப் போக்குவதற்கு இது பேருதவியாக இருக்கும்., தொழில்நுட்பத் தீர்வுகள், மருத்துவத் தீர்வுகளை கண்டறிவதோடு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அறிவியல் அடிப்படையிலான தொகுப்பை (IEC - information, educational and communication) தயார் செய்து, பெருமளவில் மக்களை சென்றடையச் செய்வதும் முக்கிய இலக்காக உள்ளது. இந்த முயற்சியின் மூலம், பொதுமக்களிடையே நிலவும் மூடநம்பிக்கை, அச்சஉணர்வு மற்றும் உளவியல் ரீதியான அழுத்தங்களைப் போக்க முடியும். இதன்படி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான “கொரோனா கவாச்” (Corona Kavach) செயலி அரசின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்ட நபருக்கு அருகே செல்லும்போது, எச்சரிக்கை விடுக்கும் வகையிலான செயலிகளும் உள்ளன. இருந்தாலும், இதுபோன்ற செயலிகள், மக்கள் மத்தியில் இதுவரை போதிய அளவில் பரவவில்லை. போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்த முயற்சிகள் கோவிட்-19 வைரஸுக்கு எதிராக போரிடுவதில் இந்திய சுகாதாரம் மற்றும் அறிவியல் துறையினருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க இந்திய அரசு முழுமையாக உறுதி பூண்டுள்ளது. சுகாதாரத்துறை, அறிவியல் துறையினர், ஆய்வாளர்கள், தனியார் மற்றும் பொது ஆய்வகங்கள், புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள், இன்குபேட்டர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழில் துறையினருக்கு முழு ஆதரவு அளிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசின் அறிவியல் அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. தேசிய அளவிலான திட்டங்களை, சர்வதேசத் திட்டங்களுடன் இணைப்பதற்கான முயற்சிகளை நிதியுதவி அளிக்கும் அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இதன்மூலம், நாடுகளுக்கு இடையே நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளவும், இரட்டிப்பு முறையைத் தவிர்க்கவும், எந்த நேரத்தில், எங்கு தேவைப்படுகிறதோ அதற்கேற்ப ஒட்டுமொத்த செயல்பாடுகளை வேகப்படுத்தவும் முடியும். கோவிட்-19 தொடர்பான அரசின் அதிகாரமிக்க குழு வெளியிட்ட குறிப்பு மூலம், கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து ரத்த மாதிரி, மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சளி மாதிரி ஆகியவற்றை சேகரிப்பதற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கு மார்ச் 21-இல் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அக அளவில் கோவிட்-19 பரவும் விதம், பரிசோதனைக் கருவிகளை உருவாக்குவது, தடுப்பு மருந்துகள் போன்ற பல்வேறு ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. இதற்கும் மேலாக, அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில், உயிரி தொழில்நுட்பத் துறை, அறிவியல் தொழில்நுட்பத் துறை, அணுசக்தி துறை ஆகியவற்றின் கீழ் உள்ள ஆய்வகங்கள் உள்பட தேசிய அளவிலான அனைத்து ஆய்வகங்களும், கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. நோய் தாக்கியுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் பணிகளையும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிவதையும் வேகப்படுத்த இது உதவும். கோவிட்-19 தொற்று சவால்களை எதிர்கொள்வதற்காக 50 வகையான புத்தாக்கங்கள் மற்றும் புதிய நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கவும் மதிப்பீடு செய்யவும், 56 கோடி ரூபாய் செலவில் “கோவிட்-19 சுகாதார நெருக்கடிக்கு எதிரான போரை விரைவுபடுத்தும் மையத்தை” (CAWACH) அறிவியல் தொழில்நுட்பத் துறை ஏப்ரல் 3-ஆம் தேதி அமைத்துள்ளது. மும்பை ஐஐடி-யில் உள்ள தொழில்நுட்ப வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பான “புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோருக்கான சமூகம்” மையத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் செயல்படும் CAWACH அமைப்பு, நாடு தழுவிய அளவில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதோடு, வர்த்தகமயமாக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு பல்வேறு நிலைகளிலும் தேவையான உதவிகளை வழங்கும். வைரஸ் தொற்றிலிருந்து நாடு விரைவில் மீண்டு வருவதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் இந்த முயற்சிகள் உதவும் என்று இந்திய அரசு உறுதியாக நம்புகிறது. *****

(Release ID: 1611943) Visitor Counter : 8786